டெல்லி: டெல்லி ராம்லீலா மைதானத்தில் நவம்பர் 1ம் தேதி எதிர்க்கட்சிகள் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், அதை எதிர்கொள்வதற்கான அரசியல் வியூகங்களை வகுக்க பாஜக தீவிரமாகத் தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை முக்கிய உயர்நிலை கூட்டம் நடைபெறவுள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம் இப்போது பெரிதாக வெடித்துள்ளது. ஏற்கனவே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் இது தொடர்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதேபோல எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியும் இதை கையில் எடுத்து போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி நவம்பர் 1ம் தேதி டெல்லி ராம் லீலா மைதானத்தில் பேரணியை அறிவித்துள்ளது.
இதற்கிடையே எதிர்க்கட்சிகளை சமாளிக்கவும் இதற்கு பதிலடி கொடுக்கவும் பாஜக தீவிரமாகத் தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை முக்கிய உயர்நிலை கூட்டம் நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சிகளின் பேரணியால் அரசியல் ரீதியாக ஏற்படக்கூடிய தாக்கங்களை சமாளிப்பது மற்றும் ஒருங்கிணைந்த பதிலடி குறித்து இது ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியின் தேசிய அளவிலான முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் நிதின் நபின் ஆகியோரும் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இரு முக்கியத் தலைவர்களும் கலந்து கொண்டால், எதிர்க்கட்சிகளின் பேரணியை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனைகளுக்கு மேலும் முக்கியத்துவம் பெறும். பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. தேசிய பொது செயலாளர் சுனில் பன்சாலும் இதில் பங்கேற்க உள்ளார். மேலும், கட்சியின் உயர்மட்ட தலைவர்களும் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 1ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் பேரணி, தேசிய அரசியல் சூழலில் கவனம் பெற்றுள்ளது. இதை சமாளிக்க பாஜக தன்னால் முடிந்தவரை அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது. எதிர்க்கட்சிகள் முன்வைக்கக்கூடிய அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு எப்படி பதிலடி கொடுப்பது, கட்சியின் தலைவர்கள் மாறி மாறி பேசாமல் ஒரே மாதிரி பதில் தருவதை உறுதிப்படுத்துவது போன்ற அம்சங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு தனித்தனியாகப் பதிலளிப்பதற்குப் பதிலாக.. கட்சியின் சார்பில் ஒரே பதிலடியை கொடுக்க பாஜக முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இருப்பினும், இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ள குறிப்பிட்ட விவகாரங்கள் மற்றும் இறுதியாக எடுக்கப்படவுள்ள முடிவுகள் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. முன்பெல்லாம் எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கும் போராட்டங்கள் செய்தியாக கூட மாறாது. ஆனால், இப்போது எதிர்க்கட்சிகளின் பேரணியை சமாளிப்பது குறித்து பாஜக தனது உயர்மட்ட கூட்டத்தையே கூட்டியிருக்கிறது. இது தேசிய அரசியலில் எதிர்க்கட்சிகளின் வாய்ப் அதிகரித்துள்ளதையே காட்டுகிறது. அமித் ஷா மற்றும் நிதின் நபின் ஆகியோர் இணைந்து எதிர்க்கட்சிகளை காலி செய்ய வியூகம் வகுப்பார்கள் என்றே தெரிகிறது.பாஜக ஆலோசனை
முக்கிய தலைவர்கள்
எதிர்க்கட்சிகளுக்கு எதிராக வியூகம்
எதிர்க்கட்சி வாய்ஸ்