டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் விவகாரத்தில் இந்தியா கூட்டணி சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை சந்திக்க தலைமை நீதிபதி சூர்யகாந்த் மறுத்துள்ளார். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம் இப்போது பெரிதாக வெடித்துள்ளது. பிற தேர்தல் ஆணையர்களின் ஒப்புதல்கள் இல்லாமல் தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்ததாக புகார்கள் எழுந்தன. இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக இந்த பேரணிக்கு பிறகு தலைமை நீதிபதி சூர்யகாந்த்தை சந்திக்க இந்தியா கூட்டணி தலைவர்கள் திட்டமிட்டிருந்தனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் இன்று மாலை 4 மணி முதல் 5 மணிக்குள் தலைமை நீதிபதியை சந்திக்க நேரம் கேட்டிருந்தனர். தேர்தல் முறைகேடுகள் தொடர்பான தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் அளிக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர். இருப்பினும், அவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தலைவர்களுக்கும் மெயில் மூலம் பதில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில் அவர்கள் எழுப்ப விரும்பிய விவகாரங்கள் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருப்பதால்.. இந்த நேரத்தில் சந்திப்பது பொருத்தமானதாக இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றத்தின் நிர்வாகம் அரசின் செயல்பாட்டில் தலையிட முடியாது என்றும் கூறப்பட்டதாக தெரிகிறது. தங்களது அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டதாக கருதினால், நீதிமன்றத்தை நாடி நிவாரணம் கோரலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை SIRஇன்போது, தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், பட்டியல்களில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு சாதகமாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன. மேலும், SIR பணிகளை நிறுத்த வேண்டும், வாக்குத் திருட்டு முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன. கடந்த 10 மாதங்களில் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் குறைந்தது 14 முறை ஆட்சேபனைகளை பதிவு செய்ததாக வெளியான தகவல்களுக்கு பிறகே இந்த விவகாரம் தீவிரமடைந்துள்ளது. ஆனால், தேர்தல் ஆணையம் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுபோல ஆலோசனை வழங்குவது மாறுபட்ட கருத்துகள் எழுவது இயல்பானது என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. இருப்பினும், இந்த விவகாரத்தை பெரிதாக எடுத்து செல்லும் காங்கிரஸ் இன்று "சலோ டெல்லி - ஜனநாயகத்துக்கான பேரணி" என்ற பேரணியை அறிவித்துள்ளது. பிற்பகல் 1.30 மணிக்கு கன்னாட் பிளேஸ்-பர்கம்பா சாலை சந்திப்பில் இந்த பேரணி ஆரம்பிக்கும். இளைஞர்கள், எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்லவுள்ளதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார். முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை விஜய் சவுக்கில் எதிர்க்கட்சி எம்பிக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது 10 பேர் கொண்ட குழு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்கும் விவகாரம் குறித்து தலையிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.தலைமை நீதிபதி
தலையிட முடியாது
தேர்தல் ஆணையம்
இந்தியா கூட்டணி பேரணி