டெல்லி: தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை கண்டித்தும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில், இந்தியா கூட்டணி கட்சி சார்பில் இன்று பிரமாண்ட பேரணி நடக்கிறது. இதில் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) பங்கேற்காது என அதன் தலைவர் அபிஜித் தீப்கே தெரிவித்திருக்கிறார். இது இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
SIR நடவடிக்கை மூலம் கோடிக்கணக்கான வாக்காளர்கள் முறைகேடாக நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் விதமாக சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி ஊடகத்தில், தேர்தல் ஆணையர்கள் குறித்து தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதாவது.. SIR நடவடிக்கை தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2 ஆணையர்கள் சேர்ந்துதான் கூட்டாக முடிவெடுத்திருக்க வேண்டும். ஆனால், ஞானேஷ் குமார் மட்டும் இதில் தன்னிச்சையாக முடிவெடுத்தார் என்றும், நாங்கள் பல முறை ஆட்சேபனை செய்தும்.. அவர் எங்கள் கருத்துக்களை கண்டுக்கொள்ளவில்லை எனவும் மற்ற 2 ஆணையர்கள் குற்றம் சாட்டியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியை வெளியிட்டிருந்தது. இது போதுமே எதிர்க்கட்சிகளுக்கு! ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீவிரமாக களத்தில் இறங்கின. CJP ஒருபடி மேலே போய் போராட்டங்களை நடத்தியது. மும்பையில் CJP அமைப்பும், டெல்லியில் இடதுசாரி மாணவர், இளைஞர் அமைப்பும் தீவிர போராட்டங்களை நடத்தின. இதனால், மத்திய அரசு நெருக்கடியை எதிர்கொண்டது. சூழல் இப்படி இருக்கையில் இன்று இந்தியா கூட்டணி கட்சிகள் பேரணியை நடத்துகின்றன. இந்த பேரணியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், ஹேமந்த் சோரன், தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி, உத்தவ் தாக்ரே, சுப்ரியா சுலே, கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பேரணியில் பங்கேற்கின்றனர். தமிழகத்திலிருந்து திருமாவளவன், வைகோ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த பிரம்மாண்ட பேரணியில் CJP பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாங்கள் பங்கேற்க மாட்டோம் என அதன் தலைவர் அபிஜித் தீப்கே அறிவித்திருக்கிறார். டெல்லியில் மம்தா பானர்ஜியை சந்தித்து, தங்கள் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி தெரிவித்த தீப்கே, CJP அமைப்பு எந்த அரசியல் கட்சியையும் சாராத அமைப்பு என்றும்.. எனவே இந்த அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ள எதிர்க்கட்சிகள் நடத்தும் பேரணியில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என்றும் தெரிவித்திருக்கிறார். அதே சமயம் இந்த பேரணிக்கும், தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்திற்கும் ஆதரவு கொடுப்போம் எனவும் கூறியிருக்கிறார். இந்த பேரணியில் CJP பங்கேற்றிருந்தால், பேரணியின் தாக்கம் பல மடங்கு அதிகரித்திருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், நாங்கள் பங்கேற்கவில்லை என CJP அறிவித்திருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.ஆதரவு மட்டும்தான்.. பேரணியில் பங்கேற்க மாட்டோம்! மம்தாவை சந்தித்த பின் பிளானை அறிவித்த சிஜேபி