டெல்லி: டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில் இன்று பிற்பகல் 6 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் குறைந்தது 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், இடிபாடுகளுக்கு அடியில் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இதுவரை 9 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் மேலும் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்பதை மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தலைநகர் டெல்லியில் உள்ள டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திற்கு அருகே அமைந்துள்ள சத்யா நிகேதன் பகுதியில் மாணவர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். அங்குள்ள ஒரு கட்டிடம் தான் திடீரென யாருமே எதிர்பாராத வகையில் இடிந்து விழுந்துள்ளது. அந்த கட்டிடம் 75 பேர் தங்கம் வசதி கொண்ட பேயிங் கெஸ்ட் தங்கும் விடுதியாக செயல்பட்டு வந்துள்ளது. கட்டிடத்தின் உரிமையாளர் குருகிராமில் வசித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டிடம் சுமார் 40 முதல் 50 ஆண்டுகள் பழமையானது என்றும் அதில் ஒரு அடித்தளம் மற்றும் அதற்கு மேல் 5 தளங்கள் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கட்டிடத்தின் அடித்தளத்தில் பழுதுபார்க்கும் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் கூறுகையில், "முதற்கட்ட விசாரணையில், இது 40-50 ஆண்டுகள் பழமையான கட்டிடம் என்பதும், அடித்தளத்துடன் 5 மேல் தளங்களை கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது. இது PG தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. சம்பவம் நடந்தபோது அடித்தளத்தில் பழுதுபார்க்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது" என்றனர். கட்டிடம் இடிந்து விழுந்த தகவல் கிடைத்ததும் டெல்லி போலீசார், தேசிய பேரிடர் மீட்புப் படை, டெல்லி தீயணைப்பு துறை மற்றும் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. தீயணைப்பு வாகனங்களும் விரைந்தன. மீட்பு பணிகள் ஆரம்பித்து துரிதமாக நடைபெற்றது. கட்டிடம் இடிந்து விழுந்தபோது சுமார் 50 மாணவர்கள் அதற்குள் இருந்திருக்கலாம் என நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலான மாணவர்கள் தங்களது அறைகளிலேயே இருந்ததாகவும் அவர் கூறினார். இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உதவி கேட்டு பலர் கதறும் சத்தம் கேட்டதாக சம்பவ இடத்தில் இருப்போர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கட்டிடம் இடிந்து விழுந்த பகுதியில் ஏராளமானோர் திரண்டனர். மீட்புப் படையினர் மற்றும் இயந்திரங்கள் முழுமையாக வருவதற்கு முன்பே உள்ளூர் மக்கள் தங்களால் முடிந்தவரை மீட்பு பணிகளில் இறங்கினர். அப்படி இணையத்தில் பரவும் வீடியோ ஒன்றில்.. கான்கிரீட் தகட்டுக்கு அடியில் ஒருவர் சிக்கியிருந்ததும், அவரை மீட்க பலர் அதை தூக்க முயன்றதும் காணப்பட்டது. இந்த விபத்தை தொடர்ந்து குறைந்தது 12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இடிபாடுகளை அகற்றுவதற்காக பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கான்கிரீட் தகடுகள் மற்றும் இரும்புக் கம்பிகளை அகற்ற கூடுதல் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு வருகின்றன. தீயணைப்பு படையினருடன் இணைந்து பணியாற்றப் பேரிடர் மீட்பு குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளன. கூட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். டெல்லி முதல்வர் ரேகா குப்தா, கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். அவர் மேலும், "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள கட்டிடம் காலி செய்யப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக மீட்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக உதவிகளை வழங்கவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார்.இடிந்து விழுந்த கட்டிடம்
மீட்பு பணிகள்
கதறும் சத்தம்
டெல்லி முதல்வர் ரேகா குப்தா