டெல்லி 5 ஸ்டார் ஓட்டல்.. பிரிட்ஜை திறந்ததுமே வாடை.. கிச்சனில் எட்டி பார்த்தால்? அதிகாரி கண்ட காட்சி

  • டெல்லி: டெல்லியின் 5 ஸ்டார் ஓட்டல்கள் ஆடிப்போய் கிடக்கின்றன.. சர்வதேச பிரிக்ஸ் மாநாட்டுக்கு முந்தைய நாள்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில், அதிர்ச்சியூட்டும் பல விஷயங்கள் அம்பலமாகி உள்ளன.. உலக தலைவர்களும் வெளிநாட்டு தூதுவர்களும் வந்து இறங்கவிருக்கும் விஐபி ஹோட்டல்களின் கிச்சன்களுக்குள் நுழைந்தபோது அதிகாரிகளுக்கே பேரதிர்ச்சி காத்திருந்தது.

    Advertisement

    சர்வதேச பிரிக்ஸ் மாநாடு செப்டம்பர் 12, 13 தேதிகளில் நடக்க உள்ளது.. இந்த உலகளாவிய மாநாட்டையொட்டி, சர்வதேச பிரதிநிதிகள் பிரபல ஹோட்டல்களில் தங்கப்போகிறார்கள்.. எனவே நாட்டின் 5 நட்சத்திர ஓட்டல் நிறுவனங்கள் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது..

    Advertisement

    இதையடுத்து, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின்(எப்எஸ்எஸ்ஏஐ) அதிகாரிகள் கடந்த 26ம் தேதி பிரபல ஜேடபிள்யூ மேரியட் மற்றும் அண்டாஸ் டெல்லி ஆகிய ஓட்டல்களில் ஆய்வு மேற்கொண்டனர்

    டெல்லி 5 ஸ்டார் ஓட்டல்

    இதில், அண்டாஸ் டெல்லி ஹோட்டலில் 87 கிலோ எடையுள்ள காலாவதியான இனிப்புகள், கேக் துண்டுகள் மற்றும் பழைய பிரெட் பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக தீயில் அழிக்கப்பட்டன.

    சில பிரெட் பாக்கெட்டுகளில் காலாவதியான தேதியின் மீது புதிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்ததும் தெரியவந்தது. அதேபோல், ஜேடபிள்யூ மேரியட் ஹோட்டலில் அழுகிய தக்காளி, பூஞ்சை பிடித்த ஆப்பிள்கள் மற்றும் முறையான அனுமதி இல்லாத பன்னீர் போன்ற பொருட்கள் சிக்கின. இந்த ஸ்டார் ஓட்டலின் ஃபிரட்ஜை திறந்ததுமே குப்பென வாடை வந்ததாம்.. அழுகி நாற்றமெடுத்த தக்காளிகள், கறுத்து பூஞ்சை காளான் பிடித்த ஆப்பிள்கள், பன்னீர் என குவிந்து கிடந்ததாம். ஃப்ரிட்ஜிலிருந்த ஃப்ரீசருக்குள் கறையான்கள் அரித்துத் தின்று கொண்டிருந்ததாம்

    Advertisement

    கிச்சனுக்குள் கண்ட காட்சி

    அதிலும், கிச்சனுக்குள் நுழைந்தபோது அதற்குமேல் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.. சமையல் செய்து கொண்டிருந்த அடுப்புகளுக்கு பக்கத்திலேயே கரப்பான் பூச்சிகள் படையெடுத்து திரிந்து கொண்டிருந்ததாம்.. .. குட்கா பாக்கெட்டுகள் சிதறிக் கிடந்ததும், பாத்ரூம் பக்கத்திலேயே குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்பட்டு உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததும் அதிகாரிகளைத் தலைசுற்ற வைத்தன.

    சமையலறைகளின் சுவர்கள் பல இடங்களில் பெயர்ந்து விழுந்து காற்றோட்டமோ வெளிச்சமோ இல்லாமல் இருண்ட குகைபோலக் காட்சியளித்திருக்கின்றன.. அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பலமுறை சூடேற்றப்பட்டு ஆபத்தான நிலையை எட்டிய சமையல் எண்ணெய் டின்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாம்.. சைவ மற்றும் அசைவப் பொருட்களை தனித்தனியாக பராமரிக்க வேண்டிய அடிப்படை விதிமுறைகள் கொஞ்சம்கூட மதிக்கப்படவில்லை.

    Advertisement

    தங்கம் வளையல், காப்பு வளையல்

    அதேபோல ஐஸ் கிரீம், பால் பொருட்கள், இறைச்சி, மீன் வகைகள் போன்ற எளிதில் கெட்டுப்போகக்கூடிய உணவுப் பொருட்கள் எப்போதுமே குறிப்பிட்ட குளிரூட்டப்பட்ட சூழலிலேயே வைக்கப்பட வேண்டும். ஆனால், இந்த ஹோட்டல்களில், சரியான குளிரூட்டலில் வைக்காமல் சாதாரண வெப்பநிலையில் வைத்திருந்திருக்கிறார்கள்..

    சமையல் செய்பவர்களோ அதற்கு மேல் அதிர்ச்சியை தந்துள்ளனர்.. கடுமையான நோய்த்தொற்றுடன் அவதிப்படும் தொழிலாளர்களுக்கு லீவு தராமல், தொடர்ந்து சமையல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உணவு பாதுகாப்பிற்கான எந்தவிதமான மெடிக்கல் சர்ட்டிபிகேட்களும் அந்த பணியாளர்களிடம் இல்லை..

    கைகளில் தங்கம் உள்ளிட்ட வளையல்களை அணிந்துகொண்டு சமையல் செய்துள்ளனர். உணவில் அளவுக்கு அதிகமாக செயற்கை நிறமிகளையும் சேர்த்துள்ளனர். 100 கிலோவிற்கும் அதிகமான அளவில் காலாவதியான உணவு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    Advertisement

    FSSAI தலைமை அதிகாரி ஆவேசம்

    இந்த விவகாரம் வெளிவந்ததையடுத்து, FSSAI தலைமை அதிகாரி ரஜித் புன்ஹானி தலைமையில் டெல்லி 5 நட்சத்திர ஹோட்டல்களின் உயரதிகாரிகள் பங்கேற்ற அவசரக் கூட்டம் நடந்தது. பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு வெளிநாட்டுத் தலைவர்கள் வரவிருப்பதால், உணவு பாதுகாப்பு விஷயத்தில் எந்தச் சமரசமும் செய்ய முடியாது என்றும், விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

    இதைத் தொடர்ந்து, டெல்லி மாநகராட்சி அதிகாரிகளும் அனைத்து ஹோட்டல்களிலும் சோதனைகளை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.. தவறு செய்த ஹோட்டல்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதுடன், அடுத்த ஒரு மாதத்திற்குள் மீண்டும் சோதனை நடத்தப்படும் என்றும், அப்போது இந்த தவறுகளை திருத்தம் செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Delhi 5 Star Hotel Kitchen.. Officials Find Something Shocking During Surprise Inspection