டெல்லி கட்டிட விபத்து.. விடிய விடிய தொடரும் மீட்பு பணி! 6 பேர் பலி.. மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் பணி

  • டெல்லி: டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. விடிய விடிய மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் இன்னும் சிலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனால் மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் பணி தொடந்து வருகிறது.

    Advertisement

    தலைநகர் டெல்லியின் தெற்கு பகுதியில் சத்யா நிகேதன் பகுதி அமைந்துள்ளது. டெல்லியில் மையத்தில் உள்ள இந்த இடம் நெரிசல் மிக்க இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த பகுதியில் அமைந்துள்ள பிஜி கட்டிடங்களில் மாணவர்கள் பலரும் தங்கி பயின்று வருகிறார்கள். அந்த வகையில், நானக்புரா குருத்வாரா பகுதியில் அமைந்து இருந்த 6 மாடி கட்டிடம் ஒன்று நேற்று மாலை இடிந்து விழுந்தது.

    Advertisement

    இந்த கட்டிடத்தில், கேரளா, ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டவர்கள் தங்கியிருந்தாக சொல்லப்படுகிறது. 50 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடத்தில் அடிப்பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இது ஒருபக்கம் இருக்க டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இந்த சூழலில் நேற்று கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.

    கட்டிடத்தில் இருந்த மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்த தீ அணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று பிற்பகல் தொடங்கிய மீட்பு பணிகள் விடிய விடிய தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது வரை 6 பேர் பலியாகியுள்ள நிலையில் மேலும் சிலர் சிக்கியிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. காயத்துடன் மீட்கப்பட்ட மாணவர்கள் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    Advertisement

    கட்டிட இடிபாடுகளுக்குள் உயிருடன் யாரும் சிக்கியுள்ளார்களா? என கண்டறிய மோப்ப நாய் உதவியுடன் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டிட விபத்து தொடர்பாக நீதி விசாரணைக்கு டெல்லி முதல்வர் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளார். கட்டிடத்தின் உரிமையாளர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் அஞ்சப்படுகிறது.

    English Summary

    Delhi Building Collapse: The death toll from the collapse of a multi-story residential building in Delhi has risen to six. As rescue operations continue through the night, it is believed that others may still be trapped under the debris; consequently, the search is proceeding with the assistance of sniffer dogs.