டெல்லி: நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய அரசு இறங்கி வந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது. கரப்பான் பூச்சி கட்சியினர் சொல்லும் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு ரெடியாக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நீட் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக கரப்பான் பூச்சி கட்சியினர் நடத்தி வரும் போராட்டம் பெரிதாக வெடித்துள்ளது. டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் தொடர்ந்து அதிகளவில் மக்கள் திரண்டு வருகிறார்கள். டெல்லி மட்டுமின்றி நாடு முழுக்க நீட் விவகாரம் தொடர்பாக மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
மத்திய அரசு தொடக்கத்தில் இந்த போராட்டத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் தான் பேச்சுவார்த்தைக்கு கூட அழைப்பு விடுக்காமல் இருந்தது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு முதல்முறையாக பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைத்தது. கரப்பான் பூச்சி கட்சி செய்தி தொடர்பாளர்கள் தங்கள் கோரிக்கையை மத்திய அமைச்சர் ஜேபி நட்டாவிடம் வழங்கினர். இருப்பினும், மத்திய அரசு எந்தவொரு உத்தரவாதத்தையும் தரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கரப்பான் பூச்சி கட்சியினர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை பேச்சுவார்த்தை நடத்த முடியாது கூறியிருக்கிறது. இதற்கிடையே இப்போது நாடு முழுக்க போராட்டம் பரவும் நிலையில், அதன் தீவிர தன்மையை உணர்ந்துள்ள மத்திய அரசு இப்போது தனது டோனை மாற்றியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கரப்பான் பூச்சி கட்சியினர் மற்றும் மாணவர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ரெடியாக இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.. குறிப்பாக எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் மத்திய அரசு இறங்கி வந்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், "நேற்று மதியம் முதல் இதுவரை மாணவர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய அரசு நான்கு முறை அதிகாரப்பூர்வமாக அழைப்பு அனுப்பியுள்ளது. இளைஞர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு வெளிப்படையாக அழைக்கிறோம். நீங்கள் சொல்லும் எந்த நேரத்திலும், அனைத்து பிரச்சனைகள் குறித்தும் பேச மத்திய அரசு தயாராக உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவும் பங்கேற்பார்.. ஜே.பி. நட்டாவின் அலுவலகத்திலோ அல்லது அவரது இல்லத்திலோ பேச்சுவார்த்தை நடத்தலாம். இடம் குறித்தும் கூட எங்களுக்கு எந்த பிடிவாதமும் இல்லை. நானும், ஜே.பி. நட்டாவும் நீங்கள் சொல்லும் இடத்திற்கு வந்து நேரில் கலந்து கொள்வோம். பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே தீர்வை நோக்கி செல்ல முடியும். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவர்களின் நலனுக்காக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எனவே பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்பதை பணிவுடன் கேட்டு கொள்கிறேன். பேச்சுவார்த்தை மூலமாகவே எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வை எட்ட முடியும்" என்றார். நீட் தேர்வு முறைகேடு, தேர்வு வெளிப்படைத்தன்மை மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைமையில் டெல்லியில் பல ஆயிரம் மாணவர்கள் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசி, தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்திய நிலையில், மும்பை உள்ளிட்ட பல நகரங்களிலும் மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் தான் இறங்கி வந்துள்ள மத்திய அரசு, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தைக்கு ரெடி என வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்து வரும் நாட்களில் பல அதிரடி திருப்பங்கள் நடக்கும் என்றே தெரிகிறது.பேச்சுவார்த்தை
மத்திய அரசு அழைப்பு
எந்த இடத்திற்கும் வர தயார்
பின்னணி