மும்பை: தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை அக்டோபர் 2-ம் தேதி முதல் நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்த உள்ளதாக கரப்பான் பூச்சி ஜனதா அறிவித்துள்ளது. மேலும், தேர்தல் விவகாரங்களில் நீதிமன்ற விசாரணைக்காக மட்டும் காத்திருப்பது தீர்வாகாது எனவும் கூறியுள்ளது.
மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், அது தொடர்பாக மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கினர்.
தேர்தல் ஆணையம் ஆளும் அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுவதாகவும், நாட்டின் ஜனநாயக தேர்தல் நடைமுறையின் நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினர். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பது கரப்பான் பூச்சி கட்சியின் கோரிக்கையாக உள்ளது. அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து, முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. மேலும், 2024ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் இருந்து 13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் நியாயமற்ற முறையில் நீக்கப்பட்டுள்ளதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது. தற்போது நடைபெறும் எஸ்ஐஆர் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், இனி வரும் தேர்தல்களை எஸ்ஐஆருக்கு முந்தைய 2025 வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டே நடத்த வேண்டும் என்றும் கரப்பான் பூச்சி ஜனதா கோரியுள்ளது. தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் தற்போதைய முறையையும் கரப்பான் பூச்சி ஜனதா விமர்சித்துள்ளது. பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் மட்டுமே முடிவு செய்யும் நடைமுறைக்கு பதிலாக, ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் இந்திய தலைமை நீதிபதி உள்ளிட்டோர் இடம்பெறும் சுதந்திரமான, நடுநிலையான அமைப்பு மூலம் தேர்தல் ஆணையர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என கரப்பான் பூச்சி ஜனதா வலியுறுத்தியுள்ளது. நாடு தழுவிய போராட்டத்தின் முதல் கட்டம் அக்டோபர் 2-ம் தேதி மும்பை சிவாஜி பூங்காவில் உள்ள 6/7-வது நுழைவாயில் அருகே மாலை 4 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பவர்கள் மகாத்மா காந்தி உருவம் இடம்பெற்ற சட்டைகளை அணிந்து, தேசிய கொடியுடன் வருமாறு கரப்பான் பூச்சி ஜனதா கேட்டுக்கொண்டுள்ளது. மும்பையை தொடர்ந்து கோவா, கொல்கத்தா, பாட்னா, உத்தரப் பிரதேசம், ராஞ்சி உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு, அக்டோபர் இறுதியில் டெல்லி ஜந்தர் மந்தரில் மிக பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான விவகாரங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பொதுநல மனுக்களின் விசாரணைக்காக காத்திருக்காமல் ஏன் போராட்டம் என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, நீதித்துறை மீதான அதிருப்தியை கரப்பான் பூச்சி கட்சி வெளிப்படுத்தியது. கடந்த காலங்களில் வாக்காளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உச்சநீதிமன்றம் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சில சம்பவங்களை சுட்டிக்காட்டிய கரப்பான் பூச்சி ஜனதா, நீதிமன்ற விசாரணைக்காக காத்திருப்பது மட்டும் தீர்வாகாது என்றும் தெரிவித்தது. தலைமை தேர்தல் ஆணையர் எஸ்ஐஆர் உள்ளிட்ட விவகாரங்களில் எடுத்த முடிவு தொடர்பாக மற்ற இரு தேர்தல் ஆணையர்களும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். கடந்த 10 மாதங்களில் மட்டும் 14 முறை ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பான தகவல் வெளியாகி நாட்டையே உலுக்கி இருந்த நிலையில் தான் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.கோரிக்கை
தேர்தல் ஆணையர்கள் தேர்வு செய்யும் முறை
நாடு தழுவிய போராட்டம்
உச்ச நீதிமன்றம்
பின்னணி