நாங்கள் போலீஸ்.. கேஸ் போடுவோம்!” 17 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம்.. ஒரே வாரத்தில் 4வது கொடூரம்

  • டெல்லி: தென்கிழக்கு டெல்லியில் உள்ள அஸ்தா குஞ்ச் பூங்காவில் 17 வயது சிறுமியை சிலர் பலாத்காரம் செய்துள்ளனர். போலீஸ் அதிகாரிகள் என கூறி கொண்டு, 3 பேர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த ஒரே வாரத்தில் பதிவாகும் 4வது மைனர்கள் பலாத்காரம் இதுவாகும்! இது தலைநகர் டெல்லியின் சட்ட ஒழுங்கு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

    இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளை குறிவைத்து சில மோசமான அரக்கன்கள் அத்துமீறி வருகிறார்கள். அப்படியொரு மோசமான சம்பவம் இப்போது நடந்துள்ளது. தென்கிழக்கு டெல்லியில் உள்ள அஸ்தா குஞ்ச் பூங்காவில் 17 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 21-ம் தேதி இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.

    பலாத்காரம்

    அன்றைய தினம் 17 வயது சிறுமி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பார்க் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சிலர் தங்களை போலீசார் என கூறியுள்ளனர். இருவரையும் மிரட்டிய அவர்கள், 17 வயது ஆண் நண்பரையும் தாக்கியுள்ளனர். மேலும், அந்த சிறுமியையும் மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். இந்த வழக்கில் அசிப் (31), ஹேமந்த் (31), அவரது சகோதரர் முகேஷ் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    துக்ளகாபாத் பகுதியை சேர்ந்த அசிப் ஸ்ரீநிவாஸ்புரி மார்க்கெட்டில் வெங்காய மொத்த வியாபாரம் செய்து வருகிறார். ஹேமந்த் சேகத் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கிறாராம். அவரது சகோதரர் முகேஷ் ஹரியானாவின் பால்வால் பகுதியை சேர்ந்த B.Sc. மாணவர். இருவரும் ஸ்ரீநிவாஸ்புரியில் வசித்து வருகின்றனர்.

    என்ன நடந்தது!

    ஃபரிதாபாத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு செப்டம்பர் 21ம் தேதி பிறந்தநாள். தனது பாய் பிரண்ட்டை சந்திக்க அவர் தென்கிழக்கு டெல்லிக்கு வந்துள்ளார். இருவரும் முதலில் காளிகாஜி கோயிலுக்கு சென்றுவிட்டு, பின்னர் அஸ்தா குஞ்ச் பூங்காவுக்குள் சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த 3 பேரும் தங்களை போலீசார் என கூறியுள்ளனர். சிறுமியும் அவரது நண்பரும் சிறார்கள் என்றும் அவர்கள் ஏதோ தவறு செய்திருப்பதாகவும் வழக்குப் பதிவு செய்ய போவதாக மிரட்டியுள்ளனர். சட்டம் நடவடிக்கை பாயும் அது இது என குழப்பும் வகையில் பேசி இருவரையும் மிரட்டியதாக தெரிகிறது.

    பாய் பிரண்ட்டை தாக்கிய அவர்கள், பின்னர் சிறுமியை தனிமையான பகுதிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமியை மூவரும் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அசிப் துப்பாக்கி மற்றும் கத்தியைக் காட்டி சிறுமியை மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    போலீஸ் விசாரணை

    இரவு 8.45 மணியளவில் சிறுமி உதவி கேட்டு கால் செய்ததை தொடர்ந்து, அமர் காலனி போலீசார் அஸ்தா குஞ்ச் பூங்காவுக்குச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியும் அவரது நண்பரும் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். சிறுமி பின்னர் எய்ஸ்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு மீண்டும் சென்ற போலீசார் ஆய்வு செய்து, தேவையான தடயங்களை சேகரித்துள்ளனர். போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதிகரிக்கும் பலாத்காரம்

    டெல்லியில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. கடந்த செப்டம்பர் 10ம் தேதி ஸ்வரூப் நகரில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.. செப்டம்பர் 16-ம் தேதி சதர் பஜார் சென்ற சிறுமி கடைக்குள் வைத்தே பலாத்காரம் செய்யப்பட்டார். செப்டம்பர் 21-ம் தேதி கிஷன்கஞ்சில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மற்றொரு கொடூரம் நடந்துள்ளது.

    இரண்டு வரங்களில் மட்டும் சிறார்களை குறிவைத்து 4 பலாத்கார சம்பவங்கள் நடந்துவிட்டன. இது தலைநகர் டெல்லியில் சட்ட ஒழுங்கு மற்றும் பெண்கள்- குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாகவும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

    English Summary

    A 17-year-old girl was allegedly assaulted by three men who posed as police personnel at Astha Kunj Park in southeast Delhi(டெல்லி சிறுமி பலாத்கார வழக்கு): Delhi Minor assault Case latest news in tamil.