“நாடே பற்றி எரியும்!”.. ஞானேஷ் குமாரை உடனே சஸ்பெண்ட் செய்ய கோரிக்கை.. உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு

  • டெல்லி: தலைமை தேர்தல் ஆணையரை தற்காலிகமாக பதவி நீக்கம் செய்ய கோரிய வழக்கில் இன்று பரபர வாதங்கள் முன்வைக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் ஜனநாயகத்தின் அடிப்படையையே பாதிக்கும் வகையில் இருப்பதாகவும், உடனடி இடைக்கால உத்தரவு பிறப்பிக்காவிட்டால் "நாடே பற்றி எரியும்" என்றும் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் வாதிட்டார்.

    Advertisement

    தேர்தல் ஆணையம் தொடர்பாக கடந்த இரு வாரங்களாகவே சர்ச்சை நிலவும் சூழலில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையில், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

    Advertisement

    வழக்கு

    தேர்தல் ஆணையம் என்பது மூன்று உறுப்பினர்களை கொண்ட அமைப்பாகும். தேர்தல் ஆணையத்திற்கு அரசியலமைப்பு மற்றும் சட்டப்படி வழங்கப்பட்ட அதிகாரங்கள் என்பது மொத்தமாக அந்த அமைப்பிற்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மட்டுமே.. தலைமை தேர்தல் ஆணையருக்கு என்று தனியாக அதிகாரம் இல்லை என்பதே வாதம். இதனால் மற்ற தேர்தல் ஆணையர்களின் ஒப்புதல் இல்லாமல் தலைமை தேர்தல் ஆணையர் அதிகாரத்தை தனியாக பயன்படுத்த முடியுமா என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தன.

    மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக எழுந்த புகார்கள் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரப்பட்டது. வாக்காளர் பட்டியல் மற்றும் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்ட விதம் குறித்தும கேள்வி எழுப்பப்பட்டது. மனுதாரர் ராகேஷ் குமார் சிங் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், "தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிட்டதாக நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உணர்கிறார்" என்று வாதிட்டார்.

    Advertisement

    அதிகாரம்

    தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான சட்ட பிரச்சனை ஏற்கனவே பெரிய அமர்வு முன்பு நிலுவையில் இருப்பதாகவும், அதற்கிடையில் சில இடைக்கால நடவடிக்கைகள் அவசியம் என்றும் அவர் கூறினார். மக்கள் தங்களது வாக்குரிமை பாதுகாப்பாக இருக்கிறதா என்ற அச்சத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    அவர் மேலும், "தேர்தல் ஆணையர்களும் தேர்தல் ஆணையமும் இன்று மற்ற எந்த அரசியலமைப்பு அமைப்பையும் விட அதிக அதிகாரம் கொண்டதாக உள்ளனர். பிரதமர் மற்றும் நீதிபதிகளுக்கு கூட தேர்தல் ஆணையத்துக்கு உள்ள சட்ட பாதுகாப்பு இல்லை. தற்போதுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு தலைமை தேர்தல் ஆணையரை இடைக்கால உத்தரவின் மூலம் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.

    Advertisement

    சஸ்பெண்ட் செய்ய வேண்டும்!

    ஜனநாயகத்தின் அடிப்படையையே பாதிக்கக்கூடிய மிக தீவிரமான சூழ்நிலையை நாம் எதிர்கொள்கிறோம். முன்பு தேர்தல்கள் நடத்தப்பட்டபோது தேர்தல் ஆணையத்துக்கு ஒரு மதிப்பு இருந்தது. ஆனால் தற்போது தலைமை தேர்தல் ஆணையர் சட்ட கட்டமைப்புக்கு முற்றிலும் மாறாக செயல்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இடைக்கால உத்தரவு மூலம் அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

    நாடே பற்றி எரியும்

    இருப்பினும், இடைக்கால உத்தரவை பிறப்பிக்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தில் சட்ட விதிமீறல் நடந்துள்ளதா என்பதை முதலில் நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும் என்றும் இதன் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என நீதிபதிகள் கூறினர். இருப்பினும், மீண்டும் தலைமை தேர்தல் ஆணையரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், "இல்லையென்றால் நாடே பற்றி எரியும்" என்று அவர் கூறினார்.

    Advertisement

    இருப்பினும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்ற அமர்வு ஏற்கவில்லை. அதற்கு பதிலாக, மனுக்களில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேர்தல் ஆணையம், ஞானேஷ் குமார் மற்றும் மற்ற இரு தேர்தல் ஆணையர்களிடம் பதில் கோரி நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது. அந்த பதில்களை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

    English Summary

    Supreme Court declined to issue an interim order suspending Chief Election Commissioner Gyanesh Kumar(தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான வழக்கு): Interim Suspension of CEC Gyanesh Kumar case latest news in tamil.