டெல்லி: 'புதிய கல்வி கொள்கை 2020'ன் கீழ் 9 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவ -மாணவிகள் தங்களின் 3வது மொழியில் பள்ளி அளவில் 'உள்மதிப்பீட்டு நடைமுறை'யில் பாஸ் ஆக வேண்டும். இந்த புதிய நடைமுறை 9 ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நடப்பு கல்வியாண்டு முதலும், 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 2027-28 கல்வியாண்டில் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ சார்பில் கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் நடப்பு கல்வியாண்டான 2026-27 ம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் மூன்றாவது மொழி கட்டாயமாக்கப்பட்டது.
அதன்படி பள்ளி மாண-மாணவிகள் 2 இந்திய மொழியும், ஒரு வெளிநாட்டு மொழியையும் தேர்வு செய்து பயிலலாம். அதேவேளையில் ஏற்கனவே 6, 7, 8 படிக்கும் மாணவ-மாணவிகள் இரண்டு வெளிநாட்டு மொழிகளை படித்தால் அவர்கள் புதிதாக இந்திய மொழியை படிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதுமட்டுமின்றி இதற்கு முன்பு சிபிஎஸ்இ-யில் 8 ம் வகுப்புக்கு பிறகு 3வது மொழி பாடம் என்பது கிடையாது. ஆனால் நடப்பு கல்வியாண்டு முதல் 9 ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும், அடுத்த கல்வியாண்டு (2027-28) முதல் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் 3வது மொழி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ சார்பில் தற்போது புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ''புதிய கல்வி கொள்கை 2020ன் படி 9 ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பயிலும் 3வது மொழிக்கு பள்ளி அளவிலான உள் மதிப்பீட்டு நடைமுறை (Internal Assessment) மட்டுமே பின்பற்றப்படும். இதில் மாணவ-மாணவிகள் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். 9ம் வகுப்பு மாணவ -மாணவிகள் 3வது மொழிக்கான உள் மதிப்பீட்டு நடைமுறையில் தேர்ச்சி பெறாவிட்டாலும் கூட 10ம் வகுப்புக்கு செல்வார்கள். ஆனால் 10ம் வகுப்பு கட்டாயமாக 3வது மொழிக்கான உள் மதிப்பீட்டு நடைமுறையில் தேர்ச்சி பெற வேண்டும். ஒருவேளை 10ம் வகுப்பிலும் 3வது மொழிக்கான உள்மதிப்பீட்டு நடைமுறையில் மாணவ-மாணவிகள் தோல்வியடைந்தால் அவர்களுக்கு மறு உள்மதிப்பீட்டு நடைமுறையை கொண்டு வந்து முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். இருப்பினும் இந்த 3வது மொழி தேர்வு இறுதி தேர்வுடன் சேர்த்து நடத்தப்படாது. ஆனால் 3வது மொழிக்கான உள்மதிப்பீட்டு நடைமுறையில் பாஸான விவரம் பற்றி 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் R3 என்ற பெயரில் இடம்பெற செய்யப்படும். இந்த புதிய முறை சிபிஎஸ்இ 9 ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 2026-27 (நடப்பு கல்வியாண்டு) கல்வியாண்டு முதலும், 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 2027-28 (அடுத்த கல்வியாண்டு) கல்வியாண்டு முதலும் அமலுக்கு வர உள்ளது’’ என கூறப்பட்டுள்ளது.