டெல்லி எல்லையில் முள் கம்பிகள், பேரிகாடுகள்.. விவசாயிகளை தடுக்க பயன்படுத்திய அதே பேட்டன்!

  • டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி (CJP), AISA, SFI, DYFI போன்ற அமைப்புகள் இன்று டெல்லியில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த இருக்கின்றன. எனவே போராட்டக்காரர்கள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க சாலையில் டயர்களை பஞ்சராக்கும் முள் பட்டைகளையும், பேரிகார்டுகளையும் போலீஸ் போட்டிருக்கிறது. இதை பார்க்கும்போது விவசாயிகளின் போராட்டம்தான் நினைவுக்கு வருவதாக பலரும் கூறுகின்றனர்.

    Advertisement

    கடந்த 2021ம் ஆண்டு வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டங்களை நடத்தினர். ஆனால் மத்திய அரசு அசைந்து கொடுக்கவில்லை. எனவே நாடு முழுவதும் இருந்து விவசாயிகளை டெல்லிக்கு வருமாறு போராடிய விவசாயிகள் அழைத்தனர். அதன் பேரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் குவிந்தனர்.

    Advertisement

    இப்படி வரும் விவசாயிகளை தடுக்க பெரிய பெரிய பேரிகார்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. முள்வேலிகள், தடுப்பு கம்பிகள், டயர்களை பஞ்சராக்கும் முள் பட்டைகள் ஆகியவற்றை போலீசார் அமைத்திருந்தனர். ஆனால், விவசாயிகள் அனைத்தையும் உடைத்துக்கொண்டு டெல்லிக்கு வந்து சேர்ந்தனர். அதன் பின்னர் அவர்கள் நடத்திய போராட்டம் உக்கிரமாக இருந்தது. கடைசியாக வேறு வழியில்லாமல் மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற்றது.

    அதேபோலத்தான் இப்போதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை தடுக்க டெல்லி போலீஸ் தடுப்புகளை அமைத்திருப்பதாக விமர்சனங்கள் கிளம்பியிருக்கின்றன. போராட்டக்காரர்கள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க மோகன் எஸ்டேட் போன்ற முக்கிய சாலைகளில் வாகனங்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முள் பட்டைகள் மற்றும் பல அடுக்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

    Advertisement

    டெல்லி காவல்துறை மற்றும் மத்திய பாதுகாப்பு படைகளை சேர்ந்த சுமார் 40,000க்கும் மேற்பட்ட வீரர்கள் டெல்லி எல்லைகளிலும் ஜந்தர் மந்தர் மற்றும் நாடாளுமன்ற பகுதிகளிலும் குவிக்கப்பட்டுள்ளனர். BNSS பிரிவு 163ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க ஜனபத், ராஜீவ் சவுக், சென்ட்ரல் செக்ரட்டேரியட் உள்ளிட்ட டெல்லியின் 45 முக்கிய மெட்ரோ நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்திற்கு வரும் பல ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    அதேபோல போராட்டத்திற்கு விமானம் மூலம் வரும் போராட்டக்காரர்கள், விமான நிலையத்திலேயே வைத்து தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    English Summary

    Delhi: To prevent protesters from entering Delhi, the police have placed barricades and tire-puncturing spike strips on the roads. Many say that seeing this reminds them of the farmers' protest.