டெல்லி: தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு லோக்சபா தொகுதிக்கான முடிவுகள் வெளியாக உள்ளதால், இந்த மாநிலங்களின் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டசபை தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. கடந்த ஒரு மாதமாக இந்தத் தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில், வாக்காளர்கள் அளித்த தீர்ப்பு இன்று தெரியவரும். தமிழகத்தில் இந்த இரு தொகுதிகளை போலவே மேற்கு வங்கம் மற்றும் அசாமிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
மேற்கு வங்கத்தில் நந்திகிராம் மற்றும் ரேஜினகர் ஆகிய இரு சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதில் நந்திகிராம் தொகுதி கூடுதல் கவனம் பெற்றுள்ளது. ஏனென்றால் அது மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் சொந்த தொகுதியாகும். பொது தேர்தலில் முதல்வர் சுவேந்து அதிகாரி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டிருந்தார். தனது சொந்த தொகுதியான நந்திகிராமில் அவர் களமிறங்கிய நிலையில், மாஜி முதல்வர் மம்தாவின் பவானிபூர் தொகுதியிலும் அவர் போட்டியிட்டிருந்தார். இரு தொகுதிகளிலும் வென்ற நிலையில், மம்தாவை வீழ்த்திய பவானிபூர் தொகுதியில் பதவியை தொடர்ந்த அவர், நந்திகாரம் தொகுதியை ராஜினாமா செய்தார். இதனால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் கூட திரிணாமுல் வேட்பாளர் கடைசி நேரத்தில் ராஜினாமா செய்துவிட்டு, சுவேந்து அதிகாரி பக்கம் கட்சி தாவினார். இதனால் திரிணாமுல் களத்தில் வேட்பாளர் இல்லாமல்.. வேறு வழியின்றி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தது. அதேபோல ஆம் ஜனதா உன்னயன் கட்சியின் தலைவரான ஹுமாயூன் கபீர் பதவி விலகியதால் ரெஜினாகர் தொகுதியில் காலியிடம் ஏற்பட்டது. சுவேந்து அதிகாரியை போலவே, கபீரும் பொது தேர்தலில் இரண்டு வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அவர் நவோடா தொகுதியை தக்கவைத்து கொண்டு ரெஜினாகர் தொகுதியில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அங்கு இடைத்தேர்தலை நடத்த வேண்டிய சூழல் உருவானது. அசாமின் நாகான் லோக்சபா தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்குகளும் இன்று எண்ணப்படுகின்றன. இந்தத் தொகுதியில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆல் இந்தியா யுனைடெட் டெமோக்ரடிக் ஃப்ரண்ட் ஆகிய கட்சிகளுக்கு இடையே முக்கியப் போட்டி நிலவியது. அங்கு எம்பியாக இருந்த பிரத்யுத் போர்டோலோய் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதாவது 2024-ஆம் ஆண்டில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு, நாகான் லோக்சபா தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றிருந்தார் போர்டோலோய். இருப்பினும், அவர் காங்கிரஸில் இணைந்து விலகி பாஜகவில் ஐக்கியமானார். அசாம் சட்சபை தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற தொகுதியில் வென்றார். இதையடுத்து அவர் தனது எம்பி பதவியை முறைப்படி ராஜினாமா செய்திருந்தார். இது தவிர தமிழ்நாட்டில் இரு தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.மேற்கு வங்கம்
நந்திகாரம்
ரெஜினாகர்
அசாம்