டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தை அறிவித்திருந்தது. சோனம் வாங்சுக் போராட்ட களத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ள போதிலும், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பெருந்திரளான மக்கள் ஜந்தர் மந்தரில் குவிந்து வருகிறார்கள். இதற்கிடையே போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீட் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர். அதில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கலந்து கொண்டு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
20 நாட்களை கடந்து அவரது உண்ணாவிரதம் தொடர்ந்த நிலையில், அவரை டெல்லி போலீசார் கட்டாயப்படுத்தி போராட்ட களத்தில் இருந்து சனிக்கிழமை அப்புறப்படுத்தினர். அவரது உடல்நிலை மோசமாக இருந்ததாகவும் நீதிமன்ற உத்தரவின்படியே அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் விளக்கம் தரப்பட்டது. இந்தச் சூழலில் தான் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் இன்று, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் மிக பெரியளவில் மக்கள் கூடி வருகிறார்கள். கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்தும் பேரணியில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள், இளைஞர்கள் மக்கள் திரண்டுள்ளனர். இதுவரை சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் ஜந்தர் மந்தர் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே காலை 10.15 மணியளவில் போராட்டக்காரர்கள் மீது டெல்லி போலீசார் தடியடி நடத்தினர். அனுமதி இல்லாமல் கூடியதாக சொல்லி டெல்லி போலீசார் தடியடி நடத்தினர். பிற்பகலில் நிலைமை இன்னும் மோசமானது. போராட்டக்காரர்களில் சிலர் நாடாளுமன்றத்தை நோக்கி செல்ல முயன்றதால் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டனர். மேலும், நாடாளுமன்ற வளாகமும் இதனால் மூடப்பட்டது.! மேலும், போராட்டக்காரர்களை நோக்கி துணை ராணுவப்படை துப்பாக்கியுடன் குறிவைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து டெல்லி முழுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லிக்கு வெளியில் இருந்து வருவோரை கடுக்கும் வகையில் முக்கிய நுழைவு வாயில்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பல அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற கூட்டத்தொடர் முழுவதும் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நியூ டெல்லி, மத்திய டெல்லி மற்றும் வடக்கு டெல்லியின் சில பகுதிகள் உயர் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள், வெடிகுண்டு தடுப்பு சோதனைகள், 24 மணி நேர ரோந்து உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "நாடாளுமன்ற கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர சூழ்நிலைகளைச் சமாளிக்க கூடுதல் போலீசார் தயார் நிலையில் உள்ளனர். சிசிடிவி கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" என்றார். ஜந்தர் மந்தர், நாடாளுமன்ற சாலை, சென்ட்ரல் விஸ்டா, கன்னாட் பிளேஸ், சங்கர் சவுக் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க விரைவு அதிரடிப் படையினரும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். சோனம் வாங்சுக் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள நிலையில், கரப்பான் பூச்சி கட்சி தலைவர் அபிஜித் திப்கே தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். இதற்கிடையே நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தில் அதிகளவில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என மருத்துவமனையில் இருந்தபடி சோனம் வாங்சுக் அழைப்பு விடுத்துள்ளார். அதேநேரம் டெல்லி போலீசார் நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்திற்கு தாங்கள் எந்தவொரு அனுமதியையும் அளிக்கவில்லை என அறிவித்துள்ளது. பொதுமக்கள் சட்ட ஒழுங்கை பாதுகாக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் போலீஸ் அனுமதி இல்லாமல் நடத்தப்படும் பேரணிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் டெல்லி முழுக்க பரபரப்பு நிலவுகிறது.சோனம் வாங்சுக்
துப்பாக்கி
போலீஸ் பாதுகாப்பு
சிறப்பு அதிரடிப்படை
நாடாளுமன்றம் முற்றுகை