தேர்தல் ஆணையர் மகள் வழக்கில் லைவ் ஆடியோ முடக்கம்.. அடுத்து வந்த உத்தரவு! வெடிக்கும் பெரிய விவாதம்

  • டெல்லி: போராட்டம் தொடர்பாக டெல்லி பல்கலைக்கழக மாணவி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், கவுதம் புத்த நகர் மாஜிஸ்திரேட் மீது கடுமையான கருத்துகளை அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த விவகாரம் மேல்முறையீடு செய்யப்பட்ட போது, உச்ச நீதிமன்றத்தில் நடந்த சில சம்பவங்கள் பேசுபொருளாகியுள்ளது.

    Advertisement

    மேதா ரூபமுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் விதித்த ரூ.5 லட்சம் இழப்பீடு உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அதே நேரத்தில், மாணவியின் NSA தடுப்புக் காவலை ரத்து செய்த உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு முழுமையான தடை விதிக்கப்படவில்லை என்பதை உச்சநீதிமன்றம் பின்னர் தெளிவுபடுத்தியுள்ளது.

    Advertisement

    டெல்லி மாணவி

    டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாறு துறை மாணவி அக்ரிதி சவுத்ரி. 25 வயதான இவர் நொய்டாவில் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி நடத்திய போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் அவர் மீது NSA எனப்படும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. மாணவி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது பேசுபொருளானது.

    இந்த கைதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், செப்டம்பர் 2ம் தேதி அவரது தடுப்புக் காவலை ரத்து செய்தது. அவரை உடனடியாக விடுவிக்கவும் உத்தரவிட்டது. மேலும், மாணவி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்வதில் தொடர்புடைய அதிகாரிகளிடமிருந்து ரூ.5 லட்சம் இழப்பீட்டை வசூலித்து மாணவிக்கு வழங்கவும் உத்தரவிட்டது. இதில் மாஜிஸ்திரேட் மேதா ரூபமிலிருந்து அவரது சம்பளத்தில் இருந்தும் இந்த தொகையை வசூலிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. மேலும், நொய்டா நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்தும் அலகாபாத் உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தியை பதிவு செய்திருந்தது.

    Advertisement

    மேல்முறையீடு

    இந்த உத்தரவை எதிர்த்து மேதா ரூபமும், உத்தர பிரதேச அரசும் உச்ச நீதிமன்றத்தை அணுகின. மேதா ரூபம் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், உபி அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியும் ஆஜரானார்கள். தடுப்பு காவல் உத்தரவு மாஜிஸ்திரேட் மட்டும் தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவு அல்ல என்றும், போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு தரப்பினரும் இணைந்து பரிசீலித்து எடுத்த முடிவு என்றும் வாதிட்டனர். மேலும், தடுப்பு காவல் உத்தரவை ரத்து செய்வது என்பது வேறு.. அந்த உத்தரவை பிறப்பித்த அதிகாரியை தனிப்பட்ட முறையில் பொறுப்பாக்குவது வேறு என்றும் உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

    Advertisement

    கடந்த செப்டம்பர் 23ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா மற்றும் என். கோடீஸ்வர் சிங் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. பொதுவாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்படும். ஆனால், இந்த வழக்கு விசாரணையின் போது ஒரு கட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் லைவ் ஒளிபரப்பின் ஆடியோ முடக்கப்பட்டது. அதன் பிறகு சற்று நேரத்தில் வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இடைக்கால தடை

    முதலில் வெளியான உத்தரவில், அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டதாக கூறப்பட்டு இருந்தது. இதனால் மாணவியின் தடுப்பு காவலை ரத்து செய்த உத்தரவுக்கும் தடை விதிக்கப்பட்டதாக தோன்றியது. ஆனால் மறுநாள் வெளியான திருத்தப்பட்ட உத்தரவில், உயர் நீதிமன்றத்தின் கடுமையான கருத்துகள், மேதா ரூபமுக்கு எதிரான இழப்பீடு தொடர்பான உத்தரவு ஆகியவை மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளன. அதேநேரம் மாணவி அக்ரிதி சவுத்ரி தேசிய தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படதை ரத்து செய்த தீர்ப்பு நிறுத்தப்படவில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டது.

    Advertisement

    அதாவது மாணவியின் விடுதலை தொடர்பான தீர்ப்பு ரத்து செய்யப்படவில்லை. மாறாக மேதா ரூபமுக்கு எதிரான கடுமையான கருத்துகள் மற்றும், இழப்பீடு தொடர்பான உத்தரவு ஆகியவை ஆகியவைக்கு மட்டுமே இடைக்கால தடை விதிக்கப்பட்டன. இதற்கிடையே இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற விதம் குறித்தும் தற்போது கேள்விகள் எழுந்துள்ளன.

    வழக்கறிஞர்கள் அதிருப்தி

    Lawyers' Association for Constitution என்ற அமைப்பு இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்துக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் எப்போதும் வழக்குகள் சுழற்சி முறையிலேயே நீதிபதிகளுக்கு ஒதுக்கப்படும் நிலையில், மேதா ரூபமின் மனு ரோஸ்டர் நடைமுறையை மீறி குறிப்பிட்ட அமர்வுக்கு ஒதுக்கப்பட்டதாக கூறி கவலை தெரிவித்துள்ளது. மேதா ரூபம், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் மகள் என்பதையும் அந்த அமைப்பு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும், விசாரணையின் போது லைவ் ஆடியோ முடக்கப்பட்டதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

    Advertisement

    குறிப்பாக, ஜூலை 13 முதல் அமலில் இருந்த உச்சநீதிமன்ற ரோஸ்டரில் ஆட்கொணர்வு மனு மற்றும் சட்டவிரோத தடுப்பு காவல் தொடர்பான வழக்குகள் வேறு ஒரு மூத்த அமர்வுகளுக்கு ஒதுக்கப்பட்டு வந்தது. மேலும், நொய்டா தொழிலாளர் போராட்டம் தொடர்பான பிற வழக்குகள் நீதிபதி பி.வி. நாகரத்னா தலைமையிலான அமர்வில் நிலுவையில் இருந்தது. இந்த இரண்டையும் தாண்டி மேதா ரூபமின் மனு இந்த குறிப்பிட்ட அமர்வுக்கு எப்படி ஒதுக்கப்பட்டது.. இதில் எந்த நடைமுறை பின்பற்றப்பட்டது என்பது குறித்தும் விவாதம் எழுந்துள்ளது.

    கரப்பான் பூச்சி கட்சி

    இதற்கிடையே நீதிபதி சதீஷ் சந்திர சர்மா இடம்பெற்ற மற்றொரு முக்கிய வழக்கு தொடர்பாக கரப்பான் பூச்சி கட்சியின் செய்தி தொடர்பாளர் சௌரவ் தாஸ் சில முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. அதாவது முன்பு தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், தலைமை நீதிபதி இருப்பார்கள். அதில் தலைமை நீதிபதிக்கு பதிலாக கேபினட் அமைச்சர் ஒருவரை நியமிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

    இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்த விவகாரத்தை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டுமா என்பது குறித்து நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா மற்றும் தீபங்கர் தத்தா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சதீஷ் சர்மா பெரிய அமர்வுக்கு அனுப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்த நிலையில், தீபங்கர் தத்தா அதற்கு எதிரான கருத்தை தெரிவித்தார். இதையடுத்து இந்த விவகாரம் தலைமை நீதிபதியிடம் சென்றுள்ளது. மிக முக்கியமான வழக்கில் ஒருமித்த தீர்ப்பு வராததால் வழக்கு ஆண்டு கணக்கில் தாமதமாகி இருப்பதாக சௌவர் தாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

    குற்றச்சாட்டு

    கரப்பான் பூச்சி கட்சியினர் சவுரவ் தாஸ் மேலும், "இங்கு முக்கியமான கேள்வி என்னவென்றால்.. நீதிபதியின் குடும்ப உறுப்பினர்கள் அரசு பதவியில் இருக்கும்போது, ​​முக்கிய வழக்குகளில் அவர் பாரபட்சமற்ற மற்றும் நியாயமான நீதியை வழங்குவார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? மேலும், அந்த நீதிபதி இன்னும் இரண்டு மாதங்களில் ஓய்வுபெறவிருக்கிறார். அதேநேரம் பல முக்கிய தீர்ப்பாயங்களில் பல பணியிடங்கள் காலியாக உள்ளதாக பல வழக்கறிஞர்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற அமைப்பு நீதித்துறை மீதான நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.

    நீதிபதிகள் எந்தொரு விஷயத்திலும் பக்க சார்ப்புடன் இருக்கக்கூடாது என்றும் தங்கள் மீதோ அல்லது நீதித்துறையின் மீதோ களங்கம் விளைவிக்கும் எதையும் செய்யக்கூடாது என்றும் நீதிபதிகளுக்கான நடத்தை விதிகள் வலியுறுத்துவதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

    விவாதம் ஏன்

    தலைமை தேர்தல் ஆணையரின் மகள் மேதா ரூபமுக்கு எதிரான ரூ.5 லட்சம் இழப்பீடு மற்றும் அவரை விமர்சிக்கும் கருத்துகள் தொடர்பான உத்தரவு, அந்த மனு உச்சநீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்ட விதம், விசாரணையின்போது ஆடியோ முடக்கப்பட்ட விவகாரம், 2023 தேர்தல் ஆணையர் நியமிக்கப்படும் முறையில் வந்த மாற்றம் என அனைத்துமே வரிசையாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Questions have emerged over how Supreme Court Justice Satish Chandra Sharma handled the case involving Magistrate Medha Roopam (தேர்தல் ஆணையர் மகள் வழக்கு உச்ச நீதிமன்றம்): Supreme court latest news in tamil.