வெடிமருந்து ஒப்பந்தத்தில் லஞ்சம்.. பாதுகாப்புத்துறை அதிகாரி அனில் குமார் விவகாரத்தில் சிபிஐ அதிரடி!

  • டெல்லி: இந்திய பாதுகாப்பு துறைக்கான வெடிமருந்துகளை தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனமான மியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் அனில் குமார் மீதான லஞ்ச புகாரைத் தொடர்ந்து, அவர் கையாண்ட அனைத்து பாதுகாப்பு துறை ஒப்பந்தங்களையும் சிபிஐ ஆய்வு செய்யவுள்ளது. அவர் குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாக செயல்பட லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில் அனில் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

    Advertisement

    லஞ்சம் வாங்கிக் கொண்டு பாதுகாப்பு துறை உற்பத்தி மற்றும் கொள்முதல் தொடர்பான ரகசிய தகவல்களை வெளியிட்டதாக இந்திய பாதுகாப்பு துறைக்கான வெடிமருந்துகளை தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனமான மியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் அனில் குமார் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

    Advertisement

    அதிரடி சோதனை

    இதையடுத்து அனில் குமார் கையாண்ட ஒப்பந்தங்கள் மற்றும் அது தொடர்பான ஆவணங்களை கோரி பாதுகாப்பு அமைச்சகம், MIL நிர்வாகம் ஆகியவற்றுக்கு கடிதம் எழுதவும் சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். புனேவில் உள்ள அனில் குமாரின் வீட்டுக்கு ஹவாலா முறையில் பெருமளவு பணம் கொண்டு வரப்படுவதாக சிபிஐக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், புதன்கிழமை அவரை கைது செய்தனர்.

    அனில் குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரூ.500 கோடி மதிப்பிலான வெடிமருந்து ஒப்பந்தத்தில் எஸ்எம்பிபி லிமிடெட் நிறுவனத்துக்கு சாதகமாக செயல்படுவதற்காக அந்த பணம் லஞ்சமாக வழங்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் எஸ்எம்பிபி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆஷிஷ் கன்சால் மற்றும் அனில் குமாரின் சகோதரர் பி. ஹர்ஷவர்தன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Advertisement

    பறிமுதல்

    அனில் குமாரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.73 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, மைசூரு, பெங்களூர் மற்றும் டெல்லியில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் மேலும் ரூ.50 லட்சம் கைப்பற்றப்பட்டது.

    கொள்முதல் முடிவுகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பண பரிமாற்றங்களுக்கு இடையே தொடர்பு உள்ளதா என்பதை அறிய அனில் குமார் கையாண்ட ஒப்பந்தங்கள் அனைத்தையும் ஆய்வு செய்யவுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், "MIL நிறுவனத்தின் ஒப்பந்தங்கள் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடையவை.. அவை மிகவும் முக்கியமானவை. எனவே, அந்த நிறுவனத்தில் அனில் குமார் கையாண்ட அனைத்து பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்களையும் ஆய்வு செய்வோம்" என்றார். தற்போது சிபிஐ அதிகாரிகள் அனில் குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Advertisement

    பின்னணி

    தனியார் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து சட்டவிரோதமாக பணம் கேட்டு பெற்றதுடன், அவர்களுக்கு சாதகமான அதிகாரப்பூர்வ முடிவுகளை எடுப்பதாக அனில் குமார் உறுதியளித்ததாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. மேலும், பாதுகாப்புத்துறை உற்பத்தி, கொள்முதல் மற்றும் நிறுவனத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பிற நடவடிக்கைகள் தொடர்பான ரகசியத் தகவல்களை வெளியிட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாகவே சிபிஐ இப்போது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.

    அடுத்து என்ன

    ரூ.500 கோடி மதிப்பிலான வெடிமருந்து ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு மட்டுமின்றி, அனில் குமார் கையாண்ட பிற ஒப்பந்தங்களிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்துள்ளனவா என்பதை கண்டறிய சிபிஐ விசாரணையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது

    English Summary

    CBI has arrested Munitions India Limited Executive Director Anil Kumar over allegations(பாதுகாப்பு துறை முறைகேடு சிபிஐ விசாரணை): MIL Executive Anil Kumar latest news in tamil.