டெல்லியில் வாள் - கத்தியுடன் கிளம்பிய போராட்டக்காரர்கள்.. போலீசாருடன் மோதல்.. கண்ணீர் புகை வீச்சு

  • டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டக்காரர்கள், போலீஸ்காரர்கள் இடையே இரவில் மோதல் வெடித்துள்ளது. வாள், கத்தியுடன் கிளம்பிய போராட்டக்காரர்களை போலீசார் தடுக்க முயன்றபோது அவர்கள் கல், பாட்டில் வீச்சில் ஈடுபட்டனர். இதில் 2 உதவி காவல் ஆணையர்கள் உள்பட மொத்தம் 5 பேர் காயமடைந்துள்ள நிலையில் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டுள்ளது. மேலும் பதற்றம் நிலவி வரும் நிலையில் இண்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    'நீட்' வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்தை நோக்கி நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் சென்றபோது தடியடி நடத்தப்பட்டது. இதனால் டெல்லியே போர்க்களமானது.

    Advertisement

    அதன்பிறகும் தொடர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது மீண்டும் அங்கு மோதல் வெடித்துள்ளது.

    டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியின் அருகே உள்ள டோல்ஸ்டாய் மார்க் பகுதியில் போராட்டக்காரர்கள் சிலர் கூட்டமாக கைகளில் கட்டை, கத்தி, வாள் வைத்து கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது அவர்கள் கல், பாட்டில் வீசியதோடு, வாள் மற்றும் கத்தியையும் வீசி உள்ளனர். இதில் 2 உதவி காவல் ஆணையர்கள், 2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 பேர் காயமடைந்துள்ளனர்.

    Advertisement

    இதனால் போலீசார் தங்களின் பாதுகாப்புக்காக கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். சுமார் 2 முதல் 3 கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். அதன்பிறகு மொத்தமாக போராட்டக்காரர்கள் அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்தப்பட்டனர். தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    அதோடு ஜந்தர் மந்தரில் நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவு கோரியும், நேரில் வந்து சப்போர்ட் வழங்கும்படியும் சமூக வலைதளங்கள் வழியாக பலரும் அழைப்பு விடுத்து வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் நாளை காலை 6 மணி வரை டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் இண்டர்நெட் சேவை தடை செய்யப்பட்டுள்ளது.

    English Summary

    A clash has once again erupted between protesters and police at Delhi's Jantar Mantar during the night. When police attempted to stop protesters who had arrived armed with swords and knives, the protesters resorted to pelting stones and bottles. Five people, including two Assistant Commissioners of Police, were injured in the incident, and tear gas shells were fired. Amidst the prevailing tension, internet services have been suspended.