டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் அறிவித்துள்ளனர். மத்திய அரசுடன் நடந்த 3ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் வீடு திரும்புமாறு சிஜேபி வேண்டுகோள் விடுத்துள்ளது.
"கோரிக்கைகள் ஏற்கப்பட்டு இருப்பதால் போராட்டத்தை கைவிடுகிறோம். 4 வாரம் கழித்து மற்றொரு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. எங்களின் கோரிக்கைகள் நியாயமானது. அமைதியான முறையில் போராட்டம் நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினோம்" என சிஜேபி செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராடி வந்தனர். கரப்பான் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் பலரும் ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் 26 நாட்கள் உண்ணாவிரதமம் மேற்கொண்டார். அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், போலீசார் அவரை வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போராடி வந்த சிஜேபிக்கு இறுதியாக உடன்பாடு எட்டும் வகையில், சிஜேபியினரின் கோரிக்கையை ஏற்று மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் இன்று பிற்பகல் தனது பதவியை ராஜினாமா செய்தார். எனினும் தான் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என கரப்பான் கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே தெரிவித்தார். இந்த நிலையில், இன்று மாலை மத்திய அரசுடன் சிஜேபி மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுடைய குடும்பங்களுக்கு இழப்பீடாக தலா ரூ. 1 கோடியை வழங்க வேண்டும். ஜூலை 20 அன்று வன்முறையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என சிஜேபியினர் தெரிவித்தனர். கரப்பான் ஜனதா கட்சி முன்வைத்த மூன்று கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றதையடுத்து சிஜேபி கட்சி தனது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் கலைந்து செல்லுமாறும், வீடு திரும்பலாம் என்றும் சிஜேபி கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.