ராகுல் மனதில் திடீர் மாற்றம்.. கரப்பான் பூச்சி கட்சிக்கு போன அழைப்பு.. அப்போ இனிமேல் எல்லாமே மாறுமே!

  • டெல்லி: மத்திய அரசுக்கு எதிராக கரப்பான் பூச்சி கட்சி தீவிரமாக போராடி வந்தாலும் கூட அதன் தலைவர்களை காங்கிரஸ் தள்ளியே வைத்திருந்தது. குறிப்பாக கரப்பன் பூச்சி கட்சியை ஆம் ஆத்மியின் B டீம் என கூட விமர்சித்தனர். ஆனால், அந்த நிலைப்பாட்டில் இப்போது மாற்றம் ஏற்பட தொடங்கியுள்ளது. கரப்பான் பூச்சி கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து அழைப்பு போய் இருக்கிறது.

    Advertisement

    கடந்த சில காலமாகவே மத்திய அரசுக்கு கடும் அழுத்தம் கொடுத்து வரும் அமைப்பாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இருக்கிறது. இளைஞர்கள் அதிகம் இருக்கும் கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டம் காரணமாகவே மத்திய அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் கூட பதவி விலகும் சூழல் ஏற்பட்டது. இப்போது தேர்தல் ஆணையர் விவகாரத்தையும் கரப்பான் பூச்சி கட்சி கையில் எடுத்துள்ளது.

    Advertisement

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சி

    ஆனால், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், இத்தனை நாட்களாக கரப்பான் பூச்சி கட்சியை அருகே நெருங்கவிடவில்லை. குறிப்பாக சில காங்கிரஸ் தலைவர்கள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை ஆம் ஆத்மியின் B டீம் என கூட விமர்சித்தனர். ஆனால், அந்த நிலைப்பாட்டில் இப்போது மாற்றம் ஏற்பட தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தலைவர்களுக்காக ராகுல் காந்தி ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்துக்கு கரப்பான் பூச்சி ஜனதா தலைவர்களையும் அழைக்க காங்கிரஸ் முயன்றதாக கூறப்படுகிறது.

    சமூக வலைத்தளங்களில் கடந்த மே மாதம் பிரபலமான கரப்பான் பூச்சி கட்சி, ஜூன்- ஜூலை மாதங்களில் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற நீட் லீக் போராட்டங்களை முன்னின்று நடத்தியது. இந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக அப்போதைய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். அப்படி நடந்த பிறகும் கூட கரப்பான் பூச்சி கட்சியை ஆம் ஆத்மி கட்சியின் இன்னொரு அமைப்பு என்றே காங்கிரஸில் ஒரு பிரிவினர் சாடி வந்தனர்.

    Advertisement

    போராட்டம்

    இந்த சூழலில் கடந்த திங்கள்கிழமை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடந்த போராட்டம் காங்கிரஸின் மதிப்பீட்டை மாற்றியது. அன்றைய தினம் டெல்லி முழுவதும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தன. சுமார் 7,000 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தனர். இதனால் கரப்பான் பூச்சி கட்சியினரால் நீட் எதிர்ப்பு போராட்டங்களை போல மிக பெரிய போராட்டத்தை நடத்த முடியாமல் போனது. இவை காங்கிரஸ் கவனத்திற்கும் சென்றதாகவே தெரிகிறது.

    இதைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, தேர்தல் ஆணையருக்கு எதிரான அனைத்து போராட்டங்களும் ஒரே போராட்டத்தின் பகுதிகள்தான் என்று தெரிவித்தார். அவர் மேலும், "நீங்கள் எந்த அமைப்பை சேர்ந்தவராக இருந்தாலும், அரசியலமைப்பைப் பாதுகாக்கிறீர்கள் என்றால் நாங்கள் உங்களுடன் இருப்போம். உங்களுக்கு உதவுவோம்" என்று பேசியிருந்தார்.

    Advertisement

    ராகுல் சொன்ன வார்த்தை

    அதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை, ராகுல் காந்தியின் தேநீர் விருந்துக்கு கரப்பான் பூச்சி கட்சி தலைவர்களை அழைக்க காங்கிரஸ் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான பிரசாந்த் பூஷன் மூலம் கரப்பான் பூச்சி கட்சிக்கு காங்கிரஸ் மெசேஜ் அனுப்பி இருக்கிறது. ஆனால் அப்போது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் தீப்கே மகாராஷ்டிராவில் இருந்தார். மற்ற முக்கிய தலைவர்களான அசுதோஷ் ரங்கா, சௌரவ் தாஸ், அஜின்க்யா ஷிண்டே ஆகியோர் ஜந்தர் மந்தரில் திடீர் போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்டு இருந்தனர். இதனால் தான் கரப்பான் பூச்சி ஜனதா இதில் பங்கேற்கவில்லை.

    Advertisement

    எல்லாம் மாறிடுச்சு

    கரப்பான் பூச்சி ஜனதா தலைவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்ட போது, முதல் ஆளாக கண்டனம் தெரிவித்ததும் ராகுல் காந்தி தான். அமைதியான போராட்டத்தில் தேசிய கொடியை ஏந்துவது குற்றமல்ல என்றும் இளைஞர்களை சிறையில் அடைப்பது கோழைத்தனம் என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார். இதையெல்லாம் பார்க்கும்போது கரப்பான் பூச்சி கட்சியையும் போராட்டத்தில் இணைந்து கொள்ள காங்கிரஸ் முயல்வது தெளிவாக தெரிகிறது.

    English Summary

    Congress is reportedly trying to bring Cockroach Janata Party leaders closer after previously dismissing the group as an AAP B team(காங்கிரஸ் கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்): Congress Reaches Out to Cockroach Janata Party latest news in tamil.