டெல்லி: சந்தேகம் நுழைந்துவிட்டால்.. குடும்பத்திற்குள் நிம்மதி இருக்குமா? கணவன் மீது மனைவிக்கு ஏற்பட்ட சந்தேகம், நாளுக்கு நாள் அந்த குடும்பத்தில் பிரச்சனையை பெரிதாக்கி வந்துள்ளது.. குடும்பத்தினர் சமாதானப்படுத்தி மீண்டும் மீண்டும் தம்பதியை ஒன்றாக சேர்த்து வைத்திருக்கிறார்கள்.. ஆனால், வீட்டுக்குள் ஏற்கெனவே நுழைந்திருந்த அந்த சந்தேகம் அத்தனை சீக்கிரம் விட்டுவிடுமா???
டெல்லி சுந்தர் நக்ரி பகுதியில் வசித்து வருபவர் மஜீத் ஹுசைன். 35 வயதாகிறது.. திருமணமானவர்.. 3 குழந்தைகள் இந்த தம்பதிக்கு உண்டு.. ஆனால் இவர் மீது, மனைவிக்கு எப்போதுமே சந்தேகம் இருந்து கொண்டேயிருக்குமாம்..
3 குழந்தைகளுக்குத் தாயான அந்தப் பெண், தனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் ரகசியத் தொடர்பு இருப்பதாக நம்பியுள்ளார்.. இந்த ச்ந்தேகம்தான், தம்பதி இடையே தினமும் புயலை கிளப்பி வந்தது. கடந்த 15 நாட்களுக்கு முன்புகூட தகராறு ஏற்பட்டுள்ளது.. உடனே கோபித்துக் கொண்ட மனைவி, தனது 3 குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு லோனியில் உள்ள அம்மா வீட்டிற்கு சென்றார். அங்கிருந்தும் ஓயாமல் போனை போட்டு, கணவனை தொடர்ந்து கேள்வி கேட்டு துளைத்தெடுத்துள்ளார். இறுதியில், மஜீத் ஹுசைனும் அவரது தந்தையும் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தி மனைவியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். 4 நாட்கள் முன்புதான் கணவர் வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் 2 நாட்களுக்கு முன்பு மறுபடியும் தகராறை ஆரம்பித்து விட்டார். இரவு 11 மணிக்கு, யார் அந்த கள்ளக்காதலி என்று கேட்டு, தகராறு செய்துள்ளார்.. மனைவியின் ஓயாத குற்றச்சாட்டுகளால் ஆத்திரமடைந்த மஜீத் ஹுசைன், வீட்டில் இருந்த ஷேவிங் பிளேடை எடுத்து மனைவியை வெட்டினார்.. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மனைவியின் முகம், வாய், தொண்டை மற்றும் கழுத்துப் பகுதிகளில் பிளேடால் சரமாரியாக வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் வலியால் அந்த பெண் அலறி துடித்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெண்ணை உடனடியாக மீட்டு, டெல்லி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது நிலைமை மிகவும் சீரியஸாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த நந்த் நக்ரி காவல் நிலைய போலீசார், மருத்துவமனைக்கு விரைந்து சென்று பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றனர். அதனடிப்படையில், மஜீத் ஹுசைன் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 109-ன் கீழ் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, அவரை அதிரடியாகக் கைது செய்தனர். கைதான மஜீத் ஹுசைன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டாராம்.. இதையடுத்து, இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஷேவிங் பிளேடை தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி சொல்லும்போது, "மஜீத் ஹுசைன் மீது இதுவரை எந்த குற்ற பின்னணியும் இல்லை.. ஆனால், உண்மையிலேயே கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததா அல்லது வெறும் சந்தேகத்தால் எழுந்த மோதலா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார். 3 குழந்தைகளுடன் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்குச் சென்ற மனைவியை, கணவரும் மாமனாரும் சமாதானப்படுத்தி மீண்டும் அழைத்து வந்திருக்கிறார்கள்.. ஆனால், வீட்டுக்கு திரும்பிய 2 நாட்களிலேயே அதே கள்ளத்தொடர்பு சந்தேகம் தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டு, இறுதியில் கணவனே ஷேவிங் பிளேடால் மனைவியை தாக்கிய சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.3 குழந்தைகளுக்குத் தாய்
துளைத்தெடுத்த சந்தேகம்
டெல்லி போலீஸ் விசாரணை