டிரைவர் மறந்தாலும் தானாக பிரேக் பிடிக்கும்! கார்களில் புதிய தொழில்நுட்பத்துக்கு மத்திய அரசு அனுமதி

  • டெல்லி: சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில், எதிரே வரும் வாகனம் அல்லது தடையை உணர்ந்து ஓட்டுநர் பிரேக் போடாவிட்டாலும் கார் தானாக பிரேக் பிடிக்கும் அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களுக்கு மத்திய அரசு முக்கிய அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலும் மேம்பட்ட பாதுகாப்பு வசதிகள் கொண்ட கார்கள் அதிகளவில் அறிமுகமாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

    Advertisement

    உலகில் அதிக அளவில் கார்கள் விற்பனையாகும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அதே நேரத்தில், சாலை விபத்துகளும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. கடந்த 2024-ம் ஆண்டு மட்டும் நாடு முழுவதும் சுமார் 5 லட்சம் சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் 1.77 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகளில் பெரும்பாலானவை ஓட்டுநர்களின் கவனக்குறைவு மற்றும் மனிதத் தவறுகளால் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    Advertisement

    தானாக பிரேக் பிடிக்கும் பாதுகாப்பு வசதி

    இதனைத் தடுக்க, எதிரே வரும் வாகனம் அல்லது தடையை சென்சார்கள் மூலம் கண்டறிந்து, ஓட்டுநர் உடனடியாக பிரேக் போடாவிட்டாலும் காரே தானாக பிரேக் பிடித்து விபத்தை தவிர்க்கும் தொழில்நுட்பங்களை இந்தியாவில் பரவலாக அறிமுகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    தற்போது இந்த வகை பாதுகாப்பு சென்சார்கள் மற்றும் தானியங்கி வாகன தொழில்நுட்பங்கள் செயல்பட குறிப்பிட்ட ரேடியோ அலைவரிசைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதுவரை அவற்றை பயன்படுத்த தனியாக கட்டணம் செலுத்தி அரசிடம் லைசென்ஸ் பெற வேண்டியிருந்தது. இந்த நடைமுறையால், மேம்பட்ட பாதுகாப்பு வசதிகள் கொண்ட கார்களை இந்தியாவில் தயாரிப்பதிலும் அறிமுகப்படுத்துவதிலும் சிக்கல்கள் இருந்து வந்தன.

    Advertisement

    இந்தியாவிலும் அதிநவீன கார்கள்

    இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, இந்த சென்சார் தொழில்நுட்பங்களுக்கு தேவையான குறிப்பிட்ட அலைவரிசைகளை பயன்படுத்த இனி தனியாக லைசென்ஸ் பெற தேவையில்லை. இதனால் கார் தயாரிப்பு நிறுவனங்கள் அந்த அலைவரிசைகளை நேரடியாகவும், இலவசமாகவும் பயன்படுத்த முடியும்.

    இந்த புதிய விதிமுறையால் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படும் மேம்பட்ட பாதுகாப்பு வசதிகள் கொண்ட கார்களை இந்திய சந்தையிலும் எளிதாக அறிமுகப்படுத்த முடியும். மேலும், வெளிநாடுகளில் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் டிரைவர் இல்லா கார்கள் மற்றும் தானியங்கி பாதுகாப்பு தொழில்நுட்பங்களையும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    குறைந்த விலை கார்களிலும் பாதுகாப்பு வசதி

    மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், குறைந்த விலை கார்கள் உட்பட பல்வேறு வாகனங்களில் தானாக பிரேக் பிடிக்கும் பாதுகாப்பு அம்சங்களை இணைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் டிரைவர் இல்லா கார்கள் மற்றும் விபத்துகளை பெருமளவில் குறைக்கும் தானியங்கி பாதுகாப்பு வசதிகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வருவதற்கான முக்கிய தொடக்கமாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.

    English Summary

    Central Government has removed licensing requirements for specific radio frequencies used in advanced vehicle safety systems. This move is expected to boost the adoption of automatic emergency braking, collision avoidance features, and future autonomous driving technologies in India.