யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?

  • தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், நேற்று டெல்லி சென்று பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்த நிலையில் கூட்டணி கட்சியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் சந்திக்கவில்லை.

    Advertisement

    விஜய், தனது முதலாவது அதிகாரப்பூர்வ டெல்லி பயணத்தின் போது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியைச் சந்திக்காமல் சென்னை திரும்பியுள்ளார். இந்த நிலையில் வரும் ஜூன் மாதம் 11-ஆம் தேதி மீண்டும் டெல்லிக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கிறிஸ்டோபர் திலக் செய்தியாளர்களிடம் பேசுகையில், அடுத்தகட்ட டெல்லி பயணத்தின் போது, காங்கிரஸ் முக்கியத் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை முதல்வர் விஜய் நேரில் சந்தித்துப் பேச உள்ளார் என தெரிவித்தார். நேற்றைய விஜயின் டெல்லி பயணத்தில் சந்திக்காதது குறித்துப் பல்வேறு அரசியல் யூகங்கள் பரவி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

    தமிழக முதலமைச்சர் விஜய், தனது டெல்லி பயணத்தை முழுக்க முழுக்க ஒரு அரசுமுறை மற்றும் அதிகாரப்பூர்வப் பயணமாக (Official Visit) வைத்துக் கொள்ளவே விரும்புகிறார் என்று காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    ஏற்கனவே டெல்லி சென்றிருந்த முதல்வர் விஜய், நாட்டின் பிரதமரை நேரில் சந்தித்துத் தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரது அடுத்தகட்ட டெல்லி பயணம் ஜூன் மாதம் 11-ஆம் தேதிக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரண்டாவது பயணத்தின் போதுதான், காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர்களுடனான அரசியல் மற்றும் கூட்டணி சார்ந்த சந்திப்புகள் விரிவாக நடைபெறவுள்ளன.

    விஜய் டெல்லி சென்றிருந்த போது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்திக்காதது குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் கிளம்பின. அதற்கு விளக்கம் அளித்துள்ள கிறிஸ்டோபர் திலக், காங்கிரஸ் கட்சிக்குள்ளான சில முக்கிய அவசர ஆலோசனைகள் மற்றும் உட்கட்சி முடிவுகள் காரணமாகவே அந்தச் சந்திப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

    Advertisement

    குறிப்பாக, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் டெல்லியில் முகாமிட்டிருந்ததோடு, ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து கடந்த இரண்டு நாட்களாகக் காங்கிரஸ் மேலிடம் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது.

    இத்தகைய அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், தமிழக முதலமைச்சருடன் அமர்ந்து ஆறஅமரத் தொகுதிப் பங்கீடுகள் குறித்தோ அல்லது கூட்டணி குறித்தோ ஆழமாகப் பேச முடியாது என்பதைக் காங்கிரஸ் தலைமை உணர்ந்திருந்தது.

    அதேபோல, டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) சிலை திறப்பு விழா உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளிலும் முதல்வர் விஜய் பங்கேற்கவிருந்தார். தலைவர்களின் பிஸியான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அந்தத் திட்டங்களையும் தற்காலிகமாக ஒத்திவைத்துவிட்டு முதல்வர் சென்னை திரும்பியுள்ளார்.

    Advertisement

    எனவே, இந்தச் சந்திப்பு தள்ளிப் போனதில் எந்தவொரு உள்நோக்கமோ அல்லது நெகட்டிவான விஷயமோ இல்லை என்றும், இதில் யூகங்கள் கிளப்புவதற்கு எதுவுமே இல்லை என்றும் கிறிஸ்டோபர் திலக் கூறியுள்ளார்.

    English Summary

    Tamil Nadu Chief Minister Vijay is scheduled to make an official visit to Delhi on June 11, where he is expected to meet Congress leaders including Sonia Gandhi and Rahul Gandhi. Congress MP Christopher Tilak confirmed the visit, stating that the trip was postponed due to the party’s internal discussions and will strengthen the existing alliance. முதலமைச்சர் விஜய் ஜூன் 11 அன்று டெல்லி செல்ல உள்ளார். காங்கிரஸ் எம்.பி. கிறிஸ்டோபர் திலக் தெரிவித்தபடி, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்திப்பார்.