இந்தியாவுக்கு பெரிய சிக்கல்.. BRICS மாநாடு கொண்டு வரும் புதிய தலைவலி! உற்று நோக்கும் டிரம்ப்

  • டெல்லி: இன்று டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாடு சர்வதேச அளவில் பெரும் கவனம் ஈர்த்திருக்கிறது. அமெரிக்க எதிர்ப்பு நாடுகளும், அமெரிக்க ஆதரவு நாடுகளும் இந்த அமைப்பில் இருப்பதால், இந்தியா இரண்டு பிரிவுகளையும் எப்படி சமாளிக்கப்போகிறது என்பது கேள்வியாக இருக்கிறது.

    Advertisement

    கடந்த 2023ம் ஆண்டு ஜி20 மாநாடு டெல்லியில் நடந்தது. அது உக்ரைன் போர் உச்சத்தில் இருந்த காலம். வழக்கமாக மாநாட்டின் இறுதியில் பிரகடனம் வெளியிடப்படும். பிரச்சனை என்னவெனில், இதில் ரஷ்யா குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது.

    Advertisement

    இதனால் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் இந்த பிரகடனத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. 20 நாடுகளும் ஒப்புதல் கொடுத்தால்தான் பிரகடனம் வெளியாகும். அப்படியெனில் ஜி20 மாநாட்டின் வரலாற்றிலேயே பிரகடனம் வெளியிடப்படாத மாநாடு என்கிற பெயர் வந்துவிடும். டெல்லியில் நடக்கும் மாநாட்டிற்கு இப்படியான பெயர் வந்தால் அது இந்தியாவுக்குதான் அவப்பெயர். எனவே, இந்தியா ஒவ்வொரு நாட்டு பிரதிநிதிகளிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப பிரகடனத்தை திருத்தி, கடைசியில் பிரகடனம் வெளியானது.

    இந்த அளவுக்கு பெரிய பிரச்சனையாக ஜி20 மாநாடு இருந்தது. இப்போது இதை விட பெரிய பிரச்சனையாக BRICS மாநாடு உருவெடுத்திருக்கிறது. அதாவது அமெரிக்காவுக்கு எதிராக சண்டை செய்யும் ஈரானும் இந்த அமைப்பில் இருக்கிறது. அதே நேரம் அமெரிக்க ஆதரவு நிலைபாடு கொண்ட சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகமும் இந்த மாநாட்டில் பங்கேற்றிருக்கிறது. இவர்களை இணைத்து கூட்டு பிரகடனம் வெளியிடுவது தலைவலி பிடித்த வேலை.

    Advertisement

    BRICS அமைப்பில் அமெரிக்காவில் இல்லை என்றாலும், டிரம்ப் இந்த மாநாட்டில் நேரடியாக பங்கேற்காவிட்டாலும்.. அவரது நிழல் இந்த மாநாட்டின் மீது படியப்போவது உறுதி. அவர் பிரிக்ஸ் அமைப்பை எதிரியாகவே பார்க்கிறார். டாலருக்கு எதிரான முடிவுகளை எடுத்தால் பிரிக்ஸ் நாடுகளுக்கு 100% வரி விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

    எனவே அமெரிக்காவுடனான தூதரக உறவு பாதிக்கப்பட கூடாது என்பதில் இந்தியா கவனமாக இருக்கிறது. பிரிக்ஸ் அமைப்பு டாலருக்கு எதிரானது இல்லை என்றும், தங்களின் சொந்த நாணய வர்த்தகத்தை எளிதாக்க மட்டுமே இது முயற்சிக்கிறது என்றும் இந்தியா தெளிவுப்படுத்தியிருக்கிறது.

    அதே நேரம் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகளுடன் நட்புடன் இருக்கும் இந்தியா, பிரிக்ஸ் அமைப்பு இந்த மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான அமைப்பாக மாறிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது. எனவே பிரிக்ஸ் மாநாட்டின் இறுதியில் வெளியாகும் பிரகடனத்தில் அனைத்து நாடுகளையும் கையெழுத்து போட வைக்கும் முயற்சியை இந்தியா தீவிரப்படுத்தயிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Topics: #brics #india #us

    English Summary

    BRICS Summit: The BRICS summit taking place in Delhi today has attracted significant international attention. Since the bloc includes both anti-US and pro-US nations, the question arises as to how India will manage these two factions.