தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!


  • டெல்லி: நீட், சிபிஎஸ்இ தேர்வுகள் குளறுபடி, பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி கேஸ் விலை உயர்வு பிரச்சனைகள் பாஜகவுக்கு எதிராக களமாட சூப்பரான வாய்ப்பை கொடுத்திருக்கிறது. இந்நிலையில் ஜூன்.8ம் தேதி காங்கிரஸ் டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. இருப்பினும், தமிழகத்தில் திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகியதால், இந்த கூட்டத்தில் திமுக பங்கேற்குமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

    Advertisement

    பாஜகவை தேசிய அளவில் எதிர்க்க வாய்ப்பு அமைந்திருந்தாலும், இந்த எதிர்ப்பில் திமுக தனித்து நிற்குமா? அல்லது காங்கிரஸுடன் சேர்ந்து நிற்குமா என்பது கேள்விக்குறிதான்.

    Advertisement

    நீட் முறைகேடு

    மருத்துவ படிப்புக்காக நீட் நுழைவுத்தேர்வு நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி மூலம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2026-2027 கல்வி ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் 552 நகரங்களிலும், துபாய் உள்ளிட்ட வெளிநாட்டு நகரங்கள் என மொத்தம் 5,432 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன.

    ஆனால், தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் கசிந்தது. இதனால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சியின் அலட்சியத்தால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

    சிபிஎஸ்இ தேர்வு முறைகேடு

    அதேபோல, சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வுத் தாள்கள் மதிப்பீட்டிலும் முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. சிபிஎஸ்இ போன்ற தேசிய அளவிலான வாரியங்கள் தங்களின் விடைத்தாள்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றும்போது கடுமையான பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றும். விடைத்தாள்களின் தையல்களைப் பாதுகாப்பாகப் பிரித்து, அதிநவீன தானியங்கி ரோபோடிக் ஸ்கேனர்கள் மூலம், மிகத் துல்லியமான தரத்தில் (குறைந்தபட்சம் 300 DPI) ஸ்கேன் செய்து மதிப்பீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும்.

    Advertisement

    18.5 லட்சம் மாணவர்கள்

    ஆனால் இந்த பணிகளை மேற்கொள்ள டெண்டர் பெற்ற நிறுவனம், தானியங்கி ரோபோடிக் ஸ்கேனர்களுக்கு பதில், சாதாரண மொபைல் ஸ்கேனர்களை பயன்படுத்தியிருக்கிறது. இதனால் சுமார் 18.5 லட்சம் மாணவர்களின் தேர்வு முடிவுகள் பாதிக்கபட்டிருக்கின்றன. இந்த இரண்டு விவகாரங்களும் மத்திய அரசுக்கு எதிரான மனோ நிலையை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.

    பாஜக மீதான அதிருப்தி

    இதுபோக பெட்ரோல், டீசல் விலை உயர்வு, எல்பிஜி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் வணிக சிலிண்டர்களின் விலை உயர்வும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கெல்லாம் உடனடியாக போராட்டத்தை எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் இதை மெதுவாகத்தான் அணுகி வருகிறது. பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து தற்போது அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

    Advertisement

    அனைத்துக்கட்சி கூட்டம்

    ஜூன்.8ம் தேதி இந்த கூட்டம் டெல்லியில் நடைபெறும். இதில் இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதில் திமுக பங்கேற்குமா என்பது டவுட்டுதான். தமிழகத்தில், காங்கிரஸ் விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் தற்போது திமுக காங்கிரஸ் மீது கடுப்பில் இருக்கிறது. இப்படி இருக்கையில், டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் எப்படி திமுக எம்பிக்கள் பங்கேற்பார்கள்? என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

    திமுகவின் நிலைப்பாடு என்ன?

    காங்கிரஸை காரணம் காட்டி பாஜக எதிர்ப்பில் பின் வாங்கப்போகிறதா திமுக? அல்லது மீண்டும் காங்கிரஸுடன் உறவு வைத்துக்கொள்ளப்போகிறதா ஒருவேளை அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்காமல் மாநில அளவில் தனித்து நின்று பாஜக எதிர்ப்பை காட்டப்போகிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்படி நடந்தால், தேசிய அளவில் பாஜக எதிர்ப்பு நீர்த்து போகும். ஏனெனில் மக்களவையில் 5வது பெரிய கட்சியாக திமுக இருக்கிறது. இதன் சப்போர்ட் இல்லாமல் காங்கிரஸ் பாஜக எதிர்ப்பை கையில் எடுத்தால், அந்த எதிர்ப்பு அவ்வளவு வலிமையானதாக இருக்காது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

    English Summary

    DMK: The irregularities surrounding the NEET and CBSE examinations, along with the rising prices of petrol, diesel, and LPG, have presented an excellent opportunity for the BJP's opponents to take the fight to the ruling party. Against this backdrop, the Congress party has convened an all-party meeting in Delhi on June 8th. However, given that the Congress has withdrawn from its alliance with the DMK in Tamil Nadu, it remains a matter of speculation whether the DMK will participate in this meeting.