சென்னை: புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், குடும்பத்தினருக்கு நிம்மதி அளிக்கும் வகையில் மத்திய அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, நாடு முழுக்க 1,364 புற்றுநோய் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரூ.41,250 விலை கொண்ட புற்றுநோய் மருந்து இனி ரூ.3,218 -க்கு வாங்க முடியும். இந்த மருந்து விலை குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதிகபட்சமாக சில மருந்துகளின் சில்லறை விலை 96.45 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட விலை குறைப்பின் மூலம் நுகர்வோர்கள் ஆண்டுக்கு ரூ.3,540.38 கோடி சேமிக்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புற்றுநோயின் வகை மற்றும் பாதிப்பைப் பொறுத்து அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இதில், புற்றுநோய் செல்களை அழிப்பதற்காகவும், நோய் பரவுவதை கட்டுப்படுத்தவதற்காகவும் பல்வேறு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்த மருந்துகளின் விலை அதிக லாப நோக்கத்தோடு விற்கப்படுவதால் பல குடும்பங்கள் இதற்காக பெரும் தொகையைச் செலவிட வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே புற்றுநோய் மருந்துகளின் விலையை 30 சதவீத லாப வரம்புக்குள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டு இருந்தது. இத்தகைய சூழலில், புற்றுநோய் மருந்துகளின் விலையைக் குறைத்து நோயாளிகளின் மருத்துவச் செலவைக் குறைக்க மத்திய அரசு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA), 137 வகையான புற்றுநோய் மருந்துகளுக்கான விற்பனை வரம்பை 30 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இதன் அடிப்படையில் பல்வேறு நிறுவனங்களின் மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நோய் எதிர்ப்பு சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள், மார்பகப் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் உள்ளிட்டவற்றுக்கான மருந்துகளின் விலை அதிரடியாக குறைந்துள்ளன. மொத்தம் 1,364 மருந்து தயாரிப்புகளின் விலைகள் திருத்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 679 மருந்து பிராண்டுகளின் விலை 50 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது. அதிகபட்சமாக ஒரு மருந்தின் விலை 96.45 சதவீதம் வரை குறைந்துள்ளது. அதாவது, Abiraterone acetate 250 mg என்ற மருந்தின் Abirone பிராண்டு விலை ரூ.41,250-க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது இந்த மருந்தின் விலை ரூ.3,218.23 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதே மருந்தின் Abirat பிராண்டு விலை ரூ.36,088.81-இல் இருந்து ரூ.4,064.48 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக பல மருந்துகளின் விலைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இதனால் நுகர்வோர்களால் ஆண்டுக்கு ரூ.3,540.38 கோடி சேமிக்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து விநியோகஸ்தர்கள், மருந்துக் கடைகள் மற்றும் மருத்துவமனைகளுக்குச் செல்லும்போது அதன் விலையில் கூடுதல் லாபத் தொகை சேர்க்கப்படுகிறது. இதையே விற்பனை வரம்பு (Trade Margin) என்கிறார்கள். சில புற்றுநோய் மருந்துகளுக்கு இந்த லாப வரம்பு அதிகமாக இருந்ததால் நோயாளிகள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருந்தது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 137 வகையான புற்றுநோய் மருந்துகளுக்கு 30 சதவீத விற்பனை வரம்பை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. நோயாளிகள் மருந்துகளின் புதிய விலையை மருந்துப் பெட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள MRP மூலம் தெரிந்துகொள்ளலாம். மேலும், மத்திய அரசின் Pharma Sahi Daam செயலி மற்றும் NPPA இணையதளத்திலும் இதன் விலையை சரிபார்த்துகொள்ள முடியும். புதிய விலையைவிட அதிகமாக மருந்துகளை விற்பனை செய்ய மருந்துக் கடைகளுக்கும், மருத்துவமனை மருந்தகங்களுக்கும் அனுமதி இல்லை. அதிக விலை வசூலிக்கப்பட்டால் 1800111255 என்ற NPPA உதவி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.புற்றுநோய் மருந்துகள்
புற்றுநோய் மருந்துகள் விலை குறைக்கப்பட்டது எப்படி.. மக்கள் ஒவ்வொருவரும் அறிய வேண்டிய மிகப்பெரிய உண்மை
ரூ.40,000 மருந்து விலை 3 ஆயிரமாக குறைப்பு
புற்றுநோய் சிகிச்சைக்கு மத்தியில் நடிகை உமாசங்கரி உருக்கமான பதிவு.. தீபாவளி நாளில் நெகிழ்ச்சி
ஏன் விலை குறைப்பு?
குறைக்கப்பட்ட விலையை தெரிந்துகொள்வது எப்படி?