டெல்லி: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, கரப்பான் பூச்சி கட்சி சார்பில் மாணவர்கள், இளைஞர்கள் இரவிலும் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் கரப்பான் பூச்சி கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே மயக்கமடைந்திருக்கிறார்.
இன்று காலை நடந்த போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியிருந்தனர். அப்போதைக்கு போராட்டக்காரர்கள் கலைந்த சென்றிருந்தாலும், தற்போது மீண்டும் போராட்டக்காரர்கள் ஒன்றுகூட தொடங்கியிருக்கின்றனர்.
மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ராகுல் காந்தி தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். கரப்பான் பூச்சி கட்சி ஏற்கெனவே சொன்னதை போல, தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்திருக்கிறது. அதே நேரம் போலீசார் கைது செய்திருக்கும் போராட்டக்காரர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அக்கட்சியினர் வலியுறுத்தியிருக்கின்றனர். இந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டிருப்பதாகவும், இதற்கு போராட்டக்காரர்கள்தான் காரணம் என்றும்.. அவர்களில் சிலர் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதால் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட பல காவல்துறை அதிகாரிகள் காயமடைந்திருப்பதாகவும் டெல்லி போலீஸ் கூறியிருக்கிறது. இன்று இரவு போராட்டக்களத்திலிருந்து அதிரடி படையினர் வெளியேறியபோது, போராட்டக்காரர்கள் கை தட்டி, எங்கள் மீது நடத்திய வன்முறைக்கு நன்றி என்று கூறியிருக்கின்றனர்.