டெல்லி: நீட் வினாத்தாள் லீக் விவகாரம் தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது தாக்கப்பட்ட டெல்லி போலீசாரின் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது போராட்டத்தில் சில வன்முறையாளர்கள் சேர்ந்து போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாக வேதனை தெரிவித்த அவர்கள், இது தொடர்பாக எந்தவொரு அரசியல் தலைவரும் பேசுவதில்லை என்றும் குற்றஞ்சாட்டினர்.
நீட் போராட்டத்தின் போது போராடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டுகளை வீசியது சர்ச்சையானது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியும் இது குறித்த கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இதற்கிடையே போராட்டத்தின் போது 118 காவலர்கள் காயமடைந்ததாக கூறப்படும் நிலையில், அவர்களின் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். தங்களது குடும்பத்தினர் வெறும் கடமையை மட்டுமே செய்ததாகவும், ஆனால் அவர்கள் தாக்கப்பட்டது மட்டுமின்றி, சமூக வலைத்தளங்களில் குற்றவாளிகளை போல சித்தரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். இவை அனைத்தும் தங்களுக்கு வேதனையளித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் அதிகாரியின் குடும்பத்தினர் கூறுகையில், "ஒரு போலீஸ் யூனிபார்ம் பின்னால் ஒரு அதிகாரி மட்டுமல்ல.. அவருக்காக காத்திருக்கும் தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் என ஒரு குடும்பமே இருக்கிறது. அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவார்களா என்ற பயத்தில்தான் ஒவ்வொரு நாளும் நாங்கள் வாழ்கிறோம். என் தந்தை டெல்லி போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார். அதற்கு முன்பு இந்திய கடற்படையில் கமாண்டோவாகவும் இருந்துள்ளார். ஜந்தர் மந்தர் போராட்டத்தின் பாதுகாப்புப் பணியில் இருந்தார். ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வந்தபோது, 'இது மாணவர் போராட்டம் போல் தெரியவில்லை. சமூக விரோதிகளும் இதில் கலந்திருக்கிறார்கள்' என்று கூறுவார். கடந்த ஜூலை 25ம் தேதி போராட்ட களத்தில் இருந்த ஒரு கும்பல் என் தந்தையை இழுத்து சென்று தாக்கியது. இதில் அவர் மயக்கமடைந்தார். மருத்துவமனையில் பல மணி நேர சிகிச்சைக்கு பிறகு இரவு 10 மணிக்கு தான் அவரை வீட்டிற்கு அழைத்து வந்தனர். அவரது யூனிபார்ம் முழுவதும் ரத்தமாக இருந்தது. தலையில் நான்கு தையல்கள் போடப்பட்டிருந்தன. ஆனாலும், இது சாதாரண காயம் தான் என அவர் எங்களை சமாதானப்படுத்தினார். என் தந்தையை தாக்கியவர்கள் பின்னர் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று, போலீசாருக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததை அறிந்தபோது மிகவும் வேதனையாக இருந்தது. சமூக வலைத்தளங்களில் என் தந்தையை குற்றவாளி போல சித்தரித்தனர். அதனால் நானும் என் தந்தைக்கு நீதி கேட்க வேண்டும் என்று முடிவு செய்தேன்" என்றார். 33 ஆண்டுகளாக போலீசில் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளரின் மனைவி சீமா கூறுகையில், "ஜூலை 20ம் தேதி என் கணவர் வழக்கம்போல் டிபன் எடுத்து கொண்டு வேலைக்கு போய்விட்டார். காலை 11 மணிக்கு பேசியபோது, போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி செல்வதாக கூறினார். ஆனால், மாலை 7 மணிக்கு தொடர்பு கொண்டபோது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்த சிலர் பூந்தொட்டிகள், கற்கள், செருப்புகள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் மீது வீசி தாக்கினர். என் கணவருக்கு வழங்கப்பட்டிருந்த ஹெல்மெட் முழுமையாக உடைந்து போயிருந்தது. அந்த ஹெல்மெட் இல்லையென்றால், இன்று அவர் உயிருடன் இருந்திருக்க மாட்டார். இதை நினைத்தாலே எனது உடல் நடுங்குகிறது. மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினார்கள் என்பதை மட்டும் சிலர் திரும்ப திரும்ப பேசுகிறார்கள். ஆனால் போலீசார் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்து யாரும் பேசவில்லை. எங்களின் குரலையும் அரசியல் தலைவர்கள் கேட்க வேண்டும். இந்த விஷயத்தை நாடாளுமன்றத்திலும் எழுப்ப வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். அதேபோல உதவி காவல் ஆணையரின் மகன் லக்ஷ்யா சிங் பிஷ்ட் கூறுகையில், "என் தந்தையின் தலையில் நான்கு தையல்கள் போடப்பட்டிருந்த போட்டோவை பார்த்தபோது உடைந்துவிட்டேன். வீட்டிற்கு வந்த அவர், 'இது மாணவர்கள் மட்டுமே நடத்திய போராட்டம் இல்லை. ரவுடிகளும், வன்முறையாளர்களும் இதில் கலந்து கொண்டு கலவரத்தை ஏற்படுத்தினர்' என்று கூறினார்" என்றார்.டெல்லி போலீசார்
வேதனை
யூனிபார்ம் முழுக்க ரத்தம்
உடம்பு நடுங்குகிறது!
வன்முறை