வீட்டை சுத்துப்போட்ட உளவுத்துறை.. எப்போ வேணாலும் கைது செய்யலாம்! CJP அபிஜித் தீப்கே குற்றச்சாட்டு!

  • டெல்லி: தேர்தல் ஆணையருக்கு எதிராகவும், காக்ரோச் ஜனதா கட்சி (CJP) நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் டெல்லியில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார் CJP தலைவர் அபிஜித் தீப்கே. ஆனால், போராட்டத்திற்கு முன்னதாகவே தன்னை கைது செய்ய உளவுத்துறை தீவிரம் காட்டி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    Advertisement

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக CJP தொடர்ந்து தீவிரமாக போராடி வருகிறது. ஆனால், இந்த போராட்டங்களில் ஈடுபட்டதற்காக CJP நிர்வாகிகள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். நியாயமான கோரிக்கைகளுக்காக போராடினால் சிறையா? என்று டென்ஷன் ஆகியிருக்கும் CJP அமைப்பினர் மிகப்பெரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கின்றனர்.

    Advertisement

    இன்று டெல்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில் போராட்டம் நடைபெற இருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னாட் பிளேஸ் சென்ட்ரல் பூங்கா மூடப்பட்டிக்கிறது. இருப்பினும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கையில் தேசிய கொடியுடன் போராட்டத்திற்கு வருவார்கள் என CJP நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

    இப்படி இருக்கையில், தன்னை உளவுத்துறை கண்காணித்து வருவதாகவம், எப்போது வேண்டுமானாலும் தான் கைது செய்யப்படலாம் என்றும் அபிஜித் அச்சம் தெரிவித்திருக்கிறார். "நாட்டின் தேசிய கொடியை ஏந்துவது குற்றமா? மத்திய உளவுத்துறையினர் எனது வீட்டை சுற்றி கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கெனவே சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இப்போது நாங்கள் போராடுகிறோம். போராட்டத்தை முடக்க சென்ட்ரல் பூங்கா மூடப்பட்டிருக்கிறது. நாங்கள் 100 இடங்களில் போராட்டத்தை அறிவிக்கிறோம் எனில், இந்த 100 இடங்களையும் அரசு மூடிவிடுமா?" என தீப்கே கேள்வி எழுப்பியிருக்கிறார்.

    Advertisement

    அரசு என்ன தடுப்புகளை அமைத்தாலும் போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என்று அபிஜித் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இந்த போராட்டத்தில் இடதுசாரி மாணவர் அமைப்பான AISA, SFI இளைஞர் அமைப்பான DYFI உள்ளிட்ட அமைப்புகளும் பங்கேற்கின்றன. கடந்த சில நாட்களாக AISA தலைவர் நேஹா போராவின் தலைமையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். அபிஜித் தீப்கேவை விட, போராட்டத்திற்கு தலைமை தாங்கும் திறன் நேஹாவுக்கு அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

    இதற்கு முன்னர் நடந்த போராட்டங்களில் பெரிய அளவுக்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. ஆனால், இன்று நடக்கும் போராட்டத்தில் நிச்சயம் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று டெல்லி போலீஸ் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Abhijit Deepke, leader of the Cockroach Janata Party (CJP), has called for a protest in Delhi against the Election Commissioner and the arrests of CJP office-bearers. However, he has alleged that intelligence agencies are actively working to have him arrested even before the protest can take place.