டெல்லி: "கரப்பான் பூச்சி கட்சி.." இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த பெயரை யாராவது சொல்லியிருந்தால், பெரும்பாலானோர் என்னப்பா பெயர் இது என சிரித்திருப்பார்கள். சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இன்னொரு மீம் பக்கமோ அல்லது அரசியலை நக்கல் செய்யும் ஒரு பேஜ் என்றே பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது!
டெல்லி முதல் மும்பை வரை ஆயிரக்கணக்கான மாணவர்களை தெருக்களில் இறக்கியது இந்த கரப்பான் பூச்சி இயக்கம்தான். மத்திய அரசை பல சுற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்தது இதுதான். இறுதியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா வரை அரசியல் அழுத்தத்தை உருவாக்கியதும் இந்த இயக்கம் தான். இதை எல்லாம் செய்து காட்டியது தான் அந்த கரப்பான் பூச்சி கட்சி தான்.
ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இது வழக்கமான ஒரு அரசியல் கட்சி அல்ல. தேர்தலில் போட்டியிடவில்லை. இவர்களுக்கு எம்பி, எம்எல்ஏக்களும் இல்லை. கட்சி அலுவலகங்கள் இல்லை. இருந்தது ஒரே ஒரு விஷயம்... சமூக வலைத்தளங்களில் உருவான இளைஞர்களின் கோபம். ஆனால், மிக பெரிய அரசியல் கட்சிகளால் செய்ய முடியாத ஒன்றை இவர்கள் செய்து காட்டியிருக்கிறார்கள். நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் நடந்த முறைகேடுகள், கேள்வித்தாள் லீக், மாணவர்களின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பிய இவர்கள் முதலில் இணையத்தில் தங்கள் குரல்களை எழுப்பினர். அதற்கு அடித்தளமிட்டது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்து. அவர் பொது நல வழக்கு ஒன்றில், வேலையில்லாமல் வழக்கு போடும் இளைஞர்களை கரப்பான் பூச்சி உடன் ஒப்பிட்டு பேசியதாக தகவல் பரவியது. அதுவே இந்த இயக்கம் பிறக்க காரணமாக அமைந்தது. தலைமை நீதிபதி தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக விளக்கம் கொடுத்தாலும் இந்த பெயர் அப்படியே நின்றுவிட்டது. முதலில் ஆன்லைன் இயக்கமாக தொடங்கிய கரப்பான் பூச்ச கட்சி அங்கிருந்து மெதுவாக போராட்டமாக மாறியது. முதலில் டெல்லி, பெங்களூர், நாக்பூர் என சிறியளவில் ஒரு நாள் அடையாள போராட்டங்களை நடத்தினர். பிறகு கடந்த மாதம் ஜந்தர் மந்தரில் சில நூறு மாணவர்களுடன் தொடங்கிய போராட்டம், சில வாரங்களில் பல நூறு பேரை ஈர்த்தது. சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் நடத்திய உண்ணாவிர போராட்டம் இதற்கு மேலும் வலு சேர்ந்தது. அதைத் தொடர்ந்து திங்கள்கிழமை மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க நடத்தப்பட்ட தடியடி ஆதரவை அதிகரிக்கவே வைத்தது. டெல்லியில் மட்டும் நடந்து வந்த போராட்டம் அந்த சம்பவத்திற்கு பிறகே நாடு முழுக்க பரவியது. ஒவ்வொரு கைதும், ஒவ்வொரு போலீஸ் நடவடிக்கையும், ஒவ்வொரு வைரல் வீடியோவும் இந்த இயக்கத்திற்கு புதிய ஆதரவாளர்களை சேர்த்தது. மும்பையில் போலீஸ் வேனை மறித்து நின்ற ரியா ஆஹிர், கைது செய்யப்பட்ட மாணவர்களை காப்பாற்ற முயன்ற இளைஞர்கள், 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக், சமூக வலைத்தளங்களில் குவிந்த ஆதரவு... இவை அனைத்தும் சேர்ந்து இந்தப் போராட்டத்தை தேசிய விவாதமாக மாற்றின. ஆரம்பத்தில் போராட்டத்தை மத்திய அரசு பெரிதாக எடுத்து கொள்ளவில்லை என்பதே உண்மை. அப்படி இதை பெரிதாக எடுத்திருந்தால் மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பே அமைச்சரவை மாற்றத்தை நடத்தியிருப்பார்கள். ஆனால், அதை செய்யாமல்.. தேர்வு சீர்திருத்தம், கேள்வித்தாள் லீக் தடுப்பு, மாணவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யக் கூடாது என சமரச முயற்சிகளே நடந்தன. ஆனால் மாணவர்கள் ஒரு கோரிக்கையில் மட்டும் பின்வாங்கவில்லை. "தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்" என்பதுதான் அது. இறுதியில் தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய வைத்ததன் மூலம் இரண்டு மாதங்களுக்கு முன்பு இணையத்தில் ஒரு "மீம்" போல தோன்றிய கரப்பான் பூச்சி கட்சி மிக பெரிய விஷயத்தைச் செய்து காட்டியது. இந்த இரண்டு மாதங்கள் இந்திய அரசியலுக்கு ஒரு முக்கியமான பாடத்தை சொல்லியிருக்கின்றன. இன்றைய தலைமுறையின் போராட்டம் தெருக்களில் மட்டும் நடப்பதில்லை; அது சமூக வலைத்தளங்களில் தொடங்கி, மக்கள் மனதில் வேரூன்றி, இறுதியில் ஆட்சியின் கதவையும் தட்டும் சக்தியாக மாறிவிடுகிறது.கரப்பான் பூச்சி கட்சி
பெயர் காரணம்
மக்கள் போராட்டம்
மும்பை
ராஜினாமா