48 மணி நேரக்கெடு! காக்ரோச் போராட்டம் வென்றால் இந்திய அரசியலில் பிரளயம் வெடிக்கும்! ஏன்?

  • டெல்லி: இந்திய ஜனநாயகத்தின் தூணாக கருதப்படும் தேர்தல் ஆணையத்தை உலுக்கும் வகையில் புதிய புயல் ஒன்று கிளம்பியுள்ளது. இளைஞர்களையும், சமூக ஊடகத் தலைமுறையினரையும் பெருமளவில் ஈர்த்துள்ள 'காக்ரோச் ஜனதா கட்சி' தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக 48 மணி நேரக் கெடு விதித்துள்ளது.

    Advertisement

    "ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும்.. தேர்தல் ஆணையத்தின் குளறுபடிகள் களையப்பட வேண்டும்,.. இல்லையென்றால் நாடு தழுவிய அளவில் மாபெரும் போராட்டம் வெடிக்கும்" என்று அக்கட்சியின் நிறுவனரான அபிஜீத் திப்கே பிரகடனம் செய்துள்ளார்.

    Advertisement

    இந்தப் போராட்டம் மட்டும் வெற்றி பெற்றால், அல்லது அவர்கள் வைக்கும் கோரிக்கைகள் ஏற்கப்பட்டால், அது இந்திய அரசியலில் ஏன் மிகப் பெரிய வரலாற்றுப் பிரளயத்தை உண்டாக்கும்? அவர்கள் முன்வைக்கும் மூன்று பிரதான கோரிக்கைகள் என்ன? சாமானிய மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும் விரிவான பார்வை இதோ.

    காக்ரோச் இயக்கம் என்றால் என்ன?

    இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம், அரசியல் அதிருப்தி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்களைக் கிண்டலாகக் குறிக்கும் வகையில் ஒருமுறை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பயன்படுத்திய "கரப்பான் பூச்சிகள்" என்ற சொல்லையே தங்களின் அடையாளமாக மாற்றி, 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) என்ற அரசியல் நையாண்டி மற்றும் எதிர்ப்பு இயக்கத்தை இளைஞர்கள் தொடங்கினர். சமூக ஊடகங்களில் அதிவேகமாகப் பரவிய இந்த அமைப்பு, ஏற்கனவே தர்மேந்திர பிரதான ராஜினாமாவிற்கு காரணமாக அமைந்தது.

    Advertisement

    தற்போது இந்த அமைப்பு நாட்டின் தேர்தல் நடைமுறைகள் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் வெளிப்படைத்தன்மை குறித்து தொடர்ந்து தீவிரமான கேள்விகளை எழுப்பி வருகிறது.

    காக்ரோச் ஜனதா கட்சியின் 3 அதிரடி கோரிக்கைகள்

    தேர்தல் ஆணையத்தில் மற்ற இரண்டு ஆணையர்களே 14 முறை தலைமை ஆணையருக்கு எதிராகக் கடிதம் எழுதிய விவகாரம் அம்பலமானதைத் தொடர்ந்து, இந்த அமைப்பு மூன்று முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது:

    கோரிக்கை 1: ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும்; குற்றவியல் விசாரணை தேவை

    48 மணி நேரக் கெடு: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அடுத்த 48 மணி நேரத்திற்குள் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
    குற்றவியல் நடவடிக்கை: வாக்காளர் பட்டியலில் திட்டமிட்டு குழப்பங்களை ஏற்படுத்தியதற்காக அவர் மீது கிரிமினல் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.
    யாருடைய உத்தரவு?: "வாக்குகளைத் திருட அல்லது வாக்காளர் பட்டியலை மாற்றியமைக்க அவருக்கு உத்தரவிட்டது யார்?" என்ற பின்னணி அதிகார அமைப்பை அவர் பகிரங்கமாக நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.

    Advertisement

    கோரிக்கை 2: தேர்தல்களை நிறுத்தி வைக்க வேண்டும்; ஜனவரி 2025 பட்டியலை மீட்டெடுக்க வேண்டும்

    தேர்தல் தற்காலிக நிறுத்தம்: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் (Special Intensive Revision - SIR) நேர்மையாக நடக்கும் வரை, வரவிருக்கும் அனைத்துத் தேர்தல்களையும் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்.
    பழைய வாக்காளர் பட்டியல் மறுசீரமைப்பு: சர்ச்சைக்குரிய SIR மூலம் மேற்கொள்ளப்பட்ட அனைத்து திருத்தங்களையும் ரத்து செய்துவிட்டு, ஜனவரி 2025 நிலவரப்படி இருந்த பழைய வாக்காளர் பட்டியலை உடனடியாக மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும்.
    சுதந்திரமான விசாரணைக் கமிஷன்: மக்கள் நம்பிக்கையைப் பெறக்கூடிய நடுநிலையான, சுதந்திரமான விசாரணைக் கமிஷனை அமைத்து, வாக்காளர் பட்டியலில் நடந்த அனைத்து முறைகேடுகளையும் விசாரிக்க வேண்டும்.
    ஆவணங்களை உச்ச நீதிமன்றம் பறிமுதல் செய்ய வேண்டும்: ஞானேஷ் குமாரின் தன்னிச்சையான முடிவுகளுக்கு முட்டுக்கட்டை போடத் தவறிய உச்ச நீதிமன்றம், இனிமேலாவது SIR தொடர்பான அனைத்து டிஜிட்டல் கோப்புகள், சர்வர் பதிவுகள் மற்றும் ஆவணங்களை உடனே நீதிமன்றக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து முடக்க வேண்டும்.

    Advertisement

    கோரிக்கை 3: 2023 தேர்தல் ஆணையர் நியமனச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்

    சட்டத் திருத்தம் ரத்து: மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 2023-ம் ஆண்டு தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். (இந்தச் சட்டத்தின்படி ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் தலைமை நீதிபதி நீக்கப்பட்டு, ஆளும்கட்சி பெரும்பான்மை கொண்ட குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது).
    புதிய நடுநிலை நடைமுறை: பொதுமக்களும், சிவில் சமூக அமைப்புகளும் நம்பக்கூடிய வகையில், ஆளுங்கட்சியின் தலையீடு இல்லாத ஒரு முற்றிலும் சுதந்திரமான நடைமுறையை வகுக்க புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும்.

    Advertisement

    இந்தக் கோரிக்கைகள் 48 மணி நேரத்திற்குள் நிறைவேற்றப்படாவிட்டால், நாடு தழுவிய அளவில் காலவரையற்ற பெருந்திரள் போராட்டம் நடத்தப்படும்; கோரிக்கைகள் வெல்லும் வரை போராட்டம் ஓயாது என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

    இந்தப் போராட்டம் மட்டும் வென்றால் இந்திய அரசியலில் ஏன் பிரளயமே வெடிக்கும்?

    இந்தக் கோரிக்கைகள் சாதாரணமாகத் தோன்றினாலும், இதில் ஒன்று கூட முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது இந்தியாவின் ஒட்டுமொத்த அரசியல் வரைபடத்தையே தலைகீழாக மாற்றிவிடும். அதற்கான 5 காரணங்கள்:

    1. அரசாங்கத்தின் அதிகார பலத்திற்குப் பெரும் அடி

    2023-ல் கொண்டுவரப்பட்ட நியமனச் சட்டத்தின் மூலம் தேர்தல் ஆணையத்தின் மீதான அரசின் பிடி வலுவடைந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இப்போது ஒரு மக்கள் போராட்டத்தின் அழுத்தத்தால் தேர்தல் ஆணையத்தின் தலைவர் பதவி விலக நேர்ந்தாலோ அல்லது 2023 சட்டம் ரத்து செய்யப்பட்டாலோ, அது தற்போதைய ஆளுங்கட்சிக்கு இதுவரை இல்லாத அளவுக்குப் பெரும் அரசியல் மற்றும் தார்மீகத் தோல்வியாக மாறும்.

    2. தேர்தல் முடிவுகள் மீதான சட்டரீதியான கேள்வி

    அரசியல் கட்சிகள் இதுவரை "வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) சரியில்லை" என்றுதான் வாதிட்டு வந்தன. ஆனால், இப்போது "வாக்காளர் பட்டியலே முறைகேடானது" என்ற குற்றச்சாட்டு உண்மையாகி, ஜனவரி 2025 நிலவரத்திற்குத் திரும்ப நேர்ந்தால், அதற்குப் பின் நடந்த மற்றும் நடக்கவிருக்கும் தேர்தல்களின் நம்பகத்தன்மை சர்வதேச அளவில் கேள்விக்குள்ளாகும். தற்போதைய ஆட்சி அதிகாரத்தின் ஜனநாயக அடித்தளமே அதிரும்.

    3. அதிகார வர்க்கத்தில் ஏற்படும் அச்சம்

    ஒரு தலைமைத் தேர்தல் ஆணையர் மீது கிரிமினல் விசாரணை நடத்தப்பட்டு, சிறை நடவடிக்கை பாயுமானால், "ஆளும் அரசாங்கங்கள் மாறினாலும் தாங்கள் சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்டால் எதிர்காலத்தில் தப்ப முடியாது" என்ற மிகப்பெரிய பயம் ஒட்டுமொத்த தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடமும், ஐஏஎஸ்/ஐபிஎஸ் அதிகார வர்க்கத்திடமும் ஏற்படும். இது ஆட்சியாளர்களின் தன்னிச்சையான கட்டளைகளுக்கு அதிகாரிகள் பணிவதைத் தடுக்கும்.

    4. எதிர்க்கட்சிகளுக்குக் கிடைக்கும் மாபெரும் ஆயுதம்

    தேர்தல் ஆணைய விவகாரத்தை எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே நாடாளுமன்றத்திலும் தெருக்களிலும் தீவிரமாகக் கையிலெடுத்துள்ளன. ஒருவேளை இளைஞர்களின் இந்த காக்ரோச் போராட்டம் டெல்லி 'ஜந்தர் மந்தர்' போன்ற இடங்களில் மக்கள் இயக்கமாக வெடித்தால், அது சுதந்திர இந்தியாவின் அன்னா ஹசாரே ஊழல் எதிர்ப்பு இயக்கத்தைப் போல ஓர் அரசியல் மாற்றத்தை நோக்கி நகரும்.

    5. ஜனநாயகத்தின் கடிவாளம் இளைஞர்கள் கைக்கு மாறுதல்

    பாரம்பரிய அரசியல் கட்சிகள் செய்ய முடியாத அழுத்தத்தை, சமூக ஊடகங்கள் மற்றும் தற்கால இளைஞர்களின் தன்னெழுச்சி இயக்கம் சாதித்துக் காட்டினால், அது தேர்தல் அரசியலில் பழைய தலைவர்களின் பாணியை மாற்றி, படித்த இளைஞர்களின் குரலைத் தீர்மானிக்கும் சக்தியாக மாற்றும்.

    தேர்தல் ஆணையத்தின் கதவுகளுக்குள் வைக்கப்பட்ட ரகசியக் குறிப்புகளால் தொடங்கிய இந்த நெருப்பு, இப்போது '48 மணி நேரக் கெடு' என்ற இறுதி எச்சரிக்கையோடு தெருக்களுக்கு வந்துள்ளது. இந்தக் கோரிக்கைகள் வெறும் ஒரு தேர்தல் ஆணையரின் நாற்காலியைப் பற்றியது மட்டுமல்ல.. ஒட்டுமொத்த இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலப் போக்கையே மாற்றியமைக்கக்கூடிய ஒரு முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

    English Summary

    Cockroach Janta Party 48-Hour Ultimatum to CEC Gyanesh Kumar: Why This Protest Could Shake Indian Politics