சமூக வலைதளங்களுக்கு தடை.. 13 வயதுக்கு உட்பட்டோர் இனி பயன்படுத்த முடியாது? லோக்சபாவில் மசோதா

  • டெல்லி: 13 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்கள் மற்றும் கேமிங் பிளாட்பார்ம்களில் கணக்கு தொடங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா நேற்று தாக்கலாகும் என்ற நிலையில் தள்ளிப்போய் உள்ளது. இந்நிலையில் தான் தனிநபர் மசோதா என்பது என்ன? இந்தியாவில் 13 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதற்கான சாத்தியம் இருக்கிறதா? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், எம்பிக்கள் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்யலாம். இந்நிலையில் தான் நம் நாட்டில் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்கள் மற்றும் கேமிங் பிளாட்பார்ம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி தனிநபர் மசோதா ரெடியாகி உள்ளது.

    Advertisement

    இந்த மசோதாவின் பெயர் 'The safeguarding Healthy Internet Environments for Little Digital - Natives' (Shield) Bill என்பதாகும். இதனை பாஜகவின் எம்பி பைஜெயந்த் பாண்டா கொண்டு வந்துள்ளார். இந்த மசோதாவை தமிழில் கூற வேண்டும் என்றால் ''டிஜிட்டல் தலைமுறையை சேர்ந்தவர்களுக்காக ஆரோக்கிமான முறையில் இன்டர்நெட் பயன்பாட்டை பாதுகாத்தல் (பாதுகாப்பு கவசம்) மசோதா'' என்று சொல்லலாம்.

    மசோதாவின் சாராம்சம்

    இந்த மசோதா நேற்று லோக்சபாவில் தாக்கல் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாகவே சபை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் தற்போது அதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த மசோதாவின்படி 13 வயதுக்குட்பட்டவர்கள் பெற்றோரின் அனுமதியின்றி சமூக வலைதளங்கள் மற்றும் கேமிங் பிளாட்பார்ம் உள்ளிட்டவற்றில் கணக்கு தொடங்க முடியாது.

    Advertisement

    இதனால் அது 13 வயதுக்கு உட்பட்டோரால் தனியாக சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கி பயன்படுத்த முடியாது. அதேபோல் சிறுவர் -சிறுமிகளை கண்காணிப்பது, அவர்களை பற்றிய விவரங்களை மற்றவர்கள் அறிந்து கொள்வதற்கும் தடை விதிக்க இந்த மசோதா உதவுகிறது. இந்த மசோதா நேற்று விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்படாத நிலையில் விரைவில் விவாதத்துக்கு வரலாம் என்று சொல்லப்படுகிறது.

    மறைமுக அஜெண்டா?

    இந்த மசோதா தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது. ஏனென்றால் சமீபத்தில் 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடந்த போராட்டம் சமூக வலைதளங்கள் வழியாக தான் ஒருங்கிணைக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்படுவோர் தான் இந்த போராட்டத்துக்கு முதுகெலும்பாக இருந்தனர். இதனால் குழந்தைகள் நலன் முக்கியம் என்பதோடு, கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு கூடியது போல் சோஷியல் மீடியாவால் பிற பிரச்சனைகளுக்கு வருங்காலத்தில் இளைஞர்கள் கூடாமல் இருப்பதை தடுக்கவும் இது ஒரு மறைமுக அஜென்டாவாக இருக்கலாம் என்றும் சிலர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இதனால் இந்த மசோதாவின் அடுத்தக்கட்ட நகர்வுகள் பற்றிய பார்வை முக்கியத்துவம் பெறுகிறது.

    Advertisement

    தனிநபர் மசோதா என்பது என்ன?

    அதேவேளையில் இன்னொரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அது என்னவென்றால் தனி நபர் மசோதா என்பது நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி அல்லது மத்திய அமைச்சர்கள் தான் கொண்டு வர வேண்டிய தேவையில்லை. ஆளும் கட்சியின் எம்பிக்கள், எதிர்க்கட்சியின் எம்பிக்கள் என்று யார் வேண்டுமானாலும் தனிநபர் மசோதாவை கொண்டு வரலாம்.

    மத்திய அரசு கண்டுகொள்ளாத சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு அல்லது குறிப்பிட்ட துறையில் மாற்றங்களை கொண்டு வரும் நோக்கில் இந்த தனிநபர் மசோதாக்கள் கொண்டு வரப்படும். இந்த தனிநபர் மசோதவை நினைத்த நேரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது. இதற்கு என்று தனிநாட்கள் ஒதுக்கீடு செய்து விவாதிக்கப்படும்.

    Advertisement

    அந்த மசோதாவில் உள்ள சாராம்சங்கள் ஏற்கப்பட்டு நிறைவேறினால் அதன்பிறகு ஜனாதிபதி ஒப்புதலுடன் இந்த மசோதா சட்டமாகும். ஆனால் இந்த தனிநபர் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறி சட்டமாவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு தான். சில மசோதாக்கள் மட்டுமே நாடாளுமன்றத்தில் நிறைவேறி சட்டமாகி உள்ளன. நம் நாடு சுதந்திரமடைந்த பிறகு வெறும் 12 தனிநபர் மசோதாக்கள் மட்டுமே சட்டமாகி உள்ளன. பெரும்பாலான தனிநபர் மசோதாக்கள் நாடாளுமன்றத்திலேயே முடக்கப்படுகின்றன. இதனால் இந்த மசோதா சட்டமாகுமா? என்பது கேள்வியாக உள்ளது.

    பைஜெயந்த் பாண்டா யார்? தமிழக தொடர்பு இதுதான்

    அதேபோல் தற்போது 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடைகோரும் தனிநபர் மசோதாவை பாஜக எம்பி பைஜெயந்த் பாண்டா கொண்டு வந்துள்ளார். இதனால் அதற்கு பாஜக எம்பிக்களின் ஆதரவு கூட கிடைக்கலாம். அப்படி நடந்தால் இந்த மசோதா நிறைவேற்றப்படலாம். ஏனென்றால் பைஜெயந்த் பாண்டா சாதாரணமானவர் கிடையாது. ஒடிசா மாநிலம் கேந்திரபாரா லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பைஜெயந்த் பாண்டா. நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம் கட்சியில் இருந்து இவர் பாஜகவில் இணைந்தார். இவர் பாஜகவின் மிகவும் முக்கியமான தலைவர்களில் ஒருவராக தற்போது உள்ளார். பாஜகவில் தேசிய துணை தலைவர்களில் ஒருவராக உள்ளார். அமித்ஷாவிற்கு மிகவும் நெருக்கமானவர். டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜகவை அரியணை ஏற்றி வைத்ததில் முக்கிய பங்காற்றினார்.

    Advertisement

    ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சியை வீழ்த்த டெல்லியில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பொறுப்பை ஏற்று செயல்பட்டு வென்று காட்டியவர் தான் பைஜெயந்த் பாண்டா. இதனால் இவரை தமிழக சட்டசபை தேர்தலையொட்டி பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக பாஜக மேலிடம் அனுப்பியது. ஆனால் தமிழகத்துக்கு அவர் சவால்களை எதிர்கொண்டார். அதிமுக - பாஜக கூட்டணிக்கு புதிய கட்சிகளை கொண்டு வர முடியாமல் தவித்தார். இதனால் பாதியல் மாற்றப்பட்டார். பைஜெயந்த் பாண்டாவிற்கு பதில் பியூஸ் கோயல் தமிழக தேர்தல் பொறுப்பாளராக மாற்றப்பட்டார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இதனால் 13 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்க கோரும் பைஜெயந்த் பாண்டாவின் தனிநபர் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறுமா? இல்லையா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    English Summary

    A private member's bill is set to be introduced in the Lok Sabha, proposing a barred on children under the age of 13 creating accounts on social media and gaming platforms. Although the bill was scheduled for introduction yesterday, it was postponed. Against this backdrop, let us examine what a private member's bill is and whether there is a possibility of banning children under 13 from using social media in India.