டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் டெல்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில் இன்று மாலை 6.30 மணியுடன் அனைத்துகடைகள், உணவகங்கள், நிறுவனங்களை மூட வேண்டும் என்று நியூடெல்லி வர்த்தகர் சங்கம் சார்பில் முக்கிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. விரும்பதகாத சூழலை தவிர்க்கவும், சொத்து சேதத்தை தவிர்க்கவும் இதனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. திடீரென்று வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பால் டெல்லியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் வர்த்தகர் கூட்டமைப்பு சார்பில் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், '' டெல்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியை சுற்றி உள்ள அலுவலகங்கள், உணவகங்கள் உள்பட அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்கள் இன்று மாலை 6.30 மணிக்கள் மூட வேண்டும். தொலைபேசி வழியாக நியூடெல்லி வர்த்தகர் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் துணை தலைவர் இந்த அறிவுரையை வழங்கி உள்ளனர். எந்தவொரு விரும்பாதகாத சூழ்நிலையை தவிர்க்கவும், சொத்து சேதம் மற்றும் காயங்களில் இருந்து காப்பாற்றி கெகள்ளவும் அனைத்து நிறுவன உரிமையாளர்கள் மேறகண்ட அறிவுறுத்தல்களுக்கு ஒத்துழைத்து கண்டிப்பாக இதனை பின்பற்ற வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி நியூடெல்லி வர்த்தகர் சங்கத்தின் தலைவர் அதுல் பார்கவாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ''கன்னாட் பிளேஸ் பகுதியில் பல ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வருகின்றனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், எங்களின் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்காகவும் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது'' என்றார். இந்த கன்னாட் பிளேஸ் என்பது ஜந்தர் மந்தர் பக்கத்தில் அமைந்துள்ளது. இதனால் இந்த திடீர் அறிவிப்பு டெல்லியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 25 நாட்களுக்காக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போதைய இந்த அறிவிப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. அதோடு இன்று இரவு ஏதாவது அசம்பாவிதம் நடைபெற வாய்ப்புள்ளதா? என்ற கேள்விகளையும் எழுப்பி உள்ளது. இதுபற்றி ஆம்ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும் சந்தேகம் கிளப்பி உள்ளார்.இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ''கன்னாட் பிளேஸ் பகுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக மாலை 6.30 மணிக்குள் அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு மீண்டும் ஜந்தர் மந்தரில் இன்று மாணவர்கள் மீது தடியடி நடத்த உள்ளதா?'' என்று கேள்வியை எழுப்பி உள்ளார். இதனால் டெல்லியில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.