டெல்லி: காவிரி நீர் தமிழகத்திற்கு போதுமான அளவுக்கு கிடைக்கவில்லை. ஏற்கெனவே காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இரண்டும் தமிழகத்திற்கான நீரை வழங்க வேண்டும் உத்தரவிட்டிருக்கிறது. இருப்பினும் நீர் வழங்கப்படாத நிலையில், டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நாளை அவசரமாக கூடுகிறது.
ஆண்டு தோறும் ஜூன் மாதம் டெல்டா குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படும். மேட்டூர் அணை, காவிரி நீரை நம்பிதான் இருக்கிறது. ஆனால், இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை என்று சொல்லி, கர்நாடக அரசு தமிழகத்திற்கான நீரை விடுவிக்கவில்லை.
இது தொடர்பாக காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு மற்றும் ஆணையத்தில் தமிழக அரசு முறையீடு செய்திருந்தது. தமிழகத்தின் பக்கம் நியாயம் இருப்பதால், 4.5 டிஎம்சி தண்ணீரை 15 நாட்களில் திறந்துவிட வேண்டும் என்று கடந்த ஜூலை.30ல் உத்தரவிட்டிருந்தது. ஆனால், கர்நாடகா இதை ஏற்கவில்லை. இப்போதுவரை நமக்கான தண்ணீரை கொடுக்கவிலலை. எனவே இந்த விவகாரத்தை தமிழக அரசு உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. இந்த விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கடந்த ஆக.3ம் தேதி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தது. நீதிமன்றமும் வழக்கை ஆக.13 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தது. வழக்கு விசாரணைக்கு வர இருக்கும் நேரத்தில், அவசரமாக காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நாளை நடைபெறுவது கவனம் பெற்றிருக்கிறது. நாளை மதியம் 3 மணிக்கு, ஆணையத்தின் 55வது கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெறுகிறது. இதில் கடந்த ஜூலை.30 அன்று ஆணையம் பிறப்பித்த உத்தரவ அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உறுதியாக வலியுறத்த இருக்கிறது. கர்நாடக அணைகளின் நிலவரம் கர்நாடகாவின் காவிரி நதியின் கிளை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் கேஆர்எஸ், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளின் மொத்த கொள்ளவு 104.55 டிஎம்சி. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, 4 அணைகளின் நீர் கொள்ளவு 65 டிஎம்சிக்கும் அதிகமாக உயர்த்திருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.