டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய அமைப்பில் பெரிய அளவிலான மாற்றங்களை அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபீன் அறிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி மற்றும் மூத்த தலைவர் ராம் மாதவ் ஆகியோர் மீண்டும் கட்சியின் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளுக்குத் திரும்பியுள்ளனர்.
பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றி வந்த அமித் மால்வியா அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களுடன் இளம் முகங்களையும் இணைத்து இந்த புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் தோல்வியடைந்த பிறகு தீவிர கட்சி நிர்வாகத்தில் இருந்து சற்று ஒதுங்கியிருந்த ஸ்மிருதி இராணி, தற்போது பாஜகவின் தேசியப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் கட்சியின் மிக முக்கிய முடிவெடுக்கும் உயர்மட்டக் குழுவுக்கு அவர் மீண்டும் வந்துள்ளார். இதேபோல், முன்பு பாஜகவின் தேசியப் பொதுச் செயலாளராகப் பணியாற்றி வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் கட்சியின் வெற்றிக்காகத் தீவிரமாக உழைத்த மூத்த தலைவர் ராம் மாதவ், தற்போது பாஜகவின் தேசியத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவில் மொத்தம் 13 தேசியத் துணைத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் வசுந்தரா ராஜே சிந்தியா, ராம் மாதவ், பைஜயந்த் ஜெய் பாண்டா, டி.புரந்தேஸ்வரி, ரேகா வர்மா, பாரதி பவார் மற்றும் மன்பிரீத் சிங் பாதல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். தேசியப் பொதுச் செயலாளர்களாக வினோத் தாவ்டே, சுனில் பன்சால், பிப்லப் குமார் தேப், ஸ்மிருதி இரானி, சதீஷ் பூனியா, கஜேந்திர படேல், ஹரிஷ் துவிவேதி மற்றும் சஞ்சய் பாட்டியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய அமைப்புப் பொதுச் செயலாளராக பி.எல். சந்தோஷ் தொடர்ந்து நீடிக்கிறார். அவருக்கு உதவியாக தேசிய இணை அமைப்புப் பொதுச் செயலாளர்களாக சிவபிரகாஷ் மற்றும் சௌதான் சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசியச் செயலாளர்கள் பட்டியலில் கே.கவிதா படிதார், கே.சுரேந்திரன், போலா சிங், பிரதீப் வர்மா, பாங்னான் கொன்யாக், அனில் அந்தோணி, சந்தீப் பதக் மற்றும் மனோஜ் திக்கா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். கட்சியின் தேசியப் பொருளாளராக பியூஷ் கோயல் மற்றும் மத்திய அலுவலகப் பொறுப்பாளராக தருண் சுக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றி வந்த அமித் மால்வியா அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சத்தீஸ்கரைச் சேர்ந்த தீபக் மஸ்கே புதிய தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். அதே வேளையில், ஊடகப் பிரிவு பொறுப்பாளராக அனில் பலூனி தொடர்ந்து நீடிக்கிறார். பாஜகவின் வரலாற்றிலேயே இளம் வயதில் (46 வயது) தேசியத் தலைவராகப் பொறுப்பேற்ற நிதின் நபீன் கட்சிப் பணிகளை வேகப்படுத்த இந்த மாற்றத்தைச் செய்துள்ளார். 2027-ஆம் ஆண்டில் உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், குஜராத், இமாச்சலப் பிரதேசம் மற்றும் கோவா போன்ற முக்கிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் இந்த மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய நீட் விவகாரப் போராட்டங்கள் மற்றும் அரசியல் சவால்களுக்கு மத்தியில், கட்சியை அடிமட்ட அளவில் வலுப்படுத்தவும் அடுத்தகட்ட தேர்தல் களங்களை எதிர்கொள்ளவும் இந்த புதிய அணி தீவிரமாகச் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஸ்மிருதி இரானி மற்றும் ராம் மாதவ் கம்பேக்
அனுபவமும் இளமையும் கலந்த புதிய அணி
அமித் மால்வியா நீக்கம் - ஐடி விங்கில் மாற்றம்
2027 சட்டமன்றத் தேர்தல்களுக்கான வியூகம்