டெல்லி: இன்று தசரா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் ஜூலை 1ம் தேதியில் இருந்து வழங்க வேண்டிய மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு இன்னும் அறிவிக்கப்படவில்லை. பிரதமர் மோடி தலைமையில் சமீபத்தில் நடந்த 2 மத்திய அமைச்சரவை கூட்டங்களிலும் இதுபற்றி எந்த முடிவும் எடுக்கப்படாதது பற்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில் தான் நாளை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி .ள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (Dearness Allowance or DA) ஒவ்வொரு ஆண்டும் 2 முறை உயர்த்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதம் இந்த அகவிலைப்படி உயர்த்தப்பட வேண்டும்.
ஆனால் ஒவ்வொரு முறையும் தாமதமாவதும், அதன்பிறகு அகவிலைப்படி உயர்வு முன்தேதியிட்டு அரியர்ஸ் தொகையுடன் வழங்கப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. 2026ம் ஆண்டுக்கான ஜூலை மாத அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இதுதொடர்பான அறிவிப்பு தசரா பண்டிகைக்கு முன்பு அறிவிக்கப்படும். ஆனால் இன்று தசரா கொண்டாடப்படும் நிலையில் அதுபற்றிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவில்லை. இது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. குறிப்பாக கடந்த 2 புதன்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்த மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் தீபாவளிக்கு முன்பாக அகவிலைப்படி உயரலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான் நாளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது. இதுபற்றி அனைத்திந்திய புதிய பென்ஷன் திட்டத்தின் தலைவர் மஞ்சித்சிங் படேல் கூறுகையில், ''அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு இந்த முறை தாமதமாகி உள்ளது. நாளை (புதன்கிழமை) நடக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது'' என்றார். அதேபோல்அனைத்திந்திய பாதுகாப்ப துறை ஊழியர்களின் கூட்டமைப்பின் செயலாளர் ஸ்ரீகுமாரும் நாளை இதுதொடர்பான அறிவிப்பு வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த அகவிலைப்படி இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் 12 மாத சராசரி சதவீதத்தின் அடிப்படையில் பணவீக்கத்தை பொறுத்து அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தின்படி ஒவ்வொரு 6 மாதத்துக்கும் ஒருமுறை வழங்கப்படும். புரியும்படி கூற வேண்டும் என்றால் நாட்டில் நிலவும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் உயர்த்தப்படும். தற்போது மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 60 சதவீதமாக உள்ளது. இந்த முறை 3 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்த வாய்ப்புள்ளது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும்போது மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 63 சதவீதமாக உயரும்.ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு இடைக்கால மாத ஊதியத்தில் அகவிலைப்படி 60 % ஆக உயர்வு