பஞ்சாப் தேர்தலுக்காக பாஜகவின் பிளான்.. சத்யேந்திர ஜெயின் கைதுக்கு எதிராக கொந்தளித்த ஆம் ஆத்மி

  • டெல்லி: டெல்லியில் முறைகேடு மற்றும் ஊழல் புகாரில், ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், முன்னாள் டெல்லி அமைச்சருமான சத்யேந்தர் குமார் ஜெயின் உள்பட 6 பேர் ஊழல் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது. சத்யேந்திர ஜெயின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆம் ஆத்மி, "பஞ்சாப் தேர்தலுக்காக பாஜக போட்ட பிளான் என கூறியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், "பாஜகவின் பொய் மீண்டும் ஒரு முறை நாட்டு மக்கள் முன்னால் அம்பலப்படும்" என்று கூறியுள்ளார்.

    Advertisement

    ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், டெல்லி முன்னாள் நீர்வளத்துறை அமைச்சருமான சத்யேந்திர ஜெயினை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே பண முறைகேடு வழக்கில் 18 மாதங்கள் சிறையில் இருந்த சத்யேந்திர ஜெயின், பிறகு ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.

    Advertisement

    சத்யேந்திர ஜெயின் கைது

    டெல்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜக ஆட்சியை பிடித்தது. இந்த சூழலில்தான், டெண்டர்கள் நடைமுறைகளில் முறைகேடு செய்து இருப்பதாக கூறி சத்யேந்திர ஜெயினை போலீசார் கைது செய்துள்ளனர். ஆம் ஆத்மி மூத்த தலைவரான சத்யேந்திர ஜெயின் கைது டெல்லி அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இது குறித்து டெல்லி லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:-

    ஆம் ஆத்மியை கண்டு பாஜக அச்சப்படுகிறது

    "டெல்லி ஜல்போர்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்துவது தொடர்பான டெண்டர்களில் ஊழல், கிரிமினல் சதி உள்ளிட்டவற்றில் ஈடுபட்டதாக சத்யேந்திர ஜெயின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ச்சியாக விசாரணைக்கு பிறகு சத்யேந்திர ஜெயின் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டதில் அரசியல் இருப்பதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "ஆம் ஆத்மியை கண்டு பாஜக அச்சப்படுகிறது. ஜல் போர்டு டெண்டர் வெளியாகும் போது சத்யேந்திர ஜெயின் ஜெயிலில் இருந்தார். ஜெயிலில் இருப்பவர் எப்படி இதற்கு பொறுப்பாவார். சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்படுவதற்கு முதன்மையான காரணமே, பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி இணை பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டதுதான்.

    அரவிந்த் கெஜ்ரிவால் கோபம்

    ஏனெனில், விரைவில் பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது" என்று தெரிவித்துள்ளது. பாஜகவின் உத்தரவின் பேரில் இந்த கைது நடைபெற்று இருப்பதாக ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் குற்றம் சாட்டியுள்ளர். அவர் கூறுகையில், "சத்யேந்திர ஜெயின் கைது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:- பாஜகவின் உத்தரவின் பேரில் சத்யேந்திர ஜெயின் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    Advertisement

    இதற்கு முன்பாக அவர் மீது போடப்பட்ட வழக்கும் இட்டுக்கட்டப்பட்டது. இந்த வழக்கும் போலியானது என்று நிரூபிப்போம். பாஜகவின் சர்வாதிகாரம் எவ்வளவு காலம் நீடிக்கும்? யாரை கைது செய்ய நினைக்கிறார்களோ அவர்களை கைது செய்து சிறையில் தள்ளுகிறார்கள். பாஜகவின் பொய் மீண்டும் ஒரு முறை நாட்டு மக்கள் முன்னால் அம்பலப்படும். ஆனால் சிறையில் அவர் கழிக்கும் காலத்துக்கும் மன வேதனையையும் யார் ஈடுசெய்வார்கள்?" என்று கூறினார்.

    ஜாமீனில் வெளிவந்த சத்யேந்திர ஜெயின்

    டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி காலத்தின் போது, 2015 முதல் 2023 வரை அமைச்சராக இருந்தார். பல்வேறு துறைகளை தன்வசம் வைத்து இருந்த சத்யேந்திர ஜெயின், பண முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். 2022 ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்ட சத்யேந்திர ஜெயின் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    Advertisement

    ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த சத்யேந்திர ஜெயினுக்கு மருத்துவ காரணங்களுக்காக 2023 அம் ஆண்டு மே மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஆறுமாத காலம் இடைக்கால ஜாமீன் பெற்ற அவருக்கு பிறகு வழக்கமான ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து அக்டோபர் மாதம் 2024 ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    English Summary

    BJP plan: The Anti-Corruption Branch has arrested six individuals, including senior Aam Aadmi Party leader and former Delhi Minister Satyendar Kumar Jain, in connection with allegations of irregularities and corruption in Delhi. Condemning the arrest, the Aam Aadmi Party has termed it a plan hatched by the BJP for the Punjab elections.