டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தின் போது, போராட்டக்காரர்களை தடுக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு பொது போக்குவரத்தை முடக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவை மீறி.. டெல்லியில் பல மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. எனவே நீதிமன்ற அவமதிப்பு குறித்து மத்திய அரசுக்கு நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளது முதற்கட்டமாக உறுதியாகியுள்ளதாக குறிப்பிட்டு, இந்த வழக்கில் அக்டோபர் 13க்குள் விளக்க அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் டெல்லியில் அக்.10 அன்று பெரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இதையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லியில் உள்ள 57 மெட்ரோ ரயில் நிலையங்களை மூடவும், ரயில்களை ரத்து செய்யவும் அதிகாரிகள் திட்டமிட்டனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அக்.9 அன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது "பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மெட்ரோ மற்றும் ரயில் சேவைககளை முழுமையாக மூடக்கூடாது. கட்டுப்படுத்தப்பட்ட முறையில் ரயில்களை இயக்க வேண்டும்" என்று உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த தெளிவான உத்தரவு இருந்தபோதும், அக்.9 இரவு தொடங்கி அக்.10 மாலை வரை டெல்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் முழுமையாக மூடப்பட்டன. ரயில்களும் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டன. நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் திட்டமிட்டு மீறிவிட்டதாக கூறி வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார். இந்த அவமதிப்பு மனுவை நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று அவசர வழக்காக எடுத்துக்கொண்டு சிறப்பு விசாரணையை நடத்தியது. விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மீறியதற்கான முதற்கட்ட முகாந்திரம் இருப்பதாக நீதிபதிகள் ஒப்புக்கொண்டனர். எனவே நீதிமன்ற அவமதிப்பு காரணமாக, மத்திய உள்துறை அமைச்சக செயலாளரான கோவிந்த் மோகன் ஐஏஎஸ், டெல்லி காவல்துறை ஆணையர் அனுராக் குமார், டெல்லி மெட்ரோ ரயில் கழகத் தலைவர் டி.தாரா ஐஏஎஸ் என 3 உயர் அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் உங்கள் மீது எடுக்கப்படக் கூடாது என்பதற்கான காரணங்களை விளக்கி அக்.13க்குள் உரிய விளக்க பிரமாண பத்திரத்தையும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியதற்கான இணக்க அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்த உத்தரவு டெல்லி மற்றும் மத்திய அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.நீதிமன்ற உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு
ஒப்புக்கொண்ட உச்சநீதிமன்றம்
மத்திய அரசு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்