' பிசி முஸ்லிம்' சாதிச் சான்றிதழ் ரத்து.. தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

  • டெல்லி: மதம் மாறியவருக்கு 'பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்' என சாதிச் சான்றிதழ் தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்படி மதம் மாறியவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கும் அரசாணையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

    Advertisement

    தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சமீர் அகமது என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த 2022-ம் ஆண்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "நான் கடந்த 2015-ம் ஆண்டில் முஸ்லிம் மதத்துக்கு மாறினேன். இதனால் பரமசிவம் என்ற என் பெயரை சமீர் அகமது என மாற்றினேன். இதனால் இந்த மாற்றத்தை ஏற்று என் சாதிச்சான்றிதழில் முஸ்லிம் லெப்பை என மாற்றித்தருமாறு தாசில்தாரிடம் விண்ணப்பித்தேன்.
    ஆனால் என் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டார். அதனை ரத்து செய்து எனக்கு சம்பந்தப்பட்ட சாதிச்சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    Advertisement

    இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி ஆகியோர் விசாரித்னர். கடந்த மாதம் (ஜூன்) பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், தூத்துக்குடி நாராயணனின் மகனான பரமசிவம் என்பவர், சமீர் அகமது என பெயர் மாற்றம் செய்துள்ளார். இந்த மத மாற்றத்துக்கு பின்பு, அவர் இடஒதுக்கீடு சலுகையை கோரினால் அது நியாயமானதா? என்ற கேள்வி எழுகிறது. முஸ்லிம் மதத்தை பொறுத்தவரை அதில் உள்ள 7 பிரிவுகளை சேர்ந்தவர்கள், பிற்படுத்தப்பட்ட பிரிவு முஸ்லிம்கள் என வகைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். மற்ற வகை முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்ட பிரிவு முஸ்லிம்கள் என்று அழைக்க இயலாது.

    Advertisement

    வேறுமதத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட பிரிவினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, சீர்மரபினர் அல்லது பட்டியல் சமுதாயத்தினர் முஸ்லிம் மதத்துக்கு மாறினால் மேற்கண்ட 7 பிரிவுகளில் ஒன்றை சேர்ந்தவர் என்று சாதிச்சான்றிதழ் வழங்கலாம் என்று அரசு உத்தரவிட்டது. இத்தகைய நிலைப்பாடு அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகுமா? என்பதுதான் இங்கு முக்கிய கேள்வியாக உள்ளது.

    இஸ்லாமியத்திற்கு மாறுபவர் ஒரு முஸ்லிம் மட்டுமே ஆகிறார் என்று ஏற்கனவே உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருக்கிறது. அந்த தீர்ப்பை வலுவிழக்கச்செய்யும் வகையில் தமிழக அரசு ஒரு அரசாணையை வெளியிடுவது ஏற்புடையதல்ல. பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள் என அடையாளம் காணப்பட்ட முஸ்லிம்களின் 7 பிரிவுகளில் ஏதேனும் ஒன்றுக்கு மதம் மாறலாம் என்பதை அரசு அங்கீகரித்து இருப்பதும் ஏற்புடையது கிடையாது.

    Advertisement

    அந்தவகையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை பிறப்பித்த அரசாணை சட்டவிரோதமானது என்ற முடிவுக்கு வருகிறோம். அந்த அரசாணை அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது, செல்லாது என்று நாங்கள் அறிவிக்கிறோம். அதன்படி மனுதாரருக்கு முஸ்லிம் லெப்பை என சாதிச்சான்றிதழ் வழங்க முடியாது என தூத்துக்குடி தாசில்தார் நிராகரித்தது சரிதான். எனவே முஸ்லிம் மதத்திற்கு மாறிய ஒருவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த முஸ்லிம் என்ற அந்தஸ்தை கோர முடியாது என்று நாங்கள் தீர்ப்பளிக்கிறோம். அவர் ஒரு முஸ்லிம் மட்டும்தான்" இவ்வாறு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி ஆகியோர் உத்தரவிட்டனர்.

    Advertisement

    இந்த உத்தரவை எதிர்த்தும், தடை விதிக்க கோரியும் தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் பி.கருணாகரன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்படும் வரை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அதேசமயம் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் தங்களது தரப்பு கருத்தை கேட்காமல் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என்று குறிப்பிட்டு சையது இப்ராகிம் என்பவர் சார்பில் வழக்கறிஞர் யோகஸ்வரன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    English Summary

    In Tamil Nadu, caste certificates designating individuals as 'Backward Class Muslim' have been issued to those who converted to Islam. However, the Madurai Bench of the Madras High Court recently quashed the government order authorizing the issuance of such caste certificates to converts. The Tamil Nadu government has appealed to the Supreme Court, seeking a stay on this order.