தமிழகம் - கர்நாடகா காங்கிரஸ் மோதல்.. காவிரியால் அலறும் தேசிய கட்சிகள்.. பாஜகவிற்கும் ‘ஊமைகுத்து'

  • டெல்லி: காவிரி தண்ணீர் பங்கீடு தொடர்பான விஷயத்தில் காங்கிரஸ் கட்சி இக்கட்டான சூழலை எதிர்கொண்டள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் VS கர்நாடகா காங்கிரஸ் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில் இருதரப்புக்கும் நடுவே மத்திய பாஜக அரசும் தப்பவில்லை. இதனால் காவிரி விவகாரத்தில் தேசிய கட்சிகள் தர்மசங்கடமான நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    தமிழகம் - கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு செய்வதில் பிரச்சனை உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில் தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. காவிரிக்கு குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம். கர்நாடகாவில் மழையில்லாததால்தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகா காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

    Advertisement

    அதேவேளையில் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்களோ, காவிரிக்கு குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம். அணை கட்டுவது சட்டவிரோதமானது. தமிழகத்துக்கு உரிய முறையில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இப்படியான சூழலில் தான் தமிழகத்துக்கு இன்று முதல் அடுத்த 15 நாட்கள் 3,500 கனஅடி தண்ணீரை தினமும் திறந்து விட வேண்டும் என்று நேற்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது.

    இதற்கு கர்நாடகா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் உத்தரவை எதிர்த்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் முறையிடப்படும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் தான் உத்தரவுகளை மீறி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காமல் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கர்நாடகா அரசு மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக காங்கிரஸ் தலைவரும், விருதுநகர் எம்பியுமான மாணிக்கம் தாகூர் லோக்சபாவில் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கி உள்ளார்.

    Advertisement

    அதில், ''தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவின் உத்தரவை கர்நாடகா செயல்படுத்தாமல் இருப்பது பற்றி அவசரமாக விவாதம் நடத்த வேண்டும். காவிரி நீர் பற்றாக்குறையால் ஏற்கனவே தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக சம்பா சாகுபடி நடைபெற உள்ளது. அதுவும் ஆபத்தை எதிர்கொள்ளும் சூழல் உள்ளது. தற்போதைய இந்த விவகாரம் என்பது லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமாகும். அதோடு தமிழகத்தின் உணவு பாதுகாப்பையும் அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

    காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவின் உத்தரவுகளும், உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட காவிரி நடுவர் மன்ற தீர்ப்பும் சட்டப்படி முறைப்படி பின்பற்றப்பட வேண்டும். அவற்றை செயல்படுத்துவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டத்தைக் கூட்டி, நிலுவையில் உள்ள நீரை உடனடியாக விடுவிப்பதன் மூலம் தமிழக விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும். இதனால் உடனடியாக விவாதம் நடத்த வேண்டும்'' என்று லோக்சபாவில் ஒத்திவைப்பு தீர்மானம் வழங்கி உள்ளார்.

    Advertisement

    இதுதொடர்பாக மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில், ''தமிழ்நாட்டின் குறுவை விவசாயம் ஏற்கனவே காய்ந்துவிட்டது, வரவிருக்கும் சம்பா சாகுபடிக்காவது உடனடியாகத் தண்ணீர் வந்தாக வேண்டும். காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைப்பின் உத்தரவை ஏற்க மறுத்து மேல்முறையீடு செய்வோம் என்றும், தண்ணீர் திறக்க முடியாது என்றும் கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி பேசுவது தேவையற்ற பதற்றத்தையும் மாநிலங்களுக்கு இடையே விரிசலையும் மட்டுமே உண்டாக்கும். இத்தகைய பொறுப்பற்ற கருத்துக்களைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.

    29.07.2026 முதல் 15 நாட்களுக்குப் பிலிகுண்டுலுவில் தினமும் 3,500 கன அடி நீரைத் திறக்க வேண்டும் என்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் உத்தரவைக் கர்நாடகா எவ்விதச் சாக்குப்போக்கும் இன்றி உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். 26.07.2026 வரை பிலிகுண்டுலுவில் வழக்கமாக வரவேண்டிய 35.391 டிஎம்சி-க்கு பதிலாக வெறும் 3.543 டிஎம்சி (10.01%) மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கு 9.46 டிஎம்சி நீர் பாக்கி உள்ள நிலையில், சட்டப்பூர்வ தீர்ப்புகளையும் உத்தரவுகளையும் மதித்து நடப்பதே கூட்டாட்சி தர்மத்திற்கு அழகு'' என கூறியுள்ளார்.

    Advertisement

    கர்நாடகா மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு அங்குள்ள காங்கிரஸ் கட்சி தண்ணீர் திறக்க தயங்குகிறது. அதேவேளையில் தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக காங்கிரஸ் தண்ணீரை முறையாக திறந்து விட வேண்டும் என்று கூறி வருகிறது. இதனால் இருமாநிலங்களிலும் காங்கிரஸ் தலைவர்கள் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய சூழலில் உள்ளன. இது காங்கிரஸ் தலைமைக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

    அதுமட்டுமின்றி தமிழக காங்கிரஸ் கட்சி - கர்நாடகா காங்கிரஸ் கட்சி இடையே மோதலை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி இந்த விவகாரம் பாஜக தலைமையிலான மத்திய அரசையும் ஒரு இக்கட்டான நிலையில் தள்ளியுள்ளது. உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட காவிரி நீர் பகிர்வு நடைமுறையை செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு மத்திய பாஜக அரசுக்கு உள்ளது.

    Advertisement

    அதன்படி மத்திய அரசு செயல்பட்டு தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை உறுதி செய்தால் அது கர்நாடகாவில் பாஜகவிற்கு எதிராக அமையலாம். அதேவேளையில் கண்டுக்கொள்ளாவிட்டால் தமிழகத்தில் பாஜகவுக்கு எதிராக அமையலாம். இருமாநிலங்களுக்கு இடையே காவிரி நீர் பங்கீடு என்பது உணர்ப்பூர்வமான பிரச்சனையாக உள்ளதால் காங்கிரஸ் மட்டுமின்றி பாஜகவிற்கும் இந்த விவகாரத்தில் புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.

    English Summary

    The Congress party is facing a precarious situation regarding the Cauvery water-sharing issue. A conflict has erupted between the Tamil Nadu and Karnataka units of the party, while the BJP-led central government has also come under fire from both sides. Here, we examine the background of this predicament in which national parties find themselves entangled over the Cauvery dispute.