2029ல் கூட ராகுல் பிரதமராவதில் சிக்கல்? INDIA கூட்டணிக்குள்ளேயே ஏகப்பட்ட குழப்பம் இருக்கே!

  • டெல்லி: 2029 லோக்சபா தேர்தலில் பிரதமர் பதவிக்கான போட்டியில் ராகுல் காந்தியை முன்னிறுத்த காங்கிரஸ் தயாராகி வரும் நிலையில், இந்தியா கூட்டணிக்குள் இதற்கு ஒருமித்த ஆதரவு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரதமர் வேட்பாளர் யார் என்பதை காட்டிலும் இந்தியா கூட்டணி இன்னும் முழுமையான தேசிய அரசியல் அமைப்பாக உருவாகாததே காங்கிரஸுக்கு முக்கிய சிக்கலாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    2029 லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகள் இருந்தாலும் கூட இப்போதே பிரதமர் வேட்பாளர் குறித்த விவாதம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு கூட்டணியை முன்னிறுத்து வருகின்றன. இதில் இந்தியா கூட்டணியில் இப்போது மீண்டும் விவாதம் எழுந்துள்ளது.

    Advertisement

    யார் பிரதமர்

    சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி அளித்த பேட்டி இந்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. ராகுல் காந்தி லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக இருப்பதால் பிரதமர் பதவிக்கு உரிமை கோருவதில் தவறில்லை என்றும் ஆனால் எதிர்க்கட்சிகள் 2029 தேர்தலில் வெற்றி பெற்றால் யார் பிரதமராக வேண்டும் என்பதை தேர்தலுக்குப் பிறகே முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 1996ல் ஜோதி பாசுவை பிரதமராக்குவது தொடர்பாக சிபிஎம் எடுத்த நிலைப்பாட்டையும் இதற்கு உதாரணமாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ராகுல் காந்தி

    இதற்கு மாறாக காங்கிரஸ் தலைமை ராகுல் காந்தியை இப்போதே முன்னிறுத்த ஆரம்பித்துவிட்டது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், "2029ல் இந்தியா கூட்டணியின் முகம் ராகுல் காந்திதான்" என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். கே.சி. வேணுகோபால் மட்டுமின்றி பல்வேறு காங்கிரஸ் கட்சி தலைவர்களும் இதே கருத்தை தான் சொல்கிறார்கள்.

    Advertisement

    இந்தியா கூட்டணி

    இந்தியா கூட்டணியின் நோக்கம் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவது இல்லை.. எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிவதை தடுத்து பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைந்த போட்டியை உருவாக்குவதே இதன் நோக்கம். 2024 தேர்தலில் பாஜக தனியாக 240 இடங்களில் வென்ற நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகள் மொத்தமாக 234 இடங்களை கைப்பற்றின. குறிப்பாக உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி காங்கிரஸ் கூட்டணி பாஜகவுக்கு மிக பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. சமாஜ்வாதி கட்சி 37 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வெற்றி பெற்றது.

    ஆனால், இந்த வெற்றி கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்று கருத முடியாது. பல மாநிலங்களில் கூட்டணி கட்சிகள் வலுவான பிராந்திய தலைவர்கள் மற்றும் வாக்கு வங்கிகளைக் கொண்டுள்ளன. சில மாநிலங்களில் அவை ஒன்றுக்கொன்று நேரடி போட்டியாளர்களாகவும் உள்ளன. இதனால் சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் பெற்றுள்ள அரசியல் பலத்தை நேரடியாக ராகுல் காந்தியின் அரசியல் ஆதரவாக காங்கிரஸ் கணக்கிட முடியாது.

    Advertisement

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் இந்த முரண்பாடு மேலும் வெளிப்படுகிறது. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் சில தலைவர்கள், 2029 பிரதமர் பதவிக்கு விஜய்யை முன்னிறுத்தி வருகின்றனர். தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ், ராகுல் காந்தி உதவியுடன் விஜய் 2029ல் பிரதமர் பதவியை அடைவார் என்று கூட கூறியிருந்தார். இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறார்கள்.

    இவை எல்லாம் சேர்த்தே இந்தியா கூட்டணியின் அடிப்படை சிக்கலை வெளிப்படுத்துகிறது. டெல்லியில் கூட்டணியில் இருக்கும் கட்சிகள், மாநிலங்களில் ஒன்றுக்கொன்று போட்டியாளர்களாக உள்ளன. கேரளாவில் காங்கிரஸும் இடதுசாரிகளும் போட்டியிடுகின்றன.. மேற்கு வங்கத்தில் காங்கிரஸ்- திரிணாமுல் இடையே இன்னும் நல்லுறவு இல்லை. டெல்லி, பஞ்சாபில் காங்கிரஸ்- ஆம் ஆத்மி நேர் எதிராகவே உள்ளன.

    Advertisement

    ஏன் முக்கியம்

    2024ல் பாஜகவை பெரும்பான்மை பெற விடாமல் தடுக்க இந்தியா கூட்டணி அப்போது போதுமானதாக இருந்தது. ஆனால் 2029ல் கேள்வி வேறாக இருக்கும். பாஜகவை தோற்கடித்த பிறகு யார் பிரதமர்? யாருக்கு முதல் உரிமை? தொகுதிகள் எப்படி பகிரப்படும்? கூட்டணி கட்சிகளின் வாக்காளர்கள் யாரை ஆதரிப்பார்கள்? என பல கேள்விகள் எழும்.

    ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படலாம். ஆனால் அதற்கு கூட்டணி கட்சிகள் முழுமையான ஆதரவை கொடுக்குமா என்பதுதான் கேள்வி. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது ஒரு விஷயம். அது கூட செய்துவிடலாம். ஆனால், அந்த கூட்டணிக்கு ஒரு பொதுவான தலைவரை உருவாக்கி, அவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி, அதை அனைவரையும் ஏற்றுக்கொள்ள வைப்பது வேறு விஷயம். அதை 2029ல் செய்ய முடியுமா என்ற கேள்வியே இப்போது இந்தியா கூட்டணிக்கு இருக்கிறது.

    English Summary

    Congress is preparing to project Rahul Gandhi as a potential Prime Ministerial face for the 2029 Lok Sabha election(இந்தியா கூட்டணி சிக்கல்கள்): INDIA Bloc Faces Questions over PM Face.