டெல்லி: நீட் முறைகேடுகள் தொடர்பாக மாணவர் அமைப்பினர் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று முதல்முறையாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் இது தொடர்பாக போராட்டத்தில் இறங்கினர். ஆனால், ராகுல் காந்தி களத்திற்கு வந்த பிறகு, இது மாணவர் போராட்டம் என்பதில் இருந்து காங்கிரஸ் vs பாஜக என்ற அரசியல் போராட்டமாக மாற ஆரம்பித்துள்ளது.
நீட் முறைகேடுகள் தொடர்பாக கரப்பான் பூச்சி கட்சி சார்பில் டெல்லியில் சில வாரங்களாகவே போராட்டம் தொடர்ந்தது. கடந்த திங்கள்கிழமை மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி சென்ற போது, திடீரென போலீசார் தடியடி நடத்தினர். இதில் பல நூறு மாணவர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கடுமையான கண்டங்களை பதிவு செய்தனர்.
இந்த சூழலில் தான் நேற்று எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியும் களத்தில் இறங்கினார். ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் இணைந்து டெல்லியில் உள்ள பிரதமர் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் நீண்ட போராட்டத்திற்கு பிறகு கைது செய்தனர். அப்போது ராகுல் காந்திக்கு மூக்கில் இருந்து ரத்தம் கூட சொட்டியது. இது நாடு முழுக்க பெரும் பரபரப்பை கிளப்பியது. அதேநேரம் மாணவர் போராட்டமானது ராகுல் காந்தி வந்த பிறகு காங்கிரஸ் vs பாஜக என்று மாறிவிட்டது. அதாவது போராட்டம் நடத்தியதியதற்கு எதிராக ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது பாஜக! அதாவது பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் முன்பு ராகுல் காந்தி போராட்டம் நடத்தியதற்கு பதிலடியாக, நாடு முழுவதும் காங்கிரஸ் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், நீட் விவகாரம் தொடர்பான அரசியல் மோதல் நாடாளுமன்றத்திலும், வெளி அரசியல் களத்திலும் மேலும் சூடுபிடித்துள்ளது. இன்றைய தினம் அனைத்து மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகங்கள் முன்பு பாஜக ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளது. பிரதமரின் இல்லம் முன்பு போராட்டம் நடத்தி சட்ட ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க ராகுல் காந்தி முயன்றதாகவும், பிரதமரின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் செயல்பட்டதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க நீட் கேள்வித்தாள் லீக் விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் ராகுல் காந்தி, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம் தர்மேந்திர பிரதான் ராஜினாமா தொடர்பாக பாஜக வாய் திறக்க மறுக்கிறது. ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்த நிலையில், உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் போராட்டத்தில் கலந்து கொண்டார். அதேபோல தமிழ்நாட்டில் இருந்து திமுக சார்பில் ஆ ராசா போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்தார். அதேநேரம் ராகுல் காந்தி களத்திற்கு வந்த பிறகு நிலைமை மாறிவிட்டது. ராகுல் களத்திற்கு வந்தபோதே ஆம் ஆத்மி அதை எதிர்த்தது. மாணவர் போராட்டத்தை ராகுல் திசை திருப்ப பார்ப்பதாக சாடியிருந்தது. இப்போது ஆம் ஆத்மி எச்சரித்தது போலவே மாணவர் போராட்டம் என்பது மெல்ல பாஜக vs காங்கிரஸ் என மெல்ல மாற ஆரம்பித்துள்ளது.ராகுல் காந்தி
மாறிய களம்
தர்மேந்திர பிரதான்
பாஜக vs காங்கிரஸ்