ஒன்னு கூடிட்டாங்கயா.. 7 ஆண்டுக்கு பின் டெல்லி வரும் ஜி ஜின்பிங்.. பிரிக்ஸ் மாநாட்டால் கலங்கும் டிரம்ப்

  • டெல்லி: டெல்லியில் இன்று பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18 வது உச்சி மாநாடு தொடங்கி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக 7 ஆண்டுகளுக்கு பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா புறப்பட்டுள்ளார். சற்று நேரத்தில் அவர் டெல்லியில் தரையிறங்கும் நிலையில் இது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. இருப்பினும் கடந்த 2019 ம் ஆண்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வந்தார். அப்போது தமிழகத்தின் சென்னை அருகே மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும், ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேசினர்.

    Advertisement

    அதன்பிறகு இருநாடுகள் இடையேயான பிரச்சனையை தீவிரமானது. கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இருநாடுகளின் ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலால் இருநாடுகளின் தலைவர்கள் இடையேயான சந்திப்பு, பேச்சுவார்த்தை தடைப்பட்டது.

    ஆனால் தற்போது இந்தியா - சீனா இடையேயான உறவு மெல்ல மெல்ல மேம்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது இருவரும் சந்தித்து எல்லை மோதல்களுக்கு தீர்வு காண்பது பற்றி விவாதித்தனர். அதுமட்டுமின்றி இருநாடுகளின் உறவை மேம்படுத்துவது பற்றி ஆலோசித்தனர். இந்த சந்திப்பு பாசிட்டிவாக முடிவடைந்தது.

    Advertisement

    இந்த சந்திப்பை தொடர்ந்து இந்தியா - சீனா இடையே நிறுத்தப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் தான் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென்ஆப்பிரிக்கா உள்பட 11 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த ஆண்டு பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை வகிக்கும் நிலையில் 18 வது பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் இன்று தொடங்கி நாளை வரை நடைபெற உள்ளது.

    இந்த மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு, பிரதமர் மோடி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று ஜி ஜின்பிங் இன்று டெல்லி வருகிறார். இன்று காலையில் ஜி ஜின்பிங் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு விமானத்தில் புறப்பட்ட நிலையில் சற்று நேரத்தில் அவர் டெல்லி வருகை தர உள்ளார்.

    Advertisement

    இந்தியா - சீனாவின் இந்த நெருக்கம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு புதிய தலைவலியாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சீனாவும், அமெரிக்காவுக்கும் இடையே தொழில் உள்பட பல விஷயங்களில் போட்டி உள்ளது. யார் 'சூப்பர் பவர்' என்பதில் இருநாடுகளும் தொடர்ந்து மோதி வருகின்றன. இப்படியான சூழலில் இந்தியா, அமெரிக்காவின் பக்கம் இருப்பது சீனாவுக்கு பாதகமாக பார்க்கப்பட்டது. அதேவேளையில் அமெரிக்காவுக்கு சாதகமாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்தியா - சீனா நாடுகள் நெருக்கமாக செயல்பட தொடங்கி உள்ளன. இது அமெரிக்காவுக்கு பிரச்சனையாக மாறி உள்ளது.

    அதுமட்டுமின்றி பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பல நாடுகளும் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளன. ரஷ்யா, சீனா, ஈரான், தென்ஆப்பிரிக்கா, பிரேசில் உள்பட பல நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. இது போதாது என்று கூடுதல் வரி விதிப்பு உள்ளிட்டவற்றால் நம்மையும் டிரம்ப் சீண்டி உள்ளார். இப்படி பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் பலவும் அமெரிக்கா மீது கோபமாக உள்ளன.

    Advertisement

    இதனால் அமெரிக்காவின் டாலரின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து தனி கரன்சியை கொண்டு வரலாம் என்று நீண்டகாலமாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் அது சாத்தியமாகவில்லை. இந்த பிரிக்ஸ் கூட்டமைப்பிலும் அதுபற்றி தலைவர்கள் விவாதிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி ஏற்கனவே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியான் டெல்லி வந்துள்ள நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் என்ட்ரி கொடுக்கிறார் என்பதால் அமெரிக்கா இந்த உச்சி மாநாட்டை உன்னிப்பாக கவனிக்க தொடங்கி உள்ளது.

    English Summary

    The 18th BRICS summit is set to begin in Delhi today. Chinese President Xi Jinping has departed for India to participate in the summit after a gap of seven years. His imminent arrival in Delhi has caused unease for US President Donald Trump.