படிச்சு படிச்சு சொல்லியும் கேட்கலையே.. நெஞ்சில் பாய்ந்த தீபாவளி ராக்கெட்.. பறிபோன சிறுவனின் உயிர்

  • டெல்லி: தீபாவளி கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடித்த 10 வயது சிறுவன், ராக்கெட் மார்பில் பாய்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் டெல்லியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படாததால்தான் தங்கள் மகன் உயிரிழந்ததாக சிறுவனின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

    Advertisement

    நேற்று ஞாற்றுக்கிழமை நாடு முழுக்க தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர். இதற்கிடையே சில இடங்களில் பட்டாசு காரணமாக விபத்துகள் நடந்தன. அப்படி மோசமான சம்பவம் தான் இப்போது டெல்லியில் நடந்துள்ளது.

    Advertisement

    பட்டாசு

    டெல்லியின் நரேலா பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ரிஷி என்ற 10 வயது சிறுவன் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடி பட்டாசு வெடித்து கொண்டிருந்தான். அப்போது அவன் வானில் சீறி பாயும் ராக்கெட் பட்டாசை வெடித்துள்ளான்.

    ஆனால், அந்த ராக்கெட் வானத்தை நோக்கி செல்லாமல் எதிர்பாராத விதமாக சிறுவனின் மார்பு பகுதியில் வந்து மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த ரிஷியை உடனடியாக நரேலாவில் உள்ள சத்யவாடி ராஜா ஹரிஷ் சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    குற்றச்சாட்டு

    மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ரிஷி உயிருடன் இருந்ததாகவும், ஆனால் மருத்துவர்கள் உரிய அவசர சிகிச்சை அளிக்கவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக சிறுவனின் மூத்த சகோதரர் மோகித் கூறுகையில், "அவனுக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டது. அது தெரிந்தும் மருத்துவர்கள் வேகமாக வந்து சிகிச்சை அளிக்கவில்லை. மெதுவாக நடந்து வந்து எனது சகோதரனை பார்த்தார்கள். அவரது மார்பை மட்டும் அழுத்தினார்கள்" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

    மருத்துவமனை சிறுவன் உயிரிழந்துவிட்டதாக அறிவித்ததும், அங்கு வந்திருந்த அவரது தந்தை அதிர்ச்சியில் மயங்கி விழுந்துள்ளார். அப்போது தந்தையை பார்த்து கொள்வதில் மோகித் கவனம் செலுத்திய நிலையில், ரிஷியின் உடல் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது சகோதரனை காப்பாற்றியிருக்க முடியும் என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

    Advertisement

    ரிஷியின் தாயார் அஞ்சலியும் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "ரிஷி ஜாலியாகவே பட்டாசு வெடித்து கொண்டு இருந்தான். ஒரு ராக்கெட் திடீரென மார்பில் மோதியது. ஆனால், அப்போதும் அவன் மூச்சுவிட்டு தான் கொண்டிருந்தான். அதனால்தான் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். ஆனால், அங்கு அவனுக்கு முறையாகச் சிகிச்சை அளிக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

    டெல்லி போலீஸ்

    இதற்கிடையே தீபாவளி நாளில் டெல்லி தீயணைப்புத் துறைக்கு மொத்தம் 257 அவசர அழைப்புகள் வந்துள்ளன. இதில் 214 அழைப்புகள் தீ விபத்துகள் தொடர்பானவை. அவற்றில் 24 அழைப்புகள் பட்டாசுகளால் ஏற்பட்ட தீ விபத்துகள் தொடர்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலான நேரத்தில்தான் அதிகபட்சமாக 85 அவசர அழைப்புகள் வந்துள்ளன. அதேபோல் இரவு 10 மணி முதல் நள்ளிரவு வரை மேலும் 61 அழைப்புகள் வந்துள்ளன.

    Advertisement

    கவனம் தேவை

    ராக்கெட் என்று இல்லை.. எந்தவொரு பட்டாசாக இருந்தாலும் வெடிக்கும் போது ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் நிச்சயம் உடன் இருக்க வேண்டும் என பல முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும், அதையும் தாண்டி முறையான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாததாலே இதுபோன்ற விபத்துகள் நடக்கிறது.

    English Summary

    A 10-year-old boy named Rishi died in Delhi after a rocket firecracker struck his chest during Diwali celebrations(தீபாவளி கொண்டாட்டத்தின் போது மோசமான விபத்து): Diwali Tragedy latest news in tamil.