நகை செய்யக் கொடுத்த தங்கம் என்னாச்சு? பிரபல ஜூவல்லர்ஸுக்கு நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

  • டெல்லி: நகை செய்வதற்கு வாடிக்கையாளரிடம் இருந்து பெற்ற 32 கிராம் தங்கத்தைத் திருப்பித் தராமல் இழுத்தடித்த நகைக்கடை உரிமையாளர்களுக்கு, அந்தத் தங்கத்தை உடனடியாக வாடிக்கையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    மேலும், சேவை குறைபாடு காரணமாக வாடிக்கையாளருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

    Advertisement

    வழக்கின் பின்னணி என்ன?*

    இமாச்சலப் பிரதேச மாநிலம் பப்ரோலா பகுதியில் இயங்கி வந்த கபூர் ஜூவல்லர்ஸ் உரிமையாளர்களுடன் ராஜ் குமார் என்பவருக்குக் குடும்ப ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் பழக்கம் இருந்துள்ளது. இதைப் பயன்படுத்தி, கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி, தன்னிடம் இருந்த 32 கிராம் எடையுள்ள இரண்டு பழைய தங்கக் கடாக்களை கபூர் ஜூவல்லர்ஸில் ராஜ் குமார் கொடுத்துள்ளார்.

    அந்தப் பழைய தங்கத்தை உருக்கி, நவீன வடிவமைப்பில் 40 கிராம் எடையில் புதிய கடாக்களைச் செய்து தருமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நகைக்கடை உரிமையாளரும் இரண்டு மாதங்களுக்குள் புதிய நகைகளைத் தயார் செய்து தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால், அதன்பிறகு பலமுறை நேரில் சென்று கேட்டபோதிலும், பல்வேறு காரணங்களைக் கூறி நகையைக் கொடுக்காமல் காலந்தாழ்த்தி வந்துள்ளனர்.

    Advertisement

    உரிமையாளர் மறைவும் தொடர்ந்த ஏமாற்றமும்

    இந்தச் சூழலில், கடைகளை நடத்தி வந்த சஞ்சய் கபூர் என்பவர் 2024-ஆம் ஆண்டு காலமானார். அதன்பின்னர், அவருடைய குடும்பத்தினர் கடையின் நிர்வாகத்தைப் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதையடுத்து, ராஜ் குமார் சஞ்சய் கபூரின் குடும்பத்தினரை அணுகி, புதிய நகையையோ அல்லது தான் கொடுத்த 32 கிராம் தங்கத்தையோ திரும்பத் தருமாறு கேட்டுள்ளார்.

    ஆனாலும், 2025 செப்டம்பர் 29 வரை இந்த விவகாரம் இழுபறியாகவே நீடித்தது. ஒருகட்டத்தில், தங்கத்தைத் தர முடியாது என்றும் புதிய நகைகளைச் செய்து கொடுக்க முடியாது என்றும் நகைக்கடை தரப்பில் வெளிப்படையாக மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ் குமார், தனது தங்கத்தை மீட்டெடுக்கவும், மேலதிக எடைக்கான தொகை, இழப்பீடு மற்றும் வழக்குச் செலவு ஆகியவற்றைக் கோரியும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

    Advertisement

    நகைக்கடை உரிமையாளர்களின் வாதம்

    இந்த வழக்க விசாரணைக்கு வந்தபோது, நகைக்கடை தரப்பில் ஆஜரான வாரிசுகள் ராஜ் குமாரிடமிருந்து தங்கம் எதையும் பெறவில்லை என்றும், அதற்கான மதிப்பீட்டுச் சீட்டோ அல்லது ரசீதோ வழங்கப்படவில்லை என்றும் மறுத்தனர். மேலும், அப்படி ஏதேனும் பரிவர்த்தனை நடந்திருந்தால் அது சஞ்சய் கபூரின் தனிப்பட்ட விவகாரம் என்றும் கூறினர்.

    இதேபோல், இதில் சம்பந்தப்பட்ட மற்றொரு நபர், தான் 1993 முதல் இமாச்சல கதர் தொழில் மண்டலத்தில் பணியாற்றி வருவதாகவும், இந்த நகைக்கடை தொழிலுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார். ராஜ் குமார் பொய்யான கதையைக் கூறி தங்கத்தையும் பணத்தையும் பறிக்க முயல்வதாகவும் குற்றஞ்சாட்டினார்.

    Advertisement

    நுகர்வோர் ஆணையம் அளித்த அதிரடித் தீர்ப்பு

    தலைவர் ஹேமான்ஷு மிஸ்ரா, உறுப்பினர்கள் ஆர்த்தி சூட் மற்றும் நாராயண் தாக்குர் ஆகியோரைக் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது, வாடிக்கையாளர் ராஜ் குமார் தாக்கல் செய்த 'A-1' என்ற ரசீது ஆதாரத்தை ஆய்வு செய்த ஆணையம், 40 கிராம் நகை செய்வதற்காக 32 கிராம் தங்கத்தை அவர் கபூர் ஜூவல்லர்ஸில் ஒப்படைத்தது உண்மை என்பதை உறுதி செய்தது.

    அப்போது நுகர்வோர் ஆணையம் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்ததாவது:

    எந்தப் பரிவர்த்தனையும் நடக்கவில்லை என்ற எதிர்மனுதாரர்களின் வாதம், மனுதாரர் தாக்கல் செய்த ரசீது ஆதாரத்தின் முன் முற்றிலும் பொய்யாகிறது. மறைந்த சஞ்சய் கபூரின் சட்டப்பூர்வ வாரிசுகளாக தொழிலைப் பொறுப்பேற்றுக்கொண்டவர்கள், இதற்கான பொறுப்பிலிருந்து தப்பித்துவிட முடியாது.

    Advertisement

    அதேபோல், வேறு இடத்தில் வேலை பார்ப்பதாகக் கூறி ஒருவர் தப்பித்துக்கொள்ள முடியாது. இது ஒரு குடும்பத் தொழிலாக நடத்தப்பட்டு வந்துள்ளதால், அதில் அவருக்கும் கூட்டாகப் பொறுப்பு உள்ளது. வாடிக்கையாளரின் தங்கத்தைப் பெற்றுக்கொண்டு நகையையும் செய்து தராமல், தங்கத்தையும் திரும்பக் கொடுக்காமல் வைத்திருப்பது கடுமையான சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வணிக நடைமுறை ஆகும்."

    இதையடுத்து, மனுதாரரின் 32 கிராம் தங்கத்தை 60 நாட்களுக்குள் திருப்பித் தர வேண்டும் என்று கபூர் ஜூவல்லர்ஸ் உரிமையாளர்களுக்கு ஆணையம் உத்தரவிட்டது. மேலும், வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.25,000 மற்றும் வழக்குச் செலவாக ரூ.10,000 என மொத்தம் ரூ.35,000 தொகையை வழங்க வேண்டும் என்றும் நுகர்வோர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

    English Summary

    Consumer Court Orders Jeweller to Return 32 Grams of Gold to Customer