பைக் டாக்ஸிக்கு சீக்கிரம் பெர்மிஷன் கொடுங்க.. மாநில அரசிடம் கேட்டும் மத்திய அமைச்சர்!

  • டெல்லி: தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்னும் ராபிடோ, ஊபர், ஓலா போன்ற பைக் டாக்ஸிக்கு முழுமையான அனுமதி வழங்கப்படவில்லை. இப்படி இருக்கையில், பைக் டாக்ஸிக்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    போக்குவரத்து என்பது மாநிலப் பட்டியலின் கீழ் வரும் என்பதால், சில மாநிலங்கள் இதற்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை. எனவே தனியார் இருசக்கர வாகன உரிமையாளர்கள் பைக் டாக்சி ஓட்டுவதற்கு அந்தந்த மாநில அரசுகள் விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் 8 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

    Advertisement

    தமிழகத்தை பொறுத்தவரை, பைக் டாக்ஸிகளை முறைப்படுத்துவது மற்றும் அதற்கான உரிமங்களை வழங்குவது குறித்து மாநில அரசு இன்னும் இறுதியான கொள்கை முடிவை எடுக்கவில்லை. மோட்டார் வாகன சட்டப்படி சொந்த உபயோகத்திற்கான வெள்ளை நிற பதிவெண் கொண்ட பைக்கை வணிக ரீதியான பயணியர் போக்குவரத்துக்கு பயன்படுத்துவது சட்டவிரோதமானது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முறையான கொள்கை வகுக்கப்படும் வரை.. தமிழ்நாட்டில் பைக் டாக்ஸி ஓட்டுவது விதிகளுக்கு புறம்பானது. மீறி ஓட்டினால் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

    வெள்ளை நம்பர் பிளேட் கொண்ட வாகனங்களை, கமர்ஷியலாக பயன்படுத்த கூடாது என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் சாலை வரிதான். சொந்தமாக கார் வாங்குகிறோம் எனில் ஒருமுறை சாலை வரி கட்டினால் போதும். ஆனால், மஞ்சள் நிற நம்பர் பிளேட் கொண்ட வாகனம் வாங்குகிறோம் எனில், குறிப்பிட்ட கால இடைவெளியில் அதிக சாலை வரி கட்ட வேண்டும்.

    Advertisement

    இரண்டாவது காரணம், விபத்து இன்சூரன்ஸ்தான். வெள்ளை நம்பர் பிளேட் கொண்ட காரில் பயணித்து விபத்து ஏற்பட்டால்.. விபத்தில் சிக்கியவர்கள் கார் ஓனர் மற்றும் குடும்பத்தினராக இருந்தால் மட்டுமே இன்சூரன்ஸ் கவர் ஆகும். வேறு ஆட்கள் இருந்தால்.. இன்சூரன்ஸ் நிறுவனம் கையை விரித்துவிடும். இதுவே மஞ்சள் நம்பர் பிளேட் கொண்ட வாகனம் விபத்தில் சிக்கினால்.. அதில் யார் பயணித்திருந்தாலும் அவர்களுக்கு இன்சூரன்ஸ் கவர் ஆகும்.

    இப்போ சொல்லுங்கள்.. வெள்ளை நிற நம்பர் பிளேட் கொண்ட பைக் டாக்ஸியில் பயணித்து விபத்து ஏற்பட்டால்.. நிவாரணம் பெற முடியுமா? முடியாதா?

    Advertisement

    இருப்பினும் ஓலா, ஊபர், ராபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள் சில காப்பீடு நிறுவனங்களுடன் இதற்காக தனியாக ஒப்பந்தம் செய்திருக்கின்றன. விபத்து ஏற்பட்டால் ரூ.5-10 லட்சம் வரை கிடைக்கும். ஆனாலும், விபத்தில் சிக்கியது வெள்ளை நிற நம்பர் பிளேட் கொண்ட பைக்! எனவே நாங்கள் இழப்பீடு தர மாட்டோம் என்று இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காதில் பூ சுற்றவும் வாய்ப்பு இருக்கிறது.

    இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்த நீதிமன்றம்.. முதலில் காப்பீட்டு தொகையை கொடுத்துவிடு.. பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது ரெய்டரிடமிருந்து பணத்தை வசூலித்துக்கொள் என்று சொல்லிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    சூழல்கள் இப்படி இருக்கையில், தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு அனுமதி வழங்கப்படுமா என்பது கேள்வியாக இருக்கிறது.

    English Summary

    Bike taxis: Full approval for bike taxi services like Rapido, Uber, and Ola has not yet been granted in several states, including Tamil Nadu and Karnataka. Against this backdrop, Union Minister Nitin Gadkari has urged that such services be granted approval quickly.