அசைவத்திற்கு நோ.. உலக தலைவர்களுக்கு சைவ உணவு மட்டும்! பிரிக்ஸ் மாநாட்டு டின்னரால் வெடித்த சர்ச்சை!

  • டெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டு இரவு விருந்தில் அசைவ உணவுகள் இடம்பெறாதது அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளது. சர்வதேச நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த விருந்தில் முழுவதுமாக சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்பட்டது. இது இந்தியாவின் உணவு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இல்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளனர்.

    Advertisement

    உலகின் முக்கிய அமைப்புகளில் ஒன்றாக மாறியிருக்கும் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு இந்த முறை இந்தியாவில் நடைபெறுகிறது. டெல்லியில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பிரிக்ஸ் அமைப்பின் உச்ச தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த நியூ டெல்லி பிரகடனம் ஏற்று கொள்ளப்பட்டது.

    Advertisement

    சைவ உணவுகள்

    இதற்கிடையே இந்த மாநாட்டில் கலந்து கொண்ட உலக தலைவர்களுக்கு நேற்றிரவு பிரதமர் மோடி விருந்தளித்தார். இருப்பினும், இந்த விருந்தில் முழுமையாக சைவ உணவுகள் மட்டுமே இருந்தன. அசைவ உணவுகள் எதுவும் இல்லை. இது தான் இப்போது அரசியல் சர்ச்சையாக வெடித்துள்ளது. அதாவது இந்தியாவின் உணவு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அசைவ உணவுகளும் இடம்பெற்றிருக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

    ராகுல் காந்தி தாக்கு

    இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறிய நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், "இந்தியர்களில் 80% பேர் அசைவ உணவு சாப்பிடுகிறார்கள். இந்திய அசைவ உணவு மிகவும் சுவையானது. அதேபோல எனது சகோதரியின் சோலே பத்தூரேவும் சுவையானதுதான்" என பதிவிட்டு, பிரியங்கா காந்தி செய்ததாக சோலே பத்தூரே போட்டோவையும் பகிர்ந்திருந்தார்.

    Advertisement

    பிரிக்ஸ் போன்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு இந்தியாவின் பல்வேறு உணவு கலாச்சாரங்களை அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த விவாதம். இந்தியா என்பது பல்வேறு உணவு பழக்கவழக்கங்களைக் கொண்ட நாடு. இந்த நிலையில், சர்வதேச தலைவர்கள் பங்கேற்கும் விருந்தில் முழுமையாக சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்பட்டிருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

    எதிர்க்கட்சிகள்

    ராகுல் காந்தியை தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் இந்த விவகாரம் குறித்து விமர்சனங்களை முன்வைத்தனர். காங்கிரஸ் தலைவர் பவன் கேரா உள்ளிட்டோர், பாஜக தான் முன்னிறுத்தும் உணவுகளை சர்வதேச விருந்தினர்கள் மீதும் திணிப்பதாக குற்றம்சாட்டினர்.

    Advertisement

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவும் விருந்து மெனு குறித்து கேள்வி எழுப்பினார். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள தலைவர்களுக்கு இந்தியாவின் புகழ்பெற்ற அசைவ உணவுகளை சுவைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அசைவ உணவுகளை முழுமையாக தவிர்த்தது மிகவும் பிரச்சினைக்குரியது என்றும் எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

    மத்திய அரசு பதிலடி

    இதற்கிடையே எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பாஜக தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. வெளிநாட்டு தலைவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை கூட காங்கிரஸ் அரசியலாக்குவது சங்கடமாக இருப்பதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சித்தார். இந்தியாவின் சைவ உணவு வகைகளில் இருக்கும் பல்வேறு சுவைகள், தனித்துவம் மற்றும் சமையல் பாரம்பரியம் ஆகியவை இந்த நாட்டிற்கே பெருமை என்றும் பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    Advertisement

    மேலும், சர்வதேச பிரதிநிதிகள் இந்தியாவின் சைவ உணவுகளை ரசித்ததாகவும், அவை நிலைத்தன்மை மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான பிரிக்ஸ் மாநாட்டின் நோக்கங்களுடன் பொருந்தி போவதாகவும் அரசு தரப்பு கூறியுள்ளது.

    English Summary

    All-vegetarian dinner hosted for BRICS leaders and delegates in Delhi has sparked a political controversy(பிரிக்ஸ் உணவுகளால் வெடித்த சர்ச்சை): BRICS Summit Dinner Controversy latest news in tamil.