டெல்லி: தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து 3,500 கனஅடி தண்ணீர் திறக்க வேணடும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே காவிரி நதி நீர் பங்கீடு செய்வதில் பிரச்சனை உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றி இந்த 2 அமைப்புகள் தான் காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டிய நடைமுறையை செயல்படுத்தி வருகின்றன. அதாவது காவிரி நீர் ஒழுங்காற்று குழு என்பது ஒவ்வொரு மாதமும் தமிழகத்துக்கு காவிரியில் கிடைக்க வேண்டிய தண்ணீர் அளவு குறித்த பரிந்துரைகளை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கும். இந்த பரிந்துரைகளின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவின்பேரில் கர்நாடகா, தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டு வருகிறது. இந்நிலையில் தான் டெல்லியில் இன்று காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கர்நாடகா மற்றும் தமிழகத்தின் அதிகாரிகள் காணொளி காட்சி மூலமாக பங்கேற்றனர். கேரளா, புதுச்சேரி மாநிலங்களிலும் பிரதிநிதிகளும் இதில் பங்கற்றனர். இந்த கூட்டத்தில் அடுத்த 15 நாட்களுக்கு கர்நாடகா காவிரியில் தமிழகத்துக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தமிழகத்துக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. ஆனால் கர்நாடகா அரசோ பருவமழை பெய்யவில்லை. வறட்சியால் அணைகளில் தண்ணீர் இல்லை என்று கூறி வருகிறது. அதுமட்டுமின்றி கர்நாடகாவில் உள்ள கேஆர்எஸ் உள்பட பிற அணைகளில் இருக்கும் தண்ணீரை குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். விவசாயத்துக்கு பயன்படுத்த கூடாது என்று கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது. இப்படியான சூழலில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை செயல்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.