டெல்லி: உங்கள் கையில் ஐபோன், மேக்புக், ஆப்பிள் வாட்ச் என ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களை பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால் உடனடியாக உங்கள் சாதனங்களில் உள்ள சாப்ட்வேர் அப்டேட்களை சரிபார்ப்பது அவசியம். ஆப்பிள் சாதனங்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக, பயனர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று மத்திய அரசின் சைபர் பாதுகாப்பு அமைப்பான CERT-In எச்சரித்துள்ளது.
பொதுவாக ஆப்பிள் நிறுவனத்தின் கருவிகள் என்றாலே அதன் உச்சபட்ச பாதுகாப்பு கட்டமைப்பு தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அந்த செக்யூரிட்டி உள்கட்டமைப்பை தாண்டி யாராலும் அவ்வளவு சீக்கிரம் ஹேக் செய்ய முடியாது. இதனாலேயே பலரும் ஆப்பிள் சாதனங்களை ஆர்வத்துடன் வாங்குகிறார்கள்.
ஆனால், அப்படிப்பட்ட ஆப்பிள் கருவிகளிலேயே பாதுகாப்பு சிக்கல் இருப்பதாக மத்திய அரசின் சைபர் பாதுகாப்பு அமைப்பான CERT-In எச்சரித்துள்ளது. இது தொடர்பாக நேற்றைய தினம் மத்திய அரசு விரிவான அறிக்கையை வெளியிட்டு இருந்தது. iOS, macOS, Safari, watchOS என பல்வேறு ஆப்பிள் சாப்ட்வேர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள குறைபாடுகளை பயன்படுத்தி ஹேக்கர்கள் முக்கியமான தகவல்களைத் திருடுவது, பாதுகாப்பு கட்டுப்பாடுகளை தாண்டுவது அல்லது சாதனங்களை செயலிழக்க செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக CERT-In எச்சரித்துள்ளது. எந்தெந்த சாதனங்களுக்கு ஆபத்து? ஐபோன், ஐபேட், மேக்புக், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் டிவி மற்றும் ஆப்பிள் விஷன் ப்ரோ உள்ளிட்ட சாதனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐபோன் மற்றும் ஐபேட் யூசர்கள், தங்கள் சாதனங்களில் iOS அல்லது iPadOS 18.7.11, 26.7.2 மற்றும் 27.2க்கு முந்தை வெர்ஷன் இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். அதேபோல மேக்புக் பயனர்கள் macOS Sequoia 15.8.2, macOS Tahoe 26.7.2 மற்றும் macOS Golden Gate 27.2க்கு முந்தை வெர்ஷன் பயன்படுத்தினால் அதையும் அப்டேட் செய்ய வேண்டும். Apple Watch, Apple TV, Apple Vision Pro ஆகிய சாதனங்களில் 27.2 பதிப்புக்கு முந்தைய சாப்ட்வேர்களை பயன்படுத்துவோரும், சபாரி பிரவுசரில் 27.2க்கு முந்தைய வெர்ஷன்களை பயன்படுத்துவோரும் அப்டேட்களை சரிபார்க்க வேண்டும். மெமரி கரப்ஷன், பஃபர் ஓவர்ஃப்ளோ (Buffer Overflow) சரிபார்ப்பதில் உள்ள குறைபாடுகள் உள்ளிட்ட பல சாப்ட்வேர் பலவீனங்கள் இந்த பிரச்சனைக்கு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக ஹேக்கர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இணைய பக்கங்கள், படங்கள், ஆடியோ, வீடியோக்கள் மூலம் இதை பயன்படுத்தி ஹேக் செய்யும் முயற்சிகள் நடக்கலாம். அதேநேரம் இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டிருப்பதால் மட்டுமே அனைத்து ஆப்பிள் சாதனங்களும் ஹேக் செய்யப்பட்டுவிட்டன என்று அர்த்தமல்ல. பயன்படுத்தப்படும் சாப்ட்வேர் வெர்ஷந் தான் முக்கியம். பழைய சாப்ட்வேர்களில் தான் இந்த சிக்கல் உள்ளன. அதை சரிபார்த்து அப்டேட் செய்தாலே போதும். இந்த பாதுகாப்பு ஆபத்துகளை சரிசெய்ய ஆப்பிள் வெளியிட்டுள்ள உரிய சாப்ட்வேர் அப்டேட்களை உடனடியாக நிறுவுமாறு CERT-In அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஆப்பிள் நிறுவனத்தின் செக்யூரிட்டி அப்டேட் பக்கத்திலும் இது குறித்த தகவல்களைப் பார்க்கலாம். உங்கள் சாதனத்தை பாதுகாப்பாக வைத்திருக்க.. சாப்ட்வேர் வெர்ஷனை மட்டும் சரிபார்த்து, உரிய அப்டேட்டை நிறுவுவது முக்கியம்.எச்சரிக்கை
சாப்ட்வேர் பலவீனங்கள்
என்ன செய்ய வேண்டும்?