ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பள்ளியை ஆய்வு செய்ய சென்றபோது கரப்பான் பூச்சி கட்சி நிர்வாகிகள் தாக்கப்பட்டனர். இதற்கு பாஜக நிர்வாகிகளே காரணம் என சாடியுள்ள கரப்பான் பூச்சி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அபிஜீத் திப்கே, அவர்களை அடுத்த 48 மணி நேரத்தில் கைது செய்ய வேண்டும் என கெடு விதித்துள்ளார். இல்லையென்றால் பெரிய போராட்டம் வெடிக்கும் என கூறியுள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தை தொடர்ந்து கரப்பான் பூச்சி கட்சியினர் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி பள்ளிகளை ஆய்வு செய்யும் பிரசாரத்தை தொடங்கியது. இதில் அரசு பள்ளிகளுக்கு மக்களுடன் நேரில் சென்று கரப்பான் பூச்சி கட்சியினர் ஆய்வு செய்வார்கள். அங்கு போதியளவு அடிப்படை வசதிகள் இருக்கிறதா என்பதை அவர்கள் ஆய்வு செய்து வீடியோ எடுத்து பகிர்வார்கள். அதன்படி கரப்பான் பூச்சி கட்சியினர் பல்வேறு பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கரப்பான் பூச்சி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் அஷுதோஷ் ரங்கா தலைமையிலான குழுவினர் வெள்ளிக்கிழமை ஜெய்ப்பூர் மாவட்டம் ராம்புரா கன்வார்புரா கிராமத்தில் உள்ள தொடக்க பள்ளிக்கு சென்றனர். அப்போது சிலர் அவர்களை முற்றுகையிட்டு, அங்கிருந்து திரும்பி செல்லுமாறு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் கரப்பான் பூச்சி நிர்வாகிகள் சிலருக்கு காயம் ஏற்பட்டது. கார் கண்ணாடியும் உடைந்தன. இருப்பினும், இந்த சம்பவத்திற்கு கிராம மக்கள் காரணமில்லை என அஷதோஷ் ரங்கா கூறினார். சொல்லப்போனால் தங்களை கிராமத்திற்கு அழைத்ததே கிராம மக்கள் தான் என கூறியுள்ள அஷதோஷ் ரங்கா, பாஜகவால் அழைத்து வரப்பட்ட ரவுடிகளே தங்களை தாக்கியதாக குற்றஞ்சாட்டினார். தாக்குதல் தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக கரப்பான் பூச்சி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அபிஜீத் திப்கேவும் கண்டனம் தெரிவித்துள்ளார். பள்ளியின் மோசமான நிலையை ஆய்வு செய்யவே தங்கள் குழு அங்கு சென்றதாக அபிஜீத் திப்கே தெரிவித்துள்ளார். அந்த பகுதியில் குழந்தைகளுக்கு மாட்டு கொட்டகையில் வைத்து பாடம் நடத்தப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இதனை வெளிச்சத்துக்கு கொண்டு வரவே அஷ்தோஷ் ரங்கா அங்கு சென்றதாகவும், ஆனால் அவரும் அவரது குழுவினரும் தாக்கப்பட்டதாகவும் திப்கே கூறினார். மேலும், சேதமடைந்த பள்ளிகளின் போட்டோ மற்றும் வீடியோக்களை யாரும் எடுக்கக்கூடாது என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறியுள்ள திப்கே, இந்த உத்தரவை அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், பள்ளியின் சீரமைப்புப் பணிகள் தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள திப்கே, தங்கள் குழுவினரை தாக்கிய பாஜக ஆதரவாளர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வீடியோவை வெளியிட்டுள்ள அபிஜீத் திப்கே, "உங்களுக்கு 48 மணி நேரம் டைம் தருகிறோம். அதற்குள் பள்ளி சீரமைப்பு பணிகள் தொடங்குங்கள். மேலும், தாக்குதல் நடத்திய பாஜக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டத்தை தொடங்கும். நான் நேரடியாக ஜெய்ப்பூருக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடுவேன்" என்றார். முதலில் ஆன்லைன் நையாண்டி இயக்கமாக உருவான கரப்பான் பூச்சி கட்சியினர், பின்னர் நீட் லீக் உள்ளிட்ட கல்வி பிரச்சினைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன் 6ஆம் தேதி போராட்டத்தைத் தொடங்கியது. இந்த போராட்டம் பெரிதாக வெடித்த நிலையில், அப்போது கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் தனது பதவியை செய்த பிறகு, ஜூலை 25ஆம் தேதி அந்த போராட்டம் முடிவடைந்தது. அது முடிந்தவுடன் ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுக்க உள்ள பள்ளிகளை ஆய்வு செய்யும் இயக்கத்தை கரப்பான் பூச்சி கட்சி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.தாக்குதல்
பாஜக காரணம்
குற்றச்சாட்டு
48 மணி நேரம் டைம்