விஜய் பிரதமர் வேட்பாளரா? கோபப்படாமல் ரசிக்கும் பாஜக.. மோடி டீம் உற்சாகமடைய பின்னணி என்ன?

  • டெல்லி: 2029 நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி முதல்வர் விஜய்யை தேசிய அரசியலுக்கு கொண்டு வர வேண்டும், அவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்று தீவிரமாக காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன. முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் விவகாரம் தேசிய அரசியலில் தினமொரு விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.

    Advertisement

    அண்மையில் வெளியான இந்தியா டுடேவின் 'மூட் ஆஃப் தி நேஷன்' கருத்துக்கணிப்பில் விஜய் பிரதமர் ரேஸில் 9.2 சதவீத ஆதரவுடன் 3-வது இடத்தைப் பிடித்ததும், உ.பி., பிகார் மற்றும் தென் மாநிலங்களில் 'தேசிய வெற்றி கழகம்' என்ற பெயரில் யூனிட்டுகளைத் தொடங்க தவெக திட்டமிட்டு வருவதும் கூட்டணியில் உள்ள காங்கிரஸை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. ராகுலுக்கு பதிலாக விஜய்யை தேசிய அளவில் கொண்டு செல்ல தவெக திட்டமிட்டு வருகிறது.

    Advertisement

    ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைக்கு எதிராக தெற்கிலிருந்து ஒரு புதிய தலைவர் உருவாவதைக் கண்டு ஆவேசப்பட்டு எதிர்க்க வேண்டிய பாஜக தலைமை, இந்த விவகாரத்தில் அமைதியாக இருப்பதுடன், நிலைமையை உள்ளூர ரசித்து வருவதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    பாஜகவின் இந்த 'மௌனத்திற்கு' என்ன காரணம்?

    பிரதமர் மோடிக்கு எதிராக விஜய் முன்னிறுத்தப்படுவதை பாஜக வழக்கமான ஆவேசத்தோடு கண்டிக்காததற்குப் பின்னால் ஒரு பக்கா தேர்தல் கணக்கு ஒளிந்திருக்கிறது. விஜய்யின் இந்த தேசிய அரசியல் எழுச்சியும், பிரதமர் பதவிக்கான ஆசையும் உண்மையில் பாஜகவுக்குத்தான் மிகப்பெரிய அரசியல் ஆதாயத்தைத் தேடித்தரும் என டெல்லி மேலிடம் கருதுகிறது.

    Advertisement

    கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காமல், கூட்டணிக் கட்சிகளின் தயவோடு தட்டுத்தடுமாறி ஆட்சியை அமைத்த பாஜகவுக்கு, 2029 தேர்தல் வாழ்வா சாவா போராட்டமாக அமையப்போகிறது. தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சி 'இந்தியா' கூட்டணி மூலம் எதிர்க்கட்சிகளை ஓரணியில் மீண்டும் திரட்டத் தீவிரமாக முயன்று வருகிறது. இந்நிலையில், விஜய்யின் இந்தத் திடீர் என்ட்ரி, காங்கிரஸின் அச்சுறுத்தலை அடிமட்டத்திலேயே பலவீனப்படுத்த பாஜகவுக்குக் கிடைத்த ஒரு நல்வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

    தென் மாநிலங்களில் காங்கிரஸின் பலத்தை உடைக்கும் அஸ்திரம்

    தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா என பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும்தான் வலுவான ஆட்சிகளிலும், வாக்கு வங்கியிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. வட மாநிலங்களை விட, தென் மாநிலங்களில் பாஜகவுக்கு எதிரான அதிருப்தி வாக்குகள்மிக அதிகமாக உள்ளன. இந்த வாக்குகள் அனைத்தும் இயல்பாகவே காங்கிரஸ் பக்கம்தான் சென்றடையும் சூழல் நிலவியது.

    Advertisement

    ஆனால், அடுத்த பிரதமர் தெற்கிலிருந்துதான் வர வேண்டும் என்ற முழக்கத்தோடு விஜய் களமிறங்கி, தென் மாநிலங்களில் தவெக வேட்பாளர்களை நிறுத்தும்போது, பாஜகவுக்கு எதிரான வாக்குகள் காங்கிரஸ் மற்றும் தவெக இடையே இரண்டாக உடையும். இந்த வாக்கு வங்கிச் சிதறல், தென் மாநிலங்களில் பாஜகவுக்கு இருக்கக்கூடிய அச்சுறுத்தலை அடியோடு குறைத்துவிடும்.

    காங்கிரஸ் - தவெக மோதல்: மோடிக்கு உற்சாகம்!

    விஜய்யின் பிரதமர் கனவால் தற்போது தமிழகத்திலேயே ஆளுங்கூட்டணியில் விரிசல் விழுந்துள்ளது. "ராகுல் காந்தியை பிரதமராக்க நாங்கள் கட்சி ஆரம்பிக்கவில்லை" என்று தவெக கூற, "ராகுலை ஏற்காவிட்டால் ஆதரவை வாபஸ் பெறுவோம்" என தமிழக காங்கிரஸ் அமைச்சர்கள் மிரட்டத் தொடங்கியுள்ளனர்.

    Advertisement

    இந்த மோதல் தீவிரமடைந்து எதிர்க்கட்சிகளின் கூட்டணி உடையும்போது, அது பாஜகவின் தேசிய தேர்தல் பாதையை மேலும் எளிதாக்கும். தங்களுக்கு எதிரான வாக்கு வங்கியைப் பிரித்து, காங்கிரஸின் காலை வார ஒரு பலமான மாற்று சக்தி களத்தில் குதித்திருப்பதை பாஜக வியூகவாதிகள் ஒரு வரப்பிரசாதமாகவே பார்க்கின்றனர்.

    எனவே, விஜய் பிரதமராக வேண்டும் என்ற கோஷம் நாடு முழுவதும் வலுவடைவது பிரதமர் நரேந்திர மோடிக்கு கோபத்தை வரவழைக்கவில்ல.. மாறாக, 2029-ல் தனது வெற்றிப் பாதையை எளிதாக்கும் மறைமுக ஆயுதமாக விஜய் மாறுவதை பாஜக தலைமை உள்ளூர ரசித்து மகிழ்கிறது என்பதே டெல்லி அதிகார மையத்தின் தற்போதைய அரசியல் கணக்காக உள்ளது.

    English Summary

    CM Vijay as PM Candidate: Why BJP Is Enjoying the situation Instead of Opposing TVK